February 21, 2009

தேர்தலே ஆயுதமாக . . .

‘என்னை கைது செய்வார்கள், என் எண்ணத்தை என்ன செய்வார்கள். நான் பிரபாகரனின் தம்பி, ஓடி ஒளிய மாட்டேன்’. 3வது முறையாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்ட சீமானின் முழக்கம் இது.
இந்தியா இறையாண்மைக்கு பேசியதாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் இயக்குனர் சீமான். இந்திய இறையாண்மைக்கு எதிராக என அரசால் கூறப்படுவது, தமிழ் ஈழத்தை ஆதரிப்பது. தற்போது தனி ஈழ கோஷத்தை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திராகாந்தி, அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் கனவு தனி ஈழம். கட்சியின் பிரதான தலைவர்களின் கனவை முழங்கும் ஒருவரை, கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வும், காங்கிரசும் துடிப்பதும், அதனை அவசர அவசரமாக தி.மு.க. அரசு செய்து முடிப்பதும் எப்படி விமர்சிப்பது என கூற முடியவில்லை.
இலங்கையில் ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது என கூறிய பிரணாப் முகர்ஜியை கண்டிக்காத காங்கிரசும், அ.தி.மு.க.வும், தனி ஈழம் கோரிய ஒருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு கெடு கொடுத்து நாங்கள் கைது செய்வோம் என கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. சீமான் கைது என்பது வெறும் சம்பவமாக இருக்க கூடாது. முத்துக்குமாரின் வீர மரணம் முதல் சீமான் உள்ளிட்டோர் கைது சம்பவம் வரை இன்னும் ஓரிரு மாதங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். எங்கள் தமிழினத்தை காக்க வராத யாருக்கும் நாங்கள் வாக்கிடமாட்டோம் என புறக்கணிக்க வேண்டும். எங்கள் இனத்தினரின் உயிரை விட எங்களுக்கு வேறேதும் பெரிதல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டும்.
ஓரினம் அங்கு முழுமையாக கொல்லப்பட்டு வருவதை கண்டு இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என போராட்டங்களை தொடர்வோம். இந்த போராட்டத்துக்கெல்லாம் இறுதி வடிவமாக நாம் தேர்தலை பயன்படுத்துவோம். நம் தமிழின விடிவுக்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். பாடம் கற்பிக்கும் நேரம் நெருங்குகிறது.

February 19, 2009

திசை மாற்றப்படும் இலங்கை பிரச்னை?

இலங்கை தமிழர் பிரச்னைக்காக போராடி வரும் சமூகத்தினரில், மாணவர்களுக்கு அடுத்தபடியாக தீவிரமாக இருந்து வருவது வக்கீல்கள். இந்த தீவிரம் தான் சுப்பிரமணியசுவாமி மீது தாக்குதலை ஏற்படுத்தவும் வித்திட்டது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளையும், விடுதிகளையும் மூடிய தமிழக அரசு, வக்கீல்கள் போராட்டத்தை என்ன செய்வது என தெரியாமல் விழித்து வந்தது. இந்த நிலையில் தான் சுப்பிரமணியசுவாமி மீதான தாக்குதல் அரங்கேறியது. இந்நிலையில், இலங்கை தமிழர் ஆதரவு நிலையில் இருந்த வக்கீல்கள் மீது தாக்குதல் சம்பவம் நடத்தி, வக்கீல்களை அரசுக்கு எதிரானவர்களாகவும், காவல்துறைக்கு எதிரானவர்களாகவும் காட்டியுள்ளது தமிழக அரசு. இதன் மூலம் வக்கீல்கள் இலங்கை பிரச்னைக்கு ஆதரவு என்ற செய்தி வெளிவராது. இலங்கை பிரச்னை மறந்து, காவல்துறையை கண்டித்தும், அரசை கண்டித்தும் பிரசாரங்களை நடத்த கூடும் என அரசு நினைத்திருக்க கூடும். குறிப்பிடும்படி, இலங்கை தமிழர் பிரச்னையில் குரல் எழுப்பிய வழக்கறிஞர்கள் மற்றும் மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை போன்ற இலங்கை தமிழர் ஆதரவு ஊடகங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் தாக்கப்பட்டுள்ளனர். சுப்பிரமணியசுவாமி நீதிமன்றத்தில் ஆஜரானதும், வக்கீல்கள் நீதிமன்றத்தில் தாக்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு, சுப்பிரமணியசுவாமியை இரு தினங்களுக்கு முன்னர் தாக்கியதற்கா இந்த தடியடி போராட்டம். நீதிமன்ற வளாகத்தில் போலீசார் எழுப்பியுள்ள இந்த தடியடி சம்பவம், இலங்கை தமிழர் பிரச்னையை திசை திருப்பத்தானா? இனத்தை அழிக்கும் கும்பலுக்கு இணங்கி போகும் அரசிடம் இதை விட வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

February 14, 2009

இலங்கை பிரச்னையும், இந்திய அரசியலும்

‘ஓநாயிடம் அன்பு செலுத்தாதே; அது ஆட்டிற்கு செய்யும் கேடு’ என பழமொழி உண்டு. இலங்கை தமிழர் பிரச்னையில் இதனை அப்பட்டமாக செய்து வருகிறது இந்திய அரசு. லட்சக்கணக்கான தமிழர்கள் ஆடுகளை போல் இலங்கையில் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், ஓநாயான இலங்கை அரசுக்கு ஆயுதத்தை வழங்கி, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.

