‘ராஜீவ்காந்தி மரணத்துக்காக இன்னும் எத்தனை தமிழர்கள் சாகணும்’ யாழ்ப்பாணம் நாடாளுமன்றத்தில் நம் நாடாளுமன்ற குழுவிடம் ஒரு மாணவன் கேட்ட கேள்வி இது. வழக்கம்போல் மௌனத்தையே அந்த மாணவனுக்கு பதிலாக அளித்தது நாடாளுமன்ற குழு. இதேபோன்று இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் சித்ரவதை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தரப்பில் கேட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு நாடாளுமன்ற குழுவிடம் பதில் இல்லை.
வன்னி முகாம்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று, 5 நாட்களுக்கு பின்னர் திரும்பிய நாடாளுமன்ற குழுவினர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே விமான நிலையத்துக்கு சென்று அவர்களை அழைத்து வந்தார் கருணாநிதி. அதன்பின்னர், சென்று வந்தவர்களின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. முகாம்களில் இருந்து பல ஆயிரம் பேர் வெளியேறுவார்கள் என விவரித்தார் அவர். இதை எவன் நம்புவான்.
‘ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்’. என் நண்பர் ஒருவர் அடிக்கடி உச்சரிக்கும் இந்த பழமொழிக்கு நீண்ட நாட்களாக உடன்படாமல் இருந்தவன் நான். ஆனால், இதோ இப்போது உடன்படுகிறேன். கருணாநிதி எனும் ஓநாயுடன் இருந்தவர்கள் (தி.மு.க.வினர்) எல்லாம், இப்போது அவர் போல் ஊளையிடத் துவங்கிவிட்டனர்.
‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்று தந்துவிட்டார் கருணாநிதி’ என பிரசாரம் செய்யத்துவங்கியுள்ளனர். ‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த கலைஞருக்கு பாராட்டு. வாழ்க தலைவர் கலைஞர்’ என குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஊரெங்கும் ஒட்டி வருகின்றனர் தி.மு.க.வினர். எவன் நம்புவது இதை? இது உண்மை என நம்ப யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இது உண்மையாக இருக்குமோ என சிலர் எண்ணலாம். அதோ அவர்களுக்கு சில கேள்விகள்.
01.‘தமிழீழத்தை ஆதரிக¢காதவன் சோற்றாலடித்த பிண்டம்’ என்று முன்னர் முழங்கிய கருணாநிதி, ‘ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலைதான் எனது நிலை’ ‘இலங்கையில் தனிஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சம உரிமைக்குப் போராடுவோம். எதிலும் நீக்குப் போக்கு வேண்டும்’ என தற்போது கூறினாரே அதற்கு காரணம் மத்தியில் ஆட்சியில் பங்கு போய்விடுமோ என்ற பயம் காரணமில்லை என நினைக்கிறீர்களா?
02. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘இலங்கையில் நம் சகோதரர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உயிர் இங்கே போனால் என்ன? கடல் கடந்து அங்கே போய் போனால் என்ன? இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு அந்நாட்டை நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் இனியும் இந்தப் பதவி எதற்கு என்று யோசிக்க வேண்டியிருக்கும்’’ என்று கருணாநிதி முழங்கினாரே? அந்த கோபம் அதன் பின்னரும் இருந்தது என நம்புகிறீர்களா?
03. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்துக் கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டிய கருணாநிதி, போரை நிறுத்த நடவடிக்கை எடுகுகப்படாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினாரே? எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா தீர்மானம் என்ன ஆனது என தெரியாத நிலையில், இந்த தீர்மானத்தால், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா?
04. காங்கிரசை எதிர்க்கிறார்கள், இது தேச விரோதம்?! என கொதித்தெழுந்த கதர் சட்டைகள் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கூக்குரலிட்டன. இதையடுத்து, வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் தூண்டுதலால் கைது செய்யப்படவில்லை. உண்மையில் இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என உங்களால் கூற முடியுமா?
05. ‘அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும், என் வேண்டுகோளையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இது. இது உண்மை என நீங்கள் நம்புகிறீர்களா?
06. இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு கோரி, முத்துக்குமாரில் துவங்கி பலர் தீக்குளித்து மாண்டார்களே, அவர்களுக¢காக இரங்கல் தெரிவிக்காத முதல்வர் கருணாநிதி. மாறாக, அவர்களை ‘வறுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்’ என்றும், ‘வயிற்று வலி காரணம்’ என்றும், ‘மனநிலை பாதிக¢கப்பட்டவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக¢ கொண்டு செத்துப் போனார்கள்’ என்றும் தனது போலீசை விட்டு அறிவிக்க வைத்தாரே? கருணாநிதியின் இந்த கருத்தில் ஒத்துப்போக முடியுமா உங்களால்?
07. இலங்கைத் தமிழர் பிரச்னையில், சீமான், அமீரைத் தொடர்ந்து திரையுலகத்தினர் பலரும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாகக¢ கண்டிக்கத் தொடங்கினர். இந்த நேரத்தில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் அளித்தும் அதன் பலன் பொதுமக்களுக்குச் சென்றடையாத நிலை தொடர்வதால் இச்சலுகையை மறுபரிசீலனை செய்ய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்ததே, அது ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. இலங்கையில் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், வீரர்களும் அவர்களுடன் கொல்லப்பட்டனர். பிரபாகரன் இறந்து விட்டாரா என கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘தனிப்பட்ட விடுதலைப் புலிகள் குறித்தோ, தனிப்பட்ட மனிதர்கள் குறித்தோ நான் பேச விரும்பவில்லை’’ என்று பதிலளித்தார். அது சரி அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு கூட கருணாநிதி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? 2007ல் விடுதலை புலிகள் அமைப்பினை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்காக கண் கலங்கிய கருணாநிதி, இந்த நேரத்தில் மவுனமாக இருந்ததற்கு காரணம் ஏதும் இல்லை என நம்புகிறீர்களா?
09. அப்பட்டமான தமிழினப் படுகொலைகளைச் செய்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், மேற்கு உலக நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்கத் தெரிந்த கலைஞர் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள் நீங்கள்?
10. இந்த கேள்விக்கு பின்னரும் இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார் என நம்புகிறீர்களா?