September 11, 2008

பொது செயலாளர் பதவிக்கு உரியவரா ஜெ.?

மீண்டும் அ.தி.மு.க.வின் பொது செயலாளராக தேர்வு (?) செய்யப்பட்டுள்ளார் ஜெயலலிதா. அ.தி.மு.க. பொது செயலாளராக தேர்வு (?) செய்யப்படுவது இது 6வது முறையாம். இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அ.தி.மு.க. தலைமை. எப்படியோ, அ.தி.மு.க.வின் உயரிய பொறுப்பான பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். அ.தி.மு.க. பொது செயலாளர், எதிர்கட்சித் தலைவர் என பல பதவிகள் அவரிடம் இருந்தாலும், அதை அவர் முறையாக நிர்வகிக்கிறாரா என்றால் இல்லை. தமிழகத்தில் பல்வேறு தரப்பிலான மக்கள், இடையூறில் சிக்கித் தவித்த போது, கொடநாடு எஸ்டேட்டில் அவர் தங்கியிருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். 6வது முறையாக பொது செயலாளர் ஆனபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை உடனடியாக துவக்குவதாக அறிவித்துள்ளார். மக்கள் இடையூறுகளில் சிக்கித்தவித்த காலங்களில் அவர்களுக்காக களத்தில் இறங்கி போராடாமல், எஸ்டேட்டில் ஓய்வு எடுத்தவாறு அறிக்கை விட்ட ஜெயலலிதா, தேர்தலுக்காக தங்களை சந்திப்பதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் நம்மை நோக்கி வரும் அவரை வரவேற்போம். ஆனால், அவருக்கு தான் வாக்களிப்போம் என முடிவு செய்து விடாதீர்கள். மக்கள் விரோத போக்கு; நேர்மையற்ற ஆட்சி என தி.முக. அரசை நோக்கி ஜெயலலிதா முன்வைக்கும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும், அவர் ஒருமுறை தன்னை நோக்கியும் கேட்டுக்கொண்டு இந்த பிரசாரத்தை துவங்கட்டும். ஒரு நாளில் 20 மணி நேரம் பணியாற்றுவேன் என ஆட்சியில் இருந்த போது கூறிய அவர், மக்கள் நலனுக்காக எதிர்கட்சி தலைவியாக போராடட்டும். மக்கள் பிரச்னைகளுக்கு அறிக்கையை மட்டும் வெளியிடாமல், அதற்கான தீர்வுகளுக்கு போராடட்டும். இவை யாவும் நீங்கள் முதல்வராவதற்காக அல்லாமல், எதிர்கட்சி தலைவர் என்பதற்கும், பிரதான கட்சியின் பொது செயலாளர் என்பதற்குமான அடையாளங்களாக இருக்கட்டும். நீங்கள் வருங்கால முதல்வராவது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் அ.தி.மு.க. பொது செயலாளர் என்பதற்கும், எதிர்கட்சி தலைவர் என்பதற்கும் நீங்கள் பொருத்தமானவரா என்பதை உறுதிசெய்யுங்கள்.

No comments: