February 3, 2012

புத்தக ஆர்வலர்களை சேர்த்த தளம்

திருப்பூரில் கடந்த 10 நாட்களாக நடந்த புத்தகத் திருவிழா, நாளையுடன் முடிவடைகிறது. கடந்த காலங்களில் பலமுறை இது போன்ற கண்காட்சிகள் நடந்திருந்தாலும் கூட, அதில் இருந்து எல்லாம், வேறுபட்டு காட்சியளிக்கிறது இந்த புத்தக கண்காட்சி. வழக்கமாக கண்காட்சி ஏற்பாடுகள் குறித்தும், விற்பனை குறித்தும் பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், இந்த முறை அந்த அதிருப்தி காணப்படவில்லை. மாறாக பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் கண்காட்சி ஏற்பாடு, விற்பனை குறித்து மகிழ்ச்சியை தெரிவித்ததை காண முடிந்தது.
நடப்பாண்டில் புத்தக கண்காட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என தேடி அலையவேண்டியதில்லை. அதற்கான அவசியமின்றி, எங்கும் சிதறி கிடக்கின்றன காரணங்கள். வரவேற்புக்குழுவில் துவங்கி ஒவ்வொரு குழுவும் தன் பணியை சிறப்பாக செய்தது; வழக்கமாக இந்த கண்காட்சியை கண்டுகொள்ளாத ஊடகங்கள் இந்த முறை கண்காட்சி குறித்த செய்திக்கு முக்கியத்தும் அளித்தது; இவற்றுக்கெல்லாம் மேலாக மக்களின் ஆதரவு என காரணங்களை நீண்ட பட்டியிடலாம்.
இதில் முக்கியமானது சேர்தளம் நண்பர்களின் பணி. கண்காட்சிக்கு பார்வையாளர்களாக பொதுமக்களையும், புத்தக ஆர்வலர்களையும் ஈர்க்க இவர்கள் மேற்கொண்ட முயற்சி மிகச் சிறப்பானது. ‘ஒரு டேபிள், 2 சேர்கள் போதும், மடிக்கணினியுடன் வந்து இணையத்தில் கண்காட்சியை பரப்ப வேண்டியது எங்கள் பணி’ என உறுதி கூறிய இவர்கள், கடந்த 10 நாட்களாக அதை திறம்பட செய்தும் முடித்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த கண்காட்சி நாளை முடிந்து விடும். அடுத்த சில தினங்களில் நாம் கூட இதை மறந்து விடக்கூடும். ஆனால் கண்காட்சி நிகழ்வுகள், காணொளிகளாக, புகைப்படங்களாக, கட்டுரைகளாக இணையத்தில் தொடர்ந்து நிலைக்கும். எந்த எதிர்பார்ப்புமின்றி மிகுந்த ஈடுபாட்டோடு, ஒவ்வொரு நாள் புத்தகக் கண்காட்சி நிகழ்வுகளையும் இணையத்தில் இணைத்து, புத்தக ஆர்வலர்களை கண்காட்சியில் இணைத்த சேர்தளம் இணையக்குழுவின் பணிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது அவசியம் என உணர்கிறேன். என் சார்பிலும், இணைய நண்பர்கள் சார்பிலும்...

