February 6, 2009

வெட்கித் தலை குனிகிறேன்

‘‘இலங்கையின் என்ன தான் நடக்கிறது?’’
மக்களிடம் பல நூறு யூகங்களுடன் உலவும் இந்த கேள்விகள் போதும். இலங்கை பிரச்னையில் தமிழக ஊடகங்களின் நிலையை எடுத்துரைக்க. இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களை போல, ஊடகங்களும் மாறுபட்ட, தெளிவற்ற நிலையை பின்பற்றுகிறது. அரசியல் கட்சிக்கும், தலைவர்களுக்கும் இதில் அரசியல் லாபங்கள் நிறைய. ஆனால், ஊடகங்களுக்கு? புருவம் உயர்த்தும் இந்த கேள்விக்கு யாரிடமும் பதில்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு வேறு வகையிலான லாபங்கள் உள்ளதாக வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள். ஊடகங்கள் இலங்கை பிரச்னையில் ஒரு மோசமான நிலையை கையாண்டு வருகின்றன. ஏராளமான தமிழ் பத்திரிக்கைகள் இருந்தபோதும், இலங்கை இனப்பிரச்னையின் உண்மையான கோணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் மக்களின் பிரச்னையில் கூட, தமிழ் ஊடகங்கள் இந்த நிலை கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? இதற்கும் பதிலளிக்க யாரும் முன்வர மாட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்பான பல செய்திகள் மக்கள் அறிந்திருக்கவில்லை. காரணம் இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட சிடிக்கள் பார்த்தவர்களுக்கு, இலங்கையில் இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கின்றனவா என கண்கள் விரிந்ததை மறுக்க முடியாது. இதுவே தமிழ் ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படவில்லை என்பதற்கு உதாரணம். ஒரு இனம் அங்கு அழிக்கப்படுகிறது என்பதை விட, நம் இனம் அங்கு அழிக்கப்படுகிறது என்ற எண்ணம் தமிழ் ஊடகங்களுக்கு இல்லை. இப்பிரச்னையில் உண்மைகள் வெளியிடப்படாத அதே அளவு பொய்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ‘இன்னும் சில தினங்களில் விடுதலை புலிகளை அழித்து விடுவோம்’ என்ற அறிவிப்பை சில ஆண்டுகளாக அறிவித்து வருகிறது தமிழ் ஊடகங்கள். தமிழ் மக்கள் சாகிறார்கள் என்பதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் பேட்டியில் சொன்னாலன்றி எழுதுவதில்லை. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிந்து வெளியிட முன்வரவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிந்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், சிங்கள ராணுவ தளபதியின் பேச்சுக்கள், பேட்டிக்கள், அறிக்கைகள் என இலங்கை ஆதரவு செய்திகள் தினமும் வெளியாகின. இலங்கையில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள். எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பன போன்ற புள்ளிவிவரங்கள், இலங்கை அரசின் அறிவிப்பாக வெளியிடப்படுகின்றனவே தவிர, ஆராய்ந்து வெளியிடப்படவில்லை. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்தது இதன் மூலம் கணக்கில் கொண்டு வரப்படாமல் போனது. பார்ப்பனீய பத்திரிக்கைகள் இதற்கு முழு முதற்காரணம். நாட்டின் ‘நான்காவது தூண்’ என அழைக்கப்படும் ஊடகங்கள், நான்காம் தரமானது என விமர்சிக்க நேரிடுமோ என நான் அஞ்சுகிறேன். தமிழர்கள் படும் துன்பங்களும், கொடுமைகளும் விழியை நனைத்து கண்ணீராக வெளியேற, உங்கள் முன் வெட்கித் தலைகுனிகிறேன் நானும் ஒரு பத்திரிக்கையாளனாக. . .

No comments: