August 21, 2009

கந்த............சா......மி....

இயக்கம் : சுசிகணேசன் நடிப்பு : விக்ரம், ஸ்ரேயா, பிரபு, ஆசிஷ்வித்யார்த்தி, ஒளிப்பதிவு : என்.கே. ஏகாம்பரம் தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு
‘இருப்பவனிடம் பிடுங்கி, இல்லாதவனுக்கு கொடுப்பது’ என்ற மிகவும் பழக்கப்பட்ட ஷங்கர் பாணி கதையை படமாக்கியிருக்கிறார் சுசிகணேசன்.
திருப்போரூர் முருகன் (கந்தசாமி) கோயிலில் கணவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.60 ஆயிரம் வேண்டும் என வேண்டுகிறார் பெண் ஒருவர். கோரிக்கையை மரத்தில் எழுதி கட்டினால் கோரிக்கை நிறைவேறும் என கோயில் பூசாரி கூற, அதனை கட்டி செல்கிறார் அந்த பெண். இதையடுத்து அவரது கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. கோரிக்கையை நிறைவேற்றியது, வேறு யார் ஹீரோவே தான்.
தொடர்ந்து இந்த தகவல் ஊர் முழுவதும் பரவ கோயிலில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது. பக்தர்களின் கோரிக்கை முழுவதும் நிறைவேற, இதில் சந்தேகம் கொள்கிறது உளவுத்துறை. ‘சாமி செய்யது, செஞ்சா ஆசாமி தான் செய்யனும்’ என கூறி இதனை விசாரிக்க உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பிரபு அங்கு வருகிறார். இது ஒருபுறம் இருக்க கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வைத்து, அதிரடி சோதனை நடத்தி வேட்டையாடுகிறார் ஹீரோ விக்ரம். இதில் சிக்கும் பண முதலைகள், ஹீரோவுக்கு எதிராக சதிவலை பின்னுகிறார்கள். இறுதியில் இவர்களில் ஒருவரிடம் அவர் சிக்குகிறார். அவர்களிடம் பின்னணியையும் ஹீரோ விளக்குகிறார்.
‘நாங்கள் 11 பேர். கிராமத்தில் படிச்சோம். மேல் படிப்பு படிக்க சென்னை வந்தோம். பணக்காரர்களால் பாதிக்கப்பட்டு, ஏழை, பணக்கார இடைவெளியை குறைக்க முடிவெடுத்தோம்’ என காக்க காக்க ஸ்டைலில் பிளாஷ்பேக் கூறுகிறார் விக்ரம். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது கிளைமேக்ஸ். ஜென்டில்மேன், அந்நியன், முதல்வன், சாமுராய், சிவாஜி என பார்த்து சலித்த படத்தின் கதையை குழப்பி அடித்து கொடுத்திருக்கிறார் சுசிகணேசன். ‘அட இது ஜென்டில்மேன்’, ‘இது சிவாஜி’ என கந்தசாமி படம் பார்க்கும் நமக்கு மற்ற படங்களையும் நினைவூட்டுகிறார் இயக்குனர். கிராமத்தில் படிக்கும் 11 பேர் சென்னை வந்தது சரி. பணக்காரர்களை எதிர்க்க முடிவு செய்தது சரி. அது எப்படி எல்லோரும் சி.பி.ஐ., உளவுத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, க்யூ பிராஞ்ச் என முக்கிய பிரிவுகளில் வேலைக்கு சேர்ந்தாங்க சரி விடுங்க. இப்படி படம் முழுக்க ஏகப்பட்டட லாஜிக் மீறல்கள்.
2.30 மணி நேரத்தில் முடிய வேண்டிய படம், 3.15 மணி நேரம் ஓடுவது பெரிய மைனஸ். ஸ்ரேயா. அவரது உடைகளுக்கு ரூ.1.75 கோடி செலவாம். நடிக்க எவ்வளவோ. ஆனால் இரண்டிலும் தயாரிப்பாளர் ஏமாற்றப்பட்டுவிட்டாரோ என தோன்றுகிறது. இந்த உடைக்கா இவ்வளவு செலவு, இவரது நடிப்புக்கா சம்பளம் என நம்மை ஏகத்துக்கும் எரிச்சலூட்டுகிறார் ஸ்ரேயா. வடிவேலுவும் அதே ரகம். ஏற்கனவே வேகமின்றி பயணிக்கும் படத்தின் வேகத்தை இன்னும் குறைக்கிறது வடிவேலுவின் காமெடி. படத்தில் மிகப்பெரிய ஆறுதல் தொழில்நுட்பம்.
ஒளிப்பதிவில் பின்னி எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். இயற்கை, ஈ என ஏற்கனவே அசத்தல் படங்களை வழங்கிய ஏகாம்பரத்துக்கு ஏகத்துக்கும் தீனி போட்டிருக்கிறது ‘கந்தசாமி’. இசை ஓகே ரகம். பல இடங்களில் பின்னணி இசை எரிச்சலூட்டுகிறது. போலீஸ் ஆபிசராக பிரபு, வில்லனாக வரும் ஆசிஷ்வித்யார்த்தி, அவரது பி.ஏ. ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்.
ஹீரோ உள்ளிட்ட 11 பேரின் இந்த ராபின் ஹ¨ட் அவதாரத்துக்கு பின்னணியை வலுவாக சொல்லாமல் தப்பியது; மிக மெதுவான திரைக்கதை; ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத கதைக்களம், தேவையில்லாத நீளம் என ஏகப்பட்ட சளிப்புகளுக்கிடையேயும், படத்தின் கமர்சியலான காட்சியமைப்பு ஆறுதலை தருகிறது. சில இடங்களில் முன்னிறுக்கை நோக்கி நகரும் காட்சிகளும் படத்தில் இருக்கத்தான் செய்கிறது.
ஏற்கனவே கறுப்பு பணத்துக்கு எதிராக ‘சிவாஜி’ ரஜினி போராடிய போதும், கறுப்பு பணம் ஒழியவில்லை போலும், அதான் கந்தசாமி பிறந்திருக்கிறார். சினிமாத்துறையினரெல்லாம் கறுப்பு பணத்தை பற்றி படம் எடுத்தா எப்படி சாமி. சரி அது எதுக்கு நமக்கு. என்னமோ பல கோடியை வாரி இரைத்து ஏழ்மையை போக்க முயன்றுள்ள கலைப்புலி தாணுவை கந்தசாமி காப்பாத்துமா?.