October 26, 2009

பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்

‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன. சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.
01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது.
02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது?
03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது?
04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்?
05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?
வழக்கமான திரைப்படங்களில் இருந்து முழுமையாக வேறுபடுகிறது பேராண்மை திரைப்படம்.
01. முதலில் படத்தின் கதாநாயகன் துருவன். அம்பி, கிச்சா, ராகவன் என சிலரை மட்டுமே கதையின் நாயகர்களாக நம் முன்னிறுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து வேறுபடுகிறது பேராண்மை. துருவன் என்ற பழங்குடியின மக்களில் ஒருவரை கதாநாயகனாக காட்டியதற்கு இயக்குனர் சனநாதனை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்.
02. சாதி எதிர்ப்பு அரசியல். ‘அவன் என்ன சாதி, நாம என்ன சாதி, நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு’ என கதாநாயகன் துருவனை பற்றி நாயகிகள் விமர்சிக்கும் வசனங்களில் இளம் பெண்களிடம் படிந்துள்ள சாதியுணர்வை கூறியுள்ளதும், ‘எங்க ஆளுங்களுக்கு இங்கிலீஸ்ல பேசுனா புரியாது. உங்க கிட்ட பேசுன உங்களுக்கு புடிக்காது’ என நாயகிகளிடம் கூறும் இடங்களில் சாதி எதிர்ப்பு அரசியலை விதைத்துள்ளதிலும் இயக்குனர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
03. அதிகார வர்க்க எதிர்ப்பு. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பை அப்பட்டமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என்பதால் வனகாவலவரான கதாநாயகனிடம், தனது ‘ஷ¨’வை பாலிஸ் போட்டுவரச்சொல்லும் வன அதிகாரி, அதே காட்சியில் உயர்சாதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளை உட்கார வைத்து பேசுவது என பல இடங்களில் அதிகார வர்க்க எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடியரசுத்தலைவரிடம் பொன்வண்ணன் விருது பெறுவது அதிகார வர்க்க எதிர்ப்பை முழுமையாக அம்பலமாக்கும் காட்சி.
04. படத்தின் பெயரில் ஆண்மையிருக்குமாறு பேராண்மை என பெயரிட்டு, பெண்மை போற்றும் வகையில் பெண்களை கதையின் நாயகிகளாகவும், சகாசம் செய்பவர்களாகவும் முன்வைத்ததற்காகவும் பாராட்டுகள். ‘கிராமத்துக்கு பெண்களுக்கு முந்தானை விலக்கியே காலம் போச்சு; நகரத்து பெண்களுக்கு முடியை விலக்கியே காலம் போச்சு’ என்பன உள்ளிட்ட வசனங்கள் ‘நச்’.
05. தீவிரவாதிகள் என்றதும் இஸ்லாமியர்களை கண்முன் நிறுத்தும், திரைப்படங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது பேராண்மை. சர்வதேச கூலிப்படையினரின் முகத்தையும், ரசிகர்களுக்கு காட்டியது அழகு.

October 22, 2009

கருணாநிதியை நம்புவோருக்கு சில கேள்விகள்

‘ராஜீவ்காந்தி மரணத்துக்காக இன்னும் எத்தனை தமிழர்கள் சாகணும்’ யாழ்ப்பாணம் நாடாளுமன்றத்தில் நம் நாடாளுமன்ற குழுவிடம் ஒரு மாணவன் கேட்ட கேள்வி இது. வழக்கம்போல் மௌனத்தையே அந்த மாணவனுக்கு பதிலாக அளித்தது நாடாளுமன்ற குழு. இதேபோன்று இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் சித்ரவதை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தரப்பில் கேட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு நாடாளுமன்ற குழுவிடம் பதில் இல்லை.
வன்னி முகாம்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று, 5 நாட்களுக்கு பின்னர் திரும்பிய நாடாளுமன்ற குழுவினர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே விமான நிலையத்துக்கு சென்று அவர்களை அழைத்து வந்தார் கருணாநிதி. அதன்பின்னர், சென்று வந்தவர்களின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. முகாம்களில் இருந்து பல ஆயிரம் பேர் வெளியேறுவார்கள் என விவரித்தார் அவர். இதை எவன் நம்புவான்.
‘ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்’. என் நண்பர் ஒருவர் அடிக்கடி உச்சரிக்கும் இந்த பழமொழிக்கு நீண்ட நாட்களாக உடன்படாமல் இருந்தவன் நான். ஆனால், இதோ இப்போது உடன்படுகிறேன். கருணாநிதி எனும் ஓநாயுடன் இருந்தவர்கள் (தி.மு.க.வினர்) எல்லாம், இப்போது அவர் போல் ஊளையிடத் துவங்கிவிட்டனர்.
‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்று தந்துவிட்டார் கருணாநிதி’ என பிரசாரம் செய்யத்துவங்கியுள்ளனர். ‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த கலைஞருக்கு பாராட்டு. வாழ்க தலைவர் கலைஞர்’ என குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஊரெங்கும் ஒட்டி வருகின்றனர் தி.மு.க.வினர். எவன் நம்புவது இதை? இது உண்மை என நம்ப யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இது உண்மையாக இருக்குமோ என சிலர் எண்ணலாம். அதோ அவர்களுக்கு சில கேள்விகள்.
01.‘தமிழீழத்தை ஆதரிக¢காதவன் சோற்றாலடித்த பிண்டம்’ என்று முன்னர் முழங்கிய கருணாநிதி, ‘ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலைதான் எனது நிலை’ ‘இலங்கையில் தனிஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சம உரிமைக்குப் போராடுவோம். எதிலும் நீக்குப் போக்கு வேண்டும்’ என தற்போது கூறினாரே அதற்கு காரணம் மத்தியில் ஆட்சியில் பங்கு போய்விடுமோ என்ற பயம் காரணமில்லை என நினைக்கிறீர்களா?
02. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘இலங்கையில் நம் சகோதரர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உயிர் இங்கே போனால் என்ன? கடல் கடந்து அங்கே போய் போனால் என்ன? இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு அந்நாட்டை நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் இனியும் இந்தப் பதவி எதற்கு என்று யோசிக்க வேண்டியிருக்கும்’’ என்று கருணாநிதி முழங்கினாரே? அந்த கோபம் அதன் பின்னரும் இருந்தது என நம்புகிறீர்களா?
03. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்துக் கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டிய கருணாநிதி, போரை நிறுத்த நடவடிக்கை எடுகுகப்படாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினாரே? எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா தீர்மானம் என்ன ஆனது என தெரியாத நிலையில், இந்த தீர்மானத்தால், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா?
04. காங்கிரசை எதிர்க்கிறார்கள், இது தேச விரோதம்?! என கொதித்தெழுந்த கதர் சட்டைகள் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கூக்குரலிட்டன. இதையடுத்து, வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் தூண்டுதலால் கைது செய்யப்படவில்லை. உண்மையில் இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என உங்களால் கூற முடியுமா?
05. ‘அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும், என் வேண்டுகோளையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இது. இது உண்மை என நீங்கள் நம்புகிறீர்களா?
06. இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு கோரி, முத்துக்குமாரில் துவங்கி பலர் தீக்குளித்து மாண்டார்களே, அவர்களுக¢காக இரங்கல் தெரிவிக்காத முதல்வர் கருணாநிதி. மாறாக, அவர்களை ‘வறுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்’ என்றும், ‘வயிற்று வலி காரணம்’ என்றும், ‘மனநிலை பாதிக¢கப்பட்டவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக¢ கொண்டு செத்துப் போனார்கள்’ என்றும் தனது போலீசை விட்டு அறிவிக்க வைத்தாரே? கருணாநிதியின் இந்த கருத்தில் ஒத்துப்போக முடியுமா உங்களால்?
07. இலங்கைத் தமிழர் பிரச்னையில், சீமான், அமீரைத் தொடர்ந்து திரையுலகத்தினர் பலரும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாகக¢ கண்டிக்கத் தொடங்கினர். இந்த நேரத்தில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் அளித்தும் அதன் பலன் பொதுமக்களுக்குச் சென்றடையாத நிலை தொடர்வதால் இச்சலுகையை மறுபரிசீலனை செய்ய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்ததே, அது ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. இலங்கையில் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், வீரர்களும் அவர்களுடன் கொல்லப்பட்டனர். பிரபாகரன் இறந்து விட்டாரா என கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘தனிப்பட்ட விடுதலைப் புலிகள் குறித்தோ, தனிப்பட்ட மனிதர்கள் குறித்தோ நான் பேச விரும்பவில்லை’’ என்று பதிலளித்தார். அது சரி அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு கூட கருணாநிதி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? 2007ல் விடுதலை புலிகள் அமைப்பினை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்காக கண் கலங்கிய கருணாநிதி, இந்த நேரத்தில் மவுனமாக இருந்ததற்கு காரணம் ஏதும் இல்லை என நம்புகிறீர்களா?
09. அப்பட்டமான தமிழினப் படுகொலைகளைச் செய்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், மேற்கு உலக நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்கத் தெரிந்த கலைஞர் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள் நீங்கள்?
10. இந்த கேள்விக்கு பின்னரும் இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார் என நம்புகிறீர்களா?

