ஆர்ப்பாட்டம், மறியல், உண்ணாவிரதம், பந்த், கடையடைப்பு, மனித சங்கிலி என தமிழகத்தில் கடந்த இரு மாதங்கள் போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் எதிரொலித்தது இலங்கை தமிழர் பிரச்னை. முத்துக்குமாரில் துவங்கி நடந்த பல தீக்குளிப்பு சம்பவங்கள், இலங்கை தமிழர் பிரச்னையை விஸ்வரூபமாக்கியது.
இந்த போராட்டங்களெல்லாம் நடந்த போது, இலங்கையில் நாளன்றுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வந்தனர். இன்று தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கான போராட்டங்கள் பன்மடங்கு குறைந்துள்ளது. ஆனால், இலங்கையில் இன்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட், பாரதீய ஜனதா, விடுதலை சிறுத்தைகள், தமிழர் பாதுகாப்பு இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒரு புறம். தி.மு.க. காங்கிரஸ் கட்சிகள் ஒருபுறம் என திரும்பிய திசையெங்கும் இலங்கை தமிழர்களை காக்க வலியுறுத்தி விதவிதமான போராட்டங்கள் நடந்தன.
ஆனால், இப்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இருந்த கட்சிகள் திசைமாறி போயுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க போராட்டங்களில் தி.மு.க., காங்கிரசை விமர்சிக்க வேண்டியது தவிர்க்க இயலாத சூழல் உள்ள நிலையில், தி.மு.க.வுடன் கூட்டணி வகிக்கும் விடுதலை சிறுத்தைகளும், தி.மு.க.கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்பதால் பா.ம.க.வும் இப்போது போராட்ட நடவடிக்கைகளில் இருந்து வெளியேறியுள்ளன.
இதேபோல், சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் திரைப்படத்துறையினரும், கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் பெரியார் திராவிடர் கழகத்தினரும், நாஞ்சில் சம்பத் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதால் ம.தி.மு.க.வினரும் போராட்ட நடவடிக்கைகளில் மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது இவர்களின் கோரிக்கை இலங்கை தமிழர் பிரச்னையை கண்டித்து அல்ல. கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி.
அதேபோல், இலங்கை தமிழர்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள், போலீசாரை கண்டித்து போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டம், கல்லூரி மூடல் சம்பவத்தால் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், இப்போது இலங்கை தமிழர் பிரச்னையை கையில் எடுக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இனி இலங்கை தமிழர் பிரச்னைகளுக்கான போராட்டங்கள் இருக்காது. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல்ஙகள் எழும். ஆனால், அவை இலங்கை தமிழர் நலனை காப்பதாக இருக்காது. மாறாக வாக்குகளை கவருவதற்காக இருக்கும்.
தேர்தல் தேதி அறிவிப்பு நம் இன உணர்ச்சியை அகற்றும் என்றால், நம் இன உணர்ச்சியை என்னவென்று சொல்வது?
No comments:
Post a Comment