January 2, 2012

வெட்கமாக இல்லையா? : காசி ஆனந்தன்

ஆங்கிலமும் தமிழும் கலந்த இந்த வகைப் பாடல்களை இங்கே சாடுகிறார் கவிஞர் காசி ஆனந்தன். இப்படியே போனால் இன்னும் ஒரு நூறாண்டில் தமிழ் அழியும் என்கிறார். ஒரு மொழி அழிந்தால் போதும் அந்தத் தேசிய இனமும் அழிந்துவிடும். ஓர் இனத்தின் உயிர்நாடியே தாய்மொழிதான். ஓர் இனத்தை அழிக்கவேண்டும் என்றால் தாய்மொழியை அழித்துவிடு என்று சொல்வார்கள். மொழி என்பது ஒரு கருவி மட்டும்தான் என¢ற கருத்து இருக்கிறது. அது முற்றிலும் தவறானது. அதுவல்ல. மனிதர்களின் உயிரோடும் உணர்வோடும் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்துவருகிற உயிர்மூச்சு. மொழி ஒரு தொடர்பு கொள்ளும் கருவி என்பதைப்போல தாய் என்பவள் பிள்ளை பெற்றுத்தருகிற கருவி என்று சொல்லமுடியுமா? அதுவல்ல தாய். அதையும் தாண்டி மேலானவள். அப்படித்தான் தாய்மொழியும். ஆனால் மெல்ல தமிழ் மொழி அழிந்து மிகப்பெரிய அளவில் சுருங்கி தேய்ந்துகொண்டிருப்பது உண¢மை. சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழ் மொழி இருந்தது என சட்டமேதை அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமை கவலைக்கிடமானது. கீழை ஆரிய மொழியான சமஸ்கிருதம் கலந்து தமிழை அழித்ததைப்போல, மேலை ஆரிய மொழியான ஆங்கிலம் கலந்து தமிழ் சிதைந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 600 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி மலையாளம். சேர நாடாக இருந்தது. சேரன் செங்குட்டுவன் கல் சுமந்து கண்ணகி கோயில் கட்டினான். சிலப்பதிகாரம் குறிப்பிடும் வளம் நிறைந்த நாடு. தமிழ்தான் சமஸ்கிருதம் கலந்து மலையாளமாக மாறிப்போனது. இதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாமா? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பிற மொழி கலந்தால் கண்டிப்பாக தமிழ் அழியும். தஜுகிஸ்தானைச் சேர்ந்த பிரபல கவிஞன் ரசூல் கம்ஸதோவ் பேசிய மொழி அவார். அதுதான் அவனுடைய தாய்மொழி. "நாளை என்னுடைய தாய்மொழி இறக்குமானால், நான் இன¢றே இறந்துவிட விரும்புகிறேன்" என்று சொன்னான். தன் தாய்மொழியை எந்த அளவுக்கு அவன் மதிக்கிறான் என்பதற்கு இதைவிட வேறொரு கருத்தைச் சொல்லமுடியாது. நாம் அதை நினைத்துப்பார்க்க வேண்டும். நமக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போனால், மிகக் குறுகிய காலத்திலேயே தமிங்கிலர் என்ற புதிய தேசிய இனமாக நாம் மாறிவிடுவோம். புதிய மொழியும் புதிய இனமும் உலகில் அறிமுகமாகும். நூறு ஆண¢டுகளுக்குள் இந்த மாற்றம் நடந்துவிடும். தமிழின் வயது இன்றைக்கு 50 ஆயிரம் ஆண்டுகள் என்று பாவாணர் சொல்லியிருக்கிறார். இக்கருத்தை மொழியியல் அறிஞர் லெவிட் ஒப்புக்கொள்கிறார். 50 ஆயிரம் ஆண்டுகளாக காப்பாற்றி வந்த ஒரு மொழியை இழந்துகொண்டிருக் கிறோம் என்று நினைத்துப்பாருங்கள். உங்களுக்குக் கவலையாக இல்லையா? தொன¢மையான ஒரு மொழியை இழக்கலாமா? உலகம் முழுவதும் இன்றும் பழம்பொருளை பத்திரமாகப் பாதுகாக்கும் பழக்கம் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் மிக அழகான ஒரு பேனாவைக்கூட பாதுகாத்து நினைவாக வைத்திருக்கிறோம். அந்த உணர்வு மொழியைப் பாதுகாப்பதில் உனக்கு இருக்கவேண்டும். ஆங்கில மொழி லத்தீன், பிரெஞ்சு, கிரேக்க வார்த்தைகளைக் கொண்டுதானே உருவாகியிருக்கிறது. அப்படி ஏன் பிற மொழி வார்த்தைகளை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை? என்று கேட்கிறார்கள். அது சொற்கள் தட்டுப்பாடுள்ள மொழி. பிற மொழிகளை ஏற்றுக்கொண்டால் அம்மொழிக்கு வரவு. ஆனால் தமிழில் ஒவ்வொரு புதுச்சொல் நுழையும்போதும் நம்மிடம் இருக்கிற ஒரு பழஞ்சொல் வழக்கொழிந்துவிடும். இது நமக்கு இழப்பு. அவனுக்கு வரவு. ப்ளவர் என்கிற சொல்லை நாம் ஏற்றுக் கொண்டால் மலர், பூ என்கிற சொற்கள் காணாமல் போய்விடும். அது மொழியின் அழிவு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பிற மொழி அறிவியல் சொற்களுக்கு இணையாக மொழியாக் கம் செய்கிற அளவுக்கு தமிழில் சொற்கள் இருக்கின்றன. சில புதிய சொற்களையும் உருவாக்கமுடியும். சிலர் வெட்கங்கெட்ட முறையில் ஆங்கிலச் சொற்கள் கலப்பைத் தவிர்க்கமுடியாது. தமிழில் பேசுவது இயல்பாக இல்லை என்று சொல்கிறார் கள். தமிழில் பேசுவது உனக்கு வெட்கமாக இருக்கிறதா? ஆங்கிலத்தை முழுமையாகப் பேசு. ஆங்கிலமும் வளரும். தமிழும் வளரும். வெளிநாட்டுக் குப் போனால் என்ன செய்வது? என்று கேட்கிறார்கள். இதுவரையில் ஈழத்திலிருந்து 17 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் போய் வாழ்ந்து வருகிறார்கள். எல்லா மொழிகளிலும் பேசுகிறார்கள். அங்கே போன பிறகுதான் கற்றுக் கொண்டார்கள். தமிழ்நாட்டுக்கு மார்வாடிகள் வருகிறார்கள். அவர்கள் ராஜஸ்தானில் தமிழைக் கற்றுக் கொண்டுதான் இங்கு வருகிறார்களா? இங்கேயே ஆங்கிலேயனாக மாறி வாழத் தொடங்கிவிட்டோம். இன்றைய நிலையில் தமிழுடன் 50 சதவிகிதம் ஆங்கில வார்த்தைகள் கலந்துவிட்டன. அன்றாடப் பேச்சில் நடுத்தர வர்க்கத்தினர் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். கிட்டத்தட்ட மொழி மாறிக்கொண்டிருக்கிறோம். தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. இனமும் மாறிக்கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையில் ஆங்கிலக் கலப்பு என்பது மிக எளிதாக நடந்துவருகிறது. ஆங்கிலப் படங்களில் எங்காவது பிரெஞ்சு மொழியில் பேசுகிறார்களா. நீ ஏன் செய்கிறாய்? அவனது தாய்மொழிமீது விழிப்புடன் இருக்கிறான். இங்கிலாந்தில் மொழிக் கலப்பு தொடர்பான எதிர்ப்பு இயக்கத்துக்கு இளவரசர் சார்லஸ் தலைவராக இருக்கிறார். இயல், இசை, நாடகம் என்று சொல்லிவருகிறோம். இயலான பாடல்களில் ஆங்கிலத்தை அள்ளித் தெளிக்கிறோம். இசையில் பாப், ராக் என்று கலந்துவிட்டோம். ஒய் திஸ் கொலவெறிடி? என்று எழுதுகிறவனைப் பார்த்து தமிழ்மீது உனக்கு ஏன் இந்தக் கொலைவெறி என்று கேட்கவேண்டும். நீ எளிதாகப் பாடி விடுகிறாய். ஒரு பாடலால் தமிழ் அழிந்துவிடுமா என்று கிண்டலாகக் கேட்கிறாய். இந்த நொடியில் அழியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் அழியும். அதற்கு இதுதான் தொடக்கமாக இருக்கும். இதுபோன்ற பாடல்களுக்கு எதிரான இயக்கமே தொடங்கப் படவேண்டும். தமிழும் தெரியும். தெலுங்கும் தெரியும். ஆனால் தமிழ், தெலுங்கு மொழியாக மாறிய காலம் தெரியுமா? குரங்கு தெரியும். மனிதன் தெரியும். குரங்கு மனிதனாக மாறிய படிநிலை தெரியுமா? அதுபோல தமிழும் மாறும். அது நமக்குத் தெரியாமல் போய்விடும். இன்று 'ஒய் திஸ் கொலவெறிடி' என்று பாடி விடுகிறாய். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் முடிந்துபோய்விடும். உன்னுடைய மொழி புதிய மொழியாக மாறியிருக்கும். எல்லீஸ் டங்கன் என்ற ஆங்கிலேயன் தமிழில் படமெடுத்த காலத்தில் தமிழ் செழித்திருந்தது. நல்ல தமிழில் தலைப்புகளை வைத்தார்கள். இந்த மானங்கெட்ட தமிழன் படமெடுக்கும் போது தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. நீ தமிழனாக இருந்துகொண்டு இப்படி செய்வதில் உனக்கு கொஞ்சங்கூட வெட்கமாக இல்லையா? மிக அண்மையில் சீனாவில், தொலைக்காட்சியில் வானொலியில், திரைப்படங்களில் ஆங்கிலத்தைக் கலந்தால் தண்டனை உண்டு என்று அறிவித்துள்ளார்கள்.ஈரான் அதிபர் அகமதிநிஜாத்கூட சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரானிய மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறார். உலகமயமாக் கலின் விளைவாக ஆங்கிலம் வேகமாகக் கலந்துகொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கில மொழி கலப்புக்கு எதிரான இயக்கங்கள் தோன்றி வருகின்றன. அந்தவகையில் ஒய் திஸ் கொலைவெறிடி... போன்ற மொழிக் கலப்புப் பாடல்களை எழுதுகிறவர் களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். நன்றி : த சண்டே இந்தியன்.