October 14, 2009

தினமலர் ஊழியருக்கு சில கேள்விகள்

இலங்கையில் இந்திய அரசே முன்னின்று போரை நடத்தி வந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடந்ததைபோல திசைமாறி கிடக்கிறது ஊடகங்களின் போராட்டம்.
திரைப்பட நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, எவ்வித ஆதாரமுமின்றி தினமலர் நாளிதழ் அவதூறு செய்தியை வெளியிட்டதின் பயனாக திரையுலகம் கொதித்தெழ விஸ்வரூபம் எடுத்தது பிரச்னை. சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க திரையுலகமே கோரியதையடுத்து, தினமலர் செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை நடிகர்கள் விமர்சிக்க, கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விமர்சனத்தை எதிர்த்தும் ஊடகவியலாளர்கள் கொதித்தெழுந்தனர்.
இதில் பெரும்பாலான போராட்டங்களை முன்னின்று நடத்தியது தினமலர். மற்ற நிறுவன ஊழியர்களை மிகவும் வலியுறுத்தி கூட்டம் நடத்துங்கள், தீர்மானம் போடுங்கள், போராட்டம் நடத்துங்கள் என தினமலர் நிறுவன ஊழியர்கள் கெஞ்சியதை யாரும் மறுக்க முடியாது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தினமலர் லெனின் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்ட ஒரு பத்திரிக்கையாளர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வாரி வழங்கியது தினமலர்.
இதன் பின்னர் தினமலர் ஊழியர்களும், இன்ன பிற ஊடக நிறுவன ஊழியர்களும் சில இடங்களில் போராட்டமும், கண்டன தீர்மானங்களையும் நிறைவேற்றல் நிகழ்வையும் நடத்தினர். ஆனால், இவை எல்லாம் சரிதானா என்பதில் தான் சிக்கல்.
இது தொடர்பாக தினமலர் ஊழியர்களுக்கு சில கேள்விகள்.
01. தினமலரின் செய்தி ஆசிரியர் லெனின் தானா? அப்படியெனில் இதற்கு முன்னர் தினமலர் நாளிதழில் வந்த அலுவலகம் சார்ந்த செய்திகளில் செய்தி ஆசிரியர் என வேறு நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஏன்? செய்தி ஆசிரியர் என்ற பதவி உயர்வு அவருக்கு எப்போது வழங்கப்பட்டது?
02. ஒரு நாளிதழ் மீது சட்டரீதியிலான பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட நாளிதழ் பொறுப்பாசிரியர் அல்லது வெளியீட்டாளர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கைது செய்யப்பட்ட நாளான்று நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசித்த பின்னரே செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டார். அப்படியேனில், செய்தி ஆசிரியரை போலீசாருடன் அனுப்பி வைத்தது யார்?
03. தினமலர் நாளிதழில் பணியாற்றும் யாரும் பத்திரிக்கையாளர் சங்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள முடியாது. இது நிர்வாகத்தின் நேரடி உத்தரவு. அப்படியிருக்க இப்பிரச்னையில் மட்டும் பத்திரிக்கையாளர் சங்கங்களை அணுக உங்களை நிர்வாகம் வலியுறுத்தியது ஏன்?
04. திருப்பூரில் தினமலர் நாளிதழ் நிருபர், புகைப்பட கலைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது, ஒட்டுமொத்த ஊடகங்களும் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய போது, பாதிக்கப்பட்ட நீங்கள் (தினமலர் ஊழியர்கள்) மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்ததின் காரணம் தெரியுமா உங்களுக்கு?
05. உங்கள் நிறுவன (தினமலர்) நிர்வாகி ஒருவர் மீது பெண் நிருபர் ஒருவர் பாலியல் புகார் கூறிய போது, (அது உண்மை என தெரிந்தும்) கொதித்தெழுந்தீர்களே? மற்றவர்களை கொச்சைபடுத்துதல் மட்டும் தகுமோ?
06. திரைப்பட இயக்குனர்களில் மணிரத்னம், நடிகர்களில் கமலஹாசன், ரஜினி தவிர சிலரை தவிர, மற்றவர்களை இயக்குனர், நடிகர் என குறிப்பிடாமல் சினிமாகாரர் என்ற அடைமொழியுடன் பிரசுரிப்பது ஏன் என தெரியுமா?
07. இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் செய்திகள் மற்ற பத்திரிக்கைகளில் வந்தாலும், உங்கள் பத்திரிக்கையில் இடம்பெறுவதில்லையே ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என நீட்டி முழக்கி எழுதுகிறீர்களே? அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இதுபோன்ற பிரச்னையில் சம்பந்தப்பட்ட போது அதனை அடக்கி வாசிப்பது ஏன்? அதுபோன்ற செய்திகளை வெளியிடாதது ஏன்?
09. கோவை உட்பட பல்வேறு இடங்களில் இப்பிரச்னை குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சங்க கூட்டங்களில் தினமலரின் செய்தி மீது கடுமையான விமர்சனம் இருந்தது. பத்திரிக்கையாளர் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததை செய்தியாக விவரித்த ‘தினமலர்’, இதனை குறிப்பிடாதது ஏன்?
கேள்விகளுக்கு எனக்கு பதில் தேவையில்லை. உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
மற்ற ஊடகவியலாளர்களும் இந்த கேள்வியில் ஆழ்ந்து தினமலரின் நிலையை புரிந்து கொண்டால், தினமலர் நாளிதழுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது தெரியும். ஆயிரம் பிரச்னை நடந்தாலும், தினமலர் தன்போக்கில் இருந்து மாறாது, எனவே மீண்டும் அது சர்ச்சையில் சிக்கும். ஆனால் அப்போது மற்ற ஊடகவியலாளர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். அதையும் நாம் காணத்தான் போகின்றோம்.

October 12, 2009

தாலி தேவையா?