‘மேற்கே பார்த்துக்கொண்டிருப்பவர்கள், சூரிய உதயத்தை பார்க்க இயலாது’ என்பது போல, இன்னும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி வருகின்றன தமிழக அரசியல் கட்சிகள். தேர்தல், கூட்டணி, வாக்கு என்ற நிலையால் பல பிரிவுகளாக பிரிந்து பயனற்று போராடிக்கொண்டிருக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். இலங்கை பிரச்னையில் என்னதான் நினைக்கின்றன இந்த கட்சிகள் இது குறித்த பதிவு தான் இது.

திராவிட முன்னேற்ற கழகம் :

தமிழகத்தில் 1957ம் ஆண்டு தேர்தல் மூலம் அரசியல் களத்தில் அறிமுகமான தி.மு.க. 1967ம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. பல முறை தமிழக அரசை நிர்வகித்து வந்த தி.மு.க. இலங்கை பிரச்னையில் ஒரு காலத்தில் மிகவும் ஈடுபாட்டுடன் இருந்து வந்தது. தனி ஈழம் தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கிட்டத்தட்ட விடுதலை புலிகள் நேரடியாக ஆதரித்து வந்தது. இவையெல்லாம், ராஜீவ்காந்தி உயிரிழப்பு வரை. ராஜீவ்காந்தி உயிரிழப்புக்கு பின்னர், தனி ஈழம் கோரிக்கையை கைவிட்டது. கூட்டணி, ஆட்சிப்பொறுப்பு என அதீத ஆசைகளால், கொள்கைகளில் இருந்து புரண்டது. இதன் தொடர்ச்சியாக திராவிட கொள்கைகளையும் தூக்கி எரிந்தது. தற்போது விடுதலை புலிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என நேரடியாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. இருப்பினும் வாக்கு வங்கிக்காக இலங்கை தமிழர் பிரச்னையில் தீர்மானங்களாக நிறைவேற்றி தீர்த்துக்கொண்டுள்ளது. இதில் ஒரு தீர்மானமும் நிறைவேறியதாக தெரியவில்லை. அனேகமாக இலங்கையில் தமிழர்கள் முழுவதுமாய் கொன்றழிக்கப்படும் வரை இவர்கள் ஓயாது தீர்மான நிறைவேற்ற போராட்டங்களை நடத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் :

இந்த கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். விடுதலை புலிகளை நேரடியாக ஆதரித்தவர். இலங்கை தமிழர் பிரச்னையில் சுமூக முடிவு ஏற்பட வேண்டியது அவசியம் என எண்ணியவர், அதற்காக போராடியவர். ஆனால், இவரது இந்த கட்சி, தற்போது நேர்எதிர் திசையில் பயணித்து வருகிறது. விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என பகிரங்கமாக குற்றம்சாட்டிய இந்த கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா, போரில் மக்கள் இழப்பு புதிதல்ல, எனக்கூறி தமிழர்களின் இறப்பை நியாயப்படுத்தியவர். தற்போது தேர்தல் எனும் ஞானக்கண் திறக்க, திடீரென ஈழத்தமிழர்கள் மீது பாசமும், பரிவும் தொற்றிக்கொண்டுள்ளது.

காங்கிரஸ் :

‘கடைசி பல் இருக்கும் வரை, நரிக்கு பக்தி வராது’ என்பார்கள். காங்கிரஸ் கட்சிக்கு இது நன்றாக பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கு ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை பற்றி கவலையில்லை. அங்கு விடுதலை புலிகள் அழிக்கப்பட வேண்டும். இதற்காக அந்நாட்டு ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்கி, ஒரு இனத்தையே அஅழித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 1967ம் ஆண்டு தி.மு.க.விடம் ஆட்சிப்பொறுப்பை விட்டுக்கொடுத்த காங்கிரஸ், தனது இந்த கேவலமான நிலையின் மூலம் இனி, தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பு ஏற்க முடியவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் :

இலங்கை தமிழர் பிரச்னையில் கடந்த 26 ஆண்டுகளாக ஒரே நிலைப்பாடுடன் உள்ள கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். கடந்த 1983ம் ஆண்டு முதல் இலங்கை தமிழர் பிரச்னையை ஒரே சீராக எழுப்பி வருகிறது. விடுதலை புலிகள் பயங்கரவாத இயக்கம், அவர்கள் ஆயுதம் தூக்குவது சரியல்ல என்பது இவர்கள் வாதம். அதேபோல், ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலையும் இக்கட்சி கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் :

இலங்கை பிரச்னையில் திடீரென ஆவேசமாக எதிர்ப்பினை தெரிவித்துள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட போது, விடுதலை புலிகளை கடுமையாக கண்டித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது கிட்டத்தட்ட ஆதரவு நிலைக்கு சென்றுள்ளது. ஈழத்தமிழர்கள் பாதுகாப்புக்கு தொடர் போராட்டங்களை இக்கட்சி தற்போது நடத்தி வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணியால் ம.தி.மு.க.வின் நிலைப்பாடும், தி.மு.க.வுடனான கூட்டணியால், விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடும், யாருடன் கூட்டணி என தெரியாததால் பா.ம.க.வின் நிலைப்பாடும் இப்பிரச்னையில் எடுபடுமா என்பது தெரியவில்லை.