March 30, 2010

நளினியும், காங்கிரஸ் கூட்டணியும்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 19 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் நளினியை விடுவிக்க முடியாது எனக்கூறி, தனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள நெருக்கத்தை (?!) அதிகரித்துக்கொண்டுள்ளது தி.மு.க. அரசு. தி.மு.க.விடமும், அதன் தலைவர் கருணாநிதியிடமும் இருந்து இதைதான் எதிர்பார்க்க முடியும் என்ற போதும், ஏனோ ஏராளமான சங்கடங்களுடன் இதை எதிர்கொள்ள வேண்டியதாய் உள்ளது.
தி.மு.க., காங்கிரசிடைய பிளவு ஏற்படுவதாகவும், அ.தி.மு.க. உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட, அதனை மறுக்க காங்கிரசுக்கு பல வகையில் முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க. அரசின் அடுத்த முயற்சி தான் இது. மனித உரிமையின் அடிப்படையில் நளினியை விடுவித்தால், காங்கிரஸ் கட்சியினருக்கு அது பொறுக்காது. ‘‘இலங்கையில் தமிழினமே அழிந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்கள் (!?) தலைவரை அழித்த நளினியை மட்டும் விடுவிக்க கூடாது,’’ என சூளுரைத்து செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியை குளிர்விக்கும் வகையில் தன் கடமையை செவ்வனே செய்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெறாமல் போன தி.மு.க.வினர் ஏராளமானோர். அவர்களுக்கு குறைந்த பட்சம் மேல்முறையீடு கூட செய்யாத தமிழக அரசு, நளினி 19 ஆண்டுகளை சிறையில் கழித்தும் அவரை விடுவிக்காமல் உள்ளது எந்த வகையில் நியாயம். ஒரு கொலை வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது அதிகம் இல்லையா?. கடந்த 1991ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி நளினி கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகளாகியும் தன்னை விடுவிக்காததால் கடந்த 2007ம் ஆண்டு முதன்முதலில் தன்னை விடுவிக்க கோரி நளினி மனுத்தாக்கல் செய்தார். அவரின் கோரிக்கைக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் ‘முடியாது’ என பதில் அளித்துள்ளது தி.மு.க. அரசு. இதற்கிடையில் 2008ம் ஆண்டு நளினியை ரகசியமாக சந்தித்து வந்தார் பிரியங்கா காந்தி.

பிரியங்கா காந்தியின் இந்த சந்திப்பால், அவர் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பும் பொய்த்து போனது. தன் கணவர் (?!) சாவுக்காக, தமிழினத்தை கொன்று குவித்த சோனியாகாந்தியிடமும், அதற்கு துணை போன தமிழக முதல்வர் கருணாநிதியிடமும் இனியும் எதிர்பார்க்க என்ன இருக்கிறது. சோனியாகாந்தி தன் கனவில் என்ன நினைத்தாலும் அதை நிறைவேற்றி வரும் கருணாநிதியிடம் ஒரே ஒரு கேள்வி ஆயுள் தண்டனை பெற்ற நளினியை 19 ஆண்டுகளுக்கு பின்னரும் விடுவிக்க மறுக்கும் நீங்கள், மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டு, 3 ஊழியர்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? தி.மு.க.வை சேர்ந்த தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய மறுத்ததற்கு என்ன காரணம்? இந்த கேள்விக்கு பதில் உள்ளதா உங்களிடம். ராஜீவை நளினி கொலை செய்தார் என்பது உண்மையாகவே இருக்கட்டும். அதற்கு 19 ஆண்டுகள் சிறை என்பது மிக அதிகம் என்பதை யாராலும் உணர்ந்து கொள்ள முடியவில்லையா.

March 29, 2010

அங்காடித் தெரு

கதாநாயகனுடன் 3 நண்பர்கள்; ஒரு காதலி; கத்தியும், ரத்தமுமாக வன்முறையுடன் காதலை கலந்து தந்தால் அது தான் யதார்த்த சினிமா என நம்பிக்கொண்டிருந்த நம்மை இது... இது ... இது தான் யதார்த்தம் என அறைந்து சொல்கிறது அங்காடி தெரு.
சென்னையின் நெரிசல் மிகு வீதிகளில் ஒன்றான ரங்கநாதர் (அங்காடி) தெரு தான் கதையின் களம். இந்த தெருவில் அமைந்துள்ள ஜவுளி வணிக நிறுவனத்தில் தொழிலாளர்கள் படும் அவலத்தை கண் முன் காட்டி, நம்மை கலங்கடிக்கிறது படத்தின் காட்சியமைப்பு. கதாநாயகன், கதாநாயகியின் பெயரைத்தொடர்ந்து, உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இணை இயக்குனர் பெயர்கள் (வழக்கமான தமிழ் சினிமாவின் விதிகளை மீறி) தோன்றி மறையும் போது, நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார் வசந்தபாலன். நள்ளிரவில் பேருந்துக்கு காத்திருக்கும் கதாநாயகனும், கதாநாயகியும் கால்களை மிதித்து விளையாடுவதில் துவங்கி, கதாநாயகி கால்களை இரண்டையும் இழப்பதில் முடிகிறது திரைப்படம். திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் லிங்கம். தன் மகனை எப்படியும் இன்ஜினியராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் லிங்கத்தின் தந்தை, திடீரென விபத்தில் இறக்கிறார். இதனால் முதல் மதிப்பெண் எடுத்தும், மேல்படிப்புக்கு செல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் லிங்கம். ‘ஆட்கள் தேவை’ என்ற அழைப்பை ஏற்று, நேர்முகத்தேர்வுக்கு செல்கிறார் லிங்கம்.

‘அப்பா, அம்மா இல்லாத ஆளா பார்த்து எடுங்க. அப்ப தான் நாம சொல்றத கேட்டுட்டு இருப்பான்’ என்ற உத்தரவுக்கிணங்க பெற்றோரை இழந்து, ஏழ்மையில் தவிப்பவர்கள் மட்டும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அங்கு செல்லும் லிங்கத்துக்கும், தன்னுடன் பணியாற்றும் கனி என்ற பெண்ணுக்குமிடையே காதல் மலர்கிறது. தொழிலாளர்களை மதிக்காத முதலாளித்துவ அதிகாரம், காதலுக்கு தடை போட, இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். கிராமத்தில் இருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்கள், வணிக நிறுவனத்தில் எத்தகைய கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர் என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்துகிறார் இயக்குனர். காலை முதல் இரவு வரை நின்று கொண்டு வேலை பார்ப்பது; மதிய உணவுக்கு வழங்கப்படும் அரை மணி நேரத்துக்கு மீறினால் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்; நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே அறையில் அடைத்து வைக்கப்படும் அவலம்; மோசமான உணவு கூடத்தில் வழங்கப்படும் மிக மோசமான உணவு; கண்காணிப்பாளர்களின் பாலியல் அத்துமீறல்கள்; கடுமையான தண்டனைகள்; நா கூசும் வார்த்தைகள் பிரயோகம் என இன்று ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் அவலத்தை அச்சு அசலாக எடுத்துரைக்கிறது காட்சிகள். ‘எச்சை கையை உதறுனா ஆயிரம் காக்காய் வரும். ஏதோ நம்ம ஊரு காரனுக, சாப்பாடுக்கு வழியில்லாம கெடக்குறாங்களே.னு உங்களை வேலைக்கு வச்சிருக்கிறேன்’ என கடையில் வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களிடம் அண்ணாச்சி பேசும் காட்சியில் கிழிபடத்துவங்குகிறது முதலாளித்துவ முகத்திரை. அதன்பின்னால் வரும் காட்சிகளில் முகத்திரை முழுவதும் கிழிபடுகிறது. பல காட்சிகளில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது. படத்தின் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கிடையே, கழிப்பிட முதலாளி, கண் தெரியாத நடைபாதை வியாபாரி, உடல் ஊனமுற்றவரும் அவரது மனைவியும், பொம்மையில் காதல் கடிதம் வைத்து விளையாடும் காதலர்கள் என அங்கங்கே ஹைக்கூ கதைகள். வேலை கேட்டு அழைந்து திரிந்து கழிப்பிடத்தை சுத்தம் செய்து முதலாளி ஆவது ‘அட’ போட வைக்கும் காட்சி. படத்தின் பலங்களில் ஒன்று வசனங்கள். ‘நான் இங்க தான் 30 வருஷமாக கடை வைச்சிருக்கேன். மனுசங்களா நம்பி கடை வைச்சிருக்கேன். நல்ல போகுது’ என நடைபாதை வியாபாரி கூறும் போது, 25 ஆண்டில் உருவான பிரம்மாண்ட கடைகளின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுகிறது. அதேபோன்று, ஊனமுற்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பெற்றுக்கொள்ளும் குழந்தையும் ஊனமுற்ற குழந்தையாக இருப்பது தொடர்பாக அந்த பெண் பேசும் வசனங்கள் அழகு. இது தவிர படம் முழுக்க யதார்த்த வசனங்கள் சிதற விட்டிருக்கிறார் வசனகர்த்தா ஜெயமோகன். (சூப்பர்வைசரின் ...... வசனங்களை சொல்லவில்லை). அடுத்தது நடிகர்கள். லிங்கமாக மகேஷ். தந்தையை இழந்த பின்னர், சோகமாக வேலைக்கு வருவதும், அங்கு காதல் வயப்படுவதும், காதலிக்கு தண்டனை வழங்கும் நிறுவனத்துக்கு எதிராக கொந்தளிக்கும் போதும் ஈர்க்கிறார். ‘கனி’யாக அஞ்சலி. சிரிப்பு, அழுகை, கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் கண்ணில் காட்டி அப்படியே ஈர்க்கிறார் அஞ்சலி. காதலனுடன் கோபம் கொண்டு இருக்கும் காட்சிகளில் அசத்தல். அண்ணாச்சியாக பழ.கருப்பையா, சூப்பர்வைசராக இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கன கச்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்கள். மிரட்டல் பார்வையும், ..... வார்த்தைகளுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் நடுங்க வைக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். இது தவிர கதாநாயகனின் நண்பராக வரும் பாண்டி உள்ளிட்டோரும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள். குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. மோசமான பின்னணி இசை உட்பட சில குறைகள் இருந்தாலும், நாம் கொண்டாட ஒரு படம் கிடைத்தாகி விட்டது. தமிழ் சினிமாவில் எப்போது வரும் நல்ல படங்களில் ஒன்று இந்த அங்காடித்தெரு. கேள்வி : வசந்தபாலனுக்கு... படத்துல முதல்ல போட்ற கார்டு மாதிரி, இந்த படத்துக்கும், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் எந்த சம்பந்தமும் நிஜமாவே இல்லையா?