‘சிவந்த மை பூசிய பெண்கள், வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. எனக்கு மிகவும் பிடித்த இத்தாலிய நாட்டு பழமொழி. சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியை பார்க்கும் போது நான் மீண்டும் அசை போட்டது இந்த பழமொழியைத்தான்.
தாலி தேவையா, இல்லையா என சுமார் 1.30 மணி நேர விவாதத்தில் பெரும்பாலான நேரங்கள், ‘தாலி அணிந்தவர்கள், தாலி வேண்டும் என்பவர்கள் மட்டுமே குடும்ப பெண்கள்’ என்பது போன்ற கருத்து திணிக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதேசூழலில் அண்மைகாலமாக தாலி என்பது பெண்ணுக்கு தேவையா என்ற எதிர்ப்பு குரல் ஒலிப்பதையும் இந்த நிகழ்ச்சி பதிவு செய்தது.
‘தாலி என்பது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணுக்கு தாலி என்றால், அப்ப ஆணுக்கு என்ன?’ என கேட்டது தாலி வேண்டாம் எனும் தரப்பு. ‘ஆணுக்கு வேணும்னா தாலி மாதிரி ஏதாவது போட்டுக்கலாம். பெண்ணுக்கு வேணாங்கறது சரியில்லை’ என்றது மற்றொரு தரப்பு. சினிமாக்களை போல, நிஜவாழ்வில் ‘தாலி’ என்பது கலாச்சார சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்று ஏராளமான சென்டிமெண்டுகளை நம் மக்கள் விதைத்து விட்டனர். அதுபோன்ற கலாச்சார பாதுகாவலர்களுக்கு சில கேள்விகள்.
01. பெண்களை திருமணம் ஆனவர், ஆகாதவர் என வித்தியாசப்படுத்தும் வகையில் தான் இந்த ‘தாலி’ உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காதது ஏன்? (தெருநாய்க்கும், வீட்டு நாய்க்கும் வித்தியாசப்படுத்தும் முயற்சியாக நாய்க்கு கட்டும் லைலென்சு போன்றது தான் இந்த தாலி என நான் நினைக்கிறேன்)
02. பெண்களுக்கு திருமணத்தின் போது தாலி, மெட்டி அணிவதை போல, ஆண்களின் கால்களிலும் வளையம் ஒன்று அணிவிக்கப்படும். ஆனால் திருமணமாகி சில தினங்களில் அது கழற்றிக்கொள்ளலாம். ஆனால், பெண் காலத்துக்கும் கழற்ற கூடாது. இது ஆணாதிக்க போக்கில்லை என நீங்கள் நம்புகிறீர்களா?

03. ‘தாலி என்பது பெண்களின் உயிர். கணவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்’ என்கிறீர்கள். அது சரி. கணவன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்ன அடையாளம்? தாலி இல்லாவிட்டால் உங்களால் கணவனுக்கு நம்பிக்கையுடன் இருக்க முடியாதா?

04. ஒரு பெண் தாலி அணிந்தால் தான், திருமணம் ஆனவளாக ஏற்றுக்கொள்வீர்களா? மனம் ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் தாலி எனும் அடையாளக்குறி எதற்கு?
05. ‘மந்திரம் சொல்லி கட்டப்படும் தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாமல் போய்விடுமா’ என கேட்கிறீர்கள். ‘தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் கணவர் நீடூழி வாழ்வார்’ என்கிறீர்கள். ‘கணவர் நலனுக்கு சுமங்கலி பூஜை நடத்துகிறீர்கள்’ ‘இதெல்லாம் நம் கலாச்சாரம் என்கிறீர்கள்’. கணவர் மீது மனைவி அன்பை காட்ட இத்தனை நிகழ்வுகள், கணவருக்கு மனைவி மீது அன்பில்லையா? இல்லை இருக்க வேண்டிய அவசியம் இல்லையா?
திருமணம் என்பது ஒரு பந்தம். அன்பும், புரிதலும் தான் திருமண பந்தத்துக்கு தேவையான அடையாளங்கள். இவை இரண்டும் இருவருக்கும் தேவை. அதைவிடுத்து தாலியை பெண்ணுக்கு மட்டும் அணிவித்து விட்டு, அந்த முறையை உங்களை வைத்தே வளர்த்து வரும் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
‘சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. முகம் சிவக்க வெட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலியும் அதுபோலத்தான்.