அங்கு அழிவது நம் இனம் என நினைத்து, இதனை அரசியல் நோக்கமாக கருதாமல், தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தாமல் ஒரே குரலில் எதிர்ப்பு தெரிவித்தால், நம் குரலை எதிர்நோக்கி காத்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது நிச்சயம்.

February 6, 2009

வெட்கித் தலை குனிகிறேன்

‘‘இலங்கையின் என்ன தான் நடக்கிறது?’’
மக்களிடம் பல நூறு யூகங்களுடன் உலவும் இந்த கேள்விகள் போதும். இலங்கை பிரச்னையில் தமிழக ஊடகங்களின் நிலையை எடுத்துரைக்க. இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்களை போல, ஊடகங்களும் மாறுபட்ட, தெளிவற்ற நிலையை பின்பற்றுகிறது. அரசியல் கட்சிக்கும், தலைவர்களுக்கும் இதில் அரசியல் லாபங்கள் நிறைய. ஆனால், ஊடகங்களுக்கு? புருவம் உயர்த்தும் இந்த கேள்விக்கு யாரிடமும் பதில்கள் இல்லை. ஆனால், அவர்களுக்கு வேறு வகையிலான லாபங்கள் உள்ளதாக வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள். ஊடகங்கள் இலங்கை பிரச்னையில் ஒரு மோசமான நிலையை கையாண்டு வருகின்றன. ஏராளமான தமிழ் பத்திரிக்கைகள் இருந்தபோதும், இலங்கை இனப்பிரச்னையின் உண்மையான கோணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் மக்களின் பிரச்னையில் கூட, தமிழ் ஊடகங்கள் இந்த நிலை கொண்டிருப்பதற்கு காரணம் என்ன? இதற்கும் பதிலளிக்க யாரும் முன்வர மாட்டார்கள். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது தொடர்பான பல செய்திகள் மக்கள் அறிந்திருக்கவில்லை. காரணம் இதனை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட சிடிக்கள் பார்த்தவர்களுக்கு, இலங்கையில் இப்படிப்பட்ட தாக்குதல் நடக்கின்றனவா என கண்கள் விரிந்ததை மறுக்க முடியாது. இதுவே தமிழ் ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படவில்லை என்பதற்கு உதாரணம். ஒரு இனம் அங்கு அழிக்கப்படுகிறது என்பதை விட, நம் இனம் அங்கு அழிக்கப்படுகிறது என்ற எண்ணம் தமிழ் ஊடகங்களுக்கு இல்லை. இப்பிரச்னையில் உண்மைகள் வெளியிடப்படாத அதே அளவு பொய்களும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ‘இன்னும் சில தினங்களில் விடுதலை புலிகளை அழித்து விடுவோம்’ என்ற அறிவிப்பை சில ஆண்டுகளாக அறிவித்து வருகிறது தமிழ் ஊடகங்கள். தமிழ் மக்கள் சாகிறார்கள் என்பதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் தலைவர்கள் பேட்டியில் சொன்னாலன்றி எழுதுவதில்லை. இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை கேட்டறிந்து வெளியிட முன்வரவில்லை. இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிந்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், சிங்கள ராணுவ தளபதியின் பேச்சுக்கள், பேட்டிக்கள், அறிக்கைகள் என இலங்கை ஆதரவு செய்திகள் தினமும் வெளியாகின. இலங்கையில் எத்தனை தமிழர்கள் இருக்கிறார்கள். எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பன போன்ற புள்ளிவிவரங்கள், இலங்கை அரசின் அறிவிப்பாக வெளியிடப்படுகின்றனவே தவிர, ஆராய்ந்து வெளியிடப்படவில்லை. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இறந்தது இதன் மூலம் கணக்கில் கொண்டு வரப்படாமல் போனது. பார்ப்பனீய பத்திரிக்கைகள் இதற்கு முழு முதற்காரணம். நாட்டின் ‘நான்காவது தூண்’ என அழைக்கப்படும் ஊடகங்கள், நான்காம் தரமானது என விமர்சிக்க நேரிடுமோ என நான் அஞ்சுகிறேன். தமிழர்கள் படும் துன்பங்களும், கொடுமைகளும் விழியை நனைத்து கண்ணீராக வெளியேற, உங்கள் முன் வெட்கித் தலைகுனிகிறேன் நானும் ஒரு பத்திரிக்கையாளனாக. . .