January 27, 2010

என்ன கொடுமை சார் இது?

........படத்துக்கும், தலைப்புக்கும் விளக்கம் தேவையில்லை.

October 26, 2009

பேராண்மையும், ஊடகங்களின் பார்வையும்

‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன. சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.
01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது.
02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது?
03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது?
04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்?
05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?
வழக்கமான திரைப்படங்களில் இருந்து முழுமையாக வேறுபடுகிறது பேராண்மை திரைப்படம்.
01. முதலில் படத்தின் கதாநாயகன் துருவன். அம்பி, கிச்சா, ராகவன் என சிலரை மட்டுமே கதையின் நாயகர்களாக நம் முன்னிறுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து வேறுபடுகிறது பேராண்மை. துருவன் என்ற பழங்குடியின மக்களில் ஒருவரை கதாநாயகனாக காட்டியதற்கு இயக்குனர் சனநாதனை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்.
02. சாதி எதிர்ப்பு அரசியல். ‘அவன் என்ன சாதி, நாம என்ன சாதி, நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு’ என கதாநாயகன் துருவனை பற்றி நாயகிகள் விமர்சிக்கும் வசனங்களில் இளம் பெண்களிடம் படிந்துள்ள சாதியுணர்வை கூறியுள்ளதும், ‘எங்க ஆளுங்களுக்கு இங்கிலீஸ்ல பேசுனா புரியாது. உங்க கிட்ட பேசுன உங்களுக்கு புடிக்காது’ என நாயகிகளிடம் கூறும் இடங்களில் சாதி எதிர்ப்பு அரசியலை விதைத்துள்ளதிலும் இயக்குனர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
03. அதிகார வர்க்க எதிர்ப்பு. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பை அப்பட்டமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என்பதால் வனகாவலவரான கதாநாயகனிடம், தனது ‘ஷ¨’வை பாலிஸ் போட்டுவரச்சொல்லும் வன அதிகாரி, அதே காட்சியில் உயர்சாதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளை உட்கார வைத்து பேசுவது என பல இடங்களில் அதிகார வர்க்க எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடியரசுத்தலைவரிடம் பொன்வண்ணன் விருது பெறுவது அதிகார வர்க்க எதிர்ப்பை முழுமையாக அம்பலமாக்கும் காட்சி.
04. படத்தின் பெயரில் ஆண்மையிருக்குமாறு பேராண்மை என பெயரிட்டு, பெண்மை போற்றும் வகையில் பெண்களை கதையின் நாயகிகளாகவும், சகாசம் செய்பவர்களாகவும் முன்வைத்ததற்காகவும் பாராட்டுகள். ‘கிராமத்துக்கு பெண்களுக்கு முந்தானை விலக்கியே காலம் போச்சு; நகரத்து பெண்களுக்கு முடியை விலக்கியே காலம் போச்சு’ என்பன உள்ளிட்ட வசனங்கள் ‘நச்’.
05. தீவிரவாதிகள் என்றதும் இஸ்லாமியர்களை கண்முன் நிறுத்தும், திரைப்படங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது பேராண்மை. சர்வதேச கூலிப்படையினரின் முகத்தையும், ரசிகர்களுக்கு காட்டியது அழகு.

