March 18, 2009
ஒரு எம்.பி. தொகுதிக்கு கொள்கையை அடமானம் வைத்த திருமா
March 16, 2009
என்ன ஆனது இலங்கை பிரச்னை?
March 13, 2009
கம்யூனிசம் பேசும் ‘காஞ்சிவரம்’
கம்யூனிசம் இல்லாவிடில் தொழிலாளர்கள் நிலை என்னவாகி இருக்கும்? எனும் மிகப்பெரிய கேள்விக்கு 1.30 மணி நேரம் நகரும் மன்னிக்கவும் நம்மை நகர்த்தும் இந்த படத்தில் அவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். தனது தாய்க்கும், மனைவிக்கும் பட்டு சேலை வாங்கித்தர விரும்பி அதில் தோல்வியடைந்து, மகளின் திருமணத்துக்கு எப்படியாவது பட்டு சேலை வாங்கித்தந்தாக வேண்டும் என முடிவு செய்து, அதற்காக நெசவு செய்யும் இடத்தில் இருந்து பட்டு நூலை திருடி வந்து நெசவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதற்கிடையே நோய் பாதிப்புக்குள்ளாகும் பிரகாஷ்ராஜின் மனைவி இறக்கிறார். தொடர்ந்து மகளுக்காக பட்டு சேலை தயாரிப்பு பணியில் அவர் ஈடுபடுகிறார். இதற்கிடையே, ஊருக்கு தொழிலாளர்கள் நிலையை காண வரும் கம்யூனிசவாதி ஒருவரிடம், கம்யூனிச கொள்கைகளை கேட்கும் பிரகாஷ்ராஜ், அதில் ஆர்வமாக ஈடுபட துவங்குகிறார். கம்யூனிசம் தடை செய்யப்பட்டிருந்த அந்த காலத்திலும் மறைமுகமாக இயக்கத்தை நடத்தி, நெசவாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தோழர்கள். இதற்காக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார்.
இதனிடையே மகளின் திருமண தேதி நெருங்குகிறது. திருமணத்துக்குள் பட்டு சேலை தயார் செய்ய வேண்டும் என்பதால், போராட்டத்தை தன்னிச்சையாக கைவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தொழிலாளர்கள் பெரும்பகுதியினர் பிரகாஷ்ராஜூடன் பணிக்கு திரும்புகின்றனர். மீண்டும் பணிக்கு சென்று பட்டுநூலை திருடி சேலையை செய்ய துவங்குகிறார். ஆனால், அடுத்த முறை பட்டு நூலை திருடும்போது கையும் களவுமாக சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். இதன் பின்னர் சிறைக்கு செல்கிறார். இதனிடையே கிணற்றில் விழுந்து கிடை பிணமாகிறார் பிரகாஷ்ராஜின் மகள். அவரை பார்க்க 2 நாட்கள் சிறைக்காவலில் செல்லும் பிரகாஷ்ராஜ், மகளை கவனிக்க யாரும் இல்லாததால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்கிறார். அதுவரை தான் நெய்த பட்டு சேலையால் மகளின் உடலை மூட, ஏழை நெசவாளியின் நிறைவேறாத விருப்பத்துடன் முடிகிறது திரைப்படம்.
கம்யூனிசம் நம் நாட்டில் ஏற்படுவதற்கு முன்னர் தொழிலாளர்கள் பட்ட வேதனையை தத்ரூபமாக விளக்குகிறது படத்தின் முதல் பாதி காட்சிகள். அதற்கு மிக அழகாக பொருந்தியுள்ளது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை சூழல். தனது முதலாளியின் மகளுக்கு பட்டு சேலையை நெயவு செய்து தந்து விட்டு, அதனை பார்க்க தனது மனைவியுடன் ஓடிச்சென்று மறைந்திருந்து பார்ப்பது; பட்டு குறைந்ததால் காட்டு மிராண்டித்தனமாக நெசவாளி ஒருவர் தாக்கப்படுவது; வீட்டில் தொழில் செய்ய அனுமதி மறுத்து அனைவரையும் ஒரே இடத்தில் தொழில் செய்ய கட்டாயப்படுத்துவது என கம்யூனிசம் தோன்றுவதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விவரித்து விரிகிறது முதல்பாதி காட்சிகள். கம்யூனிசவாதி நாடகம் மூலம் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்க்க தூண்டும் காட்சிகள் அழகு.
பட்டு சேலை நெசவு செய்வதில் மிகச்சிறந்த கைத்தறி நெசவாளியாக பிரகாஷ்ராஜ். தாய், மனைவி, மகள் என மூவருக்கும் பட்டுசேலை வாங்கித்தர விரும்பி தோற்கும் நெசவாளியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். பிரகாஷ்ராஜின் மனைவியாக ஷ்ரேயா. மிக அழகான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். பிரகாஷ்ராஜின் மகள், நண்பர் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். தனது மனைவி இறப்பதற்கு முன்னால், தனது மகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் பட்டு சேலையை மனைவிக்கு பிரகாஷ்ராஜ் காட்டுவதும், அதனை கண்டு புன்னகைத்தவாறு இறப்பதும் மனதை தைக்கிறது. அதேபோன்று இறுதி காட்சியில் மகளை தூக்கி கொண்டு தயார் செய்து முடிக்கப்படாத பட்டுசேலையை காட்டும் போது மனது மேலும் இறுகுகிறது.
இறுதி காட்சியில நெயவு செய்த வரை சேலையை கிழித்துக்கொண்டு வந்து மகளின் சடலத்துக்கு பிரகாஷ்ராஜ் போர்த்துவதும், அது போதாமல் இருப்பதும்; நெசவாளர்கள் தற்கொலை காட்சிகள் உள்ளிட்டவை நெசவாளர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள். கம்யூனிச பாதையில் செல்லும் பிரகாஷ்ராஜ், சுயநலத்தால் திடீரென பாதைமாறுவதால் ஏற்படும் பிரச்னைகளும், அதன் மீதான வசனங்களும் நெகிழவைக்கின்றன. வசனங்களில் நெசவாளர்களின் அழகிய வாழ்வியலும், சோகமும் வெளிப்படுகின்றன. மிக குறைந்த நேரமே என்னை பயணிக்க வைத்த போதும், என்னை நீண்ட தூரத்துக்கு அழைத்து சென்றது காஞ்சிவரம். பொறுக்கி, போக்கிரி, திமிரு என தமிழ் பெயர்களில் படம் எடுத்து, தமிழை வாழ வைக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு ... காஞ்சிவரத்தை பாருங்க.