October 22, 2009

கருணாநிதியை நம்புவோருக்கு சில கேள்விகள்

‘ராஜீவ்காந்தி மரணத்துக்காக இன்னும் எத்தனை தமிழர்கள் சாகணும்’ யாழ்ப்பாணம் நாடாளுமன்றத்தில் நம் நாடாளுமன்ற குழுவிடம் ஒரு மாணவன் கேட்ட கேள்வி இது. வழக்கம்போல் மௌனத்தையே அந்த மாணவனுக்கு பதிலாக அளித்தது நாடாளுமன்ற குழு. இதேபோன்று இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் சித்ரவதை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் தரப்பில் கேட்ட கேள்விகளில் பெரும்பாலான கேள்விகளுக்கு நாடாளுமன்ற குழுவிடம் பதில் இல்லை.
வன்னி முகாம்களுக்கு இன்பச்சுற்றுலா சென்று, 5 நாட்களுக்கு பின்னர் திரும்பிய நாடாளுமன்ற குழுவினர், பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசக்கூடாது என்பதற்காகவே விமான நிலையத்துக்கு சென்று அவர்களை அழைத்து வந்தார் கருணாநிதி. அதன்பின்னர், சென்று வந்தவர்களின் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தார் கருணாநிதி. முகாம்களில் இருந்து பல ஆயிரம் பேர் வெளியேறுவார்கள் என விவரித்தார் அவர். இதை எவன் நம்புவான்.
‘ஓநாயுடன் நீ வசித்தால், ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்’. என் நண்பர் ஒருவர் அடிக்கடி உச்சரிக்கும் இந்த பழமொழிக்கு நீண்ட நாட்களாக உடன்படாமல் இருந்தவன் நான். ஆனால், இதோ இப்போது உடன்படுகிறேன். கருணாநிதி எனும் ஓநாயுடன் இருந்தவர்கள் (தி.மு.க.வினர்) எல்லாம், இப்போது அவர் போல் ஊளையிடத் துவங்கிவிட்டனர்.
‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்று தந்துவிட்டார் கருணாநிதி’ என பிரசாரம் செய்யத்துவங்கியுள்ளனர். ‘இலங்கை தமிழர்களுக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத்தந்த கலைஞருக்கு பாராட்டு. வாழ்க தலைவர் கலைஞர்’ என குறிப்பிட்டு சுவரொட்டிகளை ஊரெங்கும் ஒட்டி வருகின்றனர் தி.மு.க.வினர். எவன் நம்புவது இதை? இது உண்மை என நம்ப யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், இது உண்மையாக இருக்குமோ என சிலர் எண்ணலாம். அதோ அவர்களுக்கு சில கேள்விகள்.
01.‘தமிழீழத்தை ஆதரிக¢காதவன் சோற்றாலடித்த பிண்டம்’ என்று முன்னர் முழங்கிய கருணாநிதி, ‘ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் நிலைதான் எனது நிலை’ ‘இலங்கையில் தனிஈழம் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல் அங்குள்ள தமிழர்களின் சம உரிமைக்குப் போராடுவோம். எதிலும் நீக்குப் போக்கு வேண்டும்’ என தற்போது கூறினாரே அதற்கு காரணம் மத்தியில் ஆட்சியில் பங்கு போய்விடுமோ என்ற பயம் காரணமில்லை என நினைக்கிறீர்களா?
02. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில், ‘‘இலங்கையில் நம் சகோதரர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உயிர் இங்கே போனால் என்ன? கடல் கடந்து அங்கே போய் போனால் என்ன? இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வர மத்திய அரசு அந்நாட்டை நிர்ப்பந்திக்க வேண்டும். இல்லையென்றால் இனியும் இந்தப் பதவி எதற்கு என்று யோசிக்க வேண்டியிருக்கும்’’ என்று கருணாநிதி முழங்கினாரே? அந்த கோபம் அதன் பின்னரும் இருந்தது என நம்புகிறீர்களா?
03. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்துக் கட்சி தலைவர் கூட்டத்தை கூட்டிய கருணாநிதி, போரை நிறுத்த நடவடிக்கை எடுகுகப்படாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது என தீர்மானம் நிறைவேற்றினாரே? எம்.பி.க்கள் ஏன் ராஜினாமா தீர்மானம் என்ன ஆனது என தெரியாத நிலையில், இந்த தீர்மானத்தால், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டதாக நீங்கள் நம்புகிறீர்களா?
04. காங்கிரசை எதிர்க்கிறார்கள், இது தேச விரோதம்?! என கொதித்தெழுந்த கதர் சட்டைகள் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்களில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள் என்று கூக்குரலிட்டன. இதையடுத்து, வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் காங்கிரஸ் தூண்டுதலால் கைது செய்யப்படவில்லை. உண்மையில் இறையாண்மைக்கு எதிராக பேசினார்கள் என உங்களால் கூற முடியுமா?
05. ‘அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் தீர்மானங்களையும், என் வேண்டுகோளையும் படிப்படியாக நிறைவேற்ற முனைந்ததற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ கருணாநிதி வெளியிட்ட அறிக்கை இது. இது உண்மை என நீங்கள் நம்புகிறீர்களா?
06. இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு கோரி, முத்துக்குமாரில் துவங்கி பலர் தீக்குளித்து மாண்டார்களே, அவர்களுக¢காக இரங்கல் தெரிவிக்காத முதல்வர் கருணாநிதி. மாறாக, அவர்களை ‘வறுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்’ என்றும், ‘வயிற்று வலி காரணம்’ என்றும், ‘மனநிலை பாதிக¢கப்பட்டவர்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக¢ கொண்டு செத்துப் போனார்கள்’ என்றும் தனது போலீசை விட்டு அறிவிக்க வைத்தாரே? கருணாநிதியின் இந்த கருத்தில் ஒத்துப்போக முடியுமா உங்களால்?
07. இலங்கைத் தமிழர் பிரச்னையில், சீமான், அமீரைத் தொடர்ந்து திரையுலகத்தினர் பலரும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில், மத்திய அரசை கடுமையாகக¢ கண்டிக்கத் தொடங்கினர். இந்த நேரத்தில் நிதி அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘திரைப்படத்துறைக்கு ஏராளமான சலுகைகள் அளித்தும் அதன் பலன் பொதுமக்களுக்குச் சென்றடையாத நிலை தொடர்வதால் இச்சலுகையை மறுபரிசீலனை செய்ய செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்ததே, அது ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. இலங்கையில் நடந்த போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள், தளபதிகள், வீரர்களும் அவர்களுடன் கொல்லப்பட்டனர். பிரபாகரன் இறந்து விட்டாரா என கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘தனிப்பட்ட விடுதலைப் புலிகள் குறித்தோ, தனிப்பட்ட மனிதர்கள் குறித்தோ நான் பேச விரும்பவில்லை’’ என்று பதிலளித்தார். அது சரி அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்களே, அதற்கு கூட கருணாநிதி கண்டனம் தெரிவிக்காதது ஏன்? 2007ல் விடுதலை புலிகள் அமைப்பினை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்காக கண் கலங்கிய கருணாநிதி, இந்த நேரத்தில் மவுனமாக இருந்ததற்கு காரணம் ஏதும் இல்லை என நம்புகிறீர்களா?
09. அப்பட்டமான தமிழினப் படுகொலைகளைச் செய்த ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், மேற்கு உலக நாடுகளும் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அமைச்சரவையில் கூடுதல் இடம் கேட்கத் தெரிந்த கலைஞர் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் என கருதுகிறீர்கள் நீங்கள்?
10. இந்த கேள்விக்கு பின்னரும் இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்வு காண முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார் என நம்புகிறீர்களா?