கதாநாயகனுடன் 3 நண்பர்கள்; ஒரு காதலி; கத்தியும், ரத்தமுமாக வன்முறையுடன் காதலை கலந்து தந்தால் அது தான் யதார்த்த சினிமா என நம்பிக்கொண்டிருந்த நம்மை இது... இது ... இது தான் யதார்த்தம் என அறைந்து சொல்கிறது அங்காடி தெரு.
சென்னையின் நெரிசல் மிகு வீதிகளில் ஒன்றான ரங்கநாதர் (அங்காடி) தெரு தான் கதையின் களம். இந்த தெருவில் அமைந்துள்ள ஜவுளி வணிக நிறுவனத்தில் தொழிலாளர்கள் படும் அவலத்தை கண் முன் காட்டி, நம்மை கலங்கடிக்கிறது படத்தின் காட்சியமைப்பு.
கதாநாயகன், கதாநாயகியின் பெயரைத்தொடர்ந்து, உதவி இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், இணை இயக்குனர் பெயர்கள் (வழக்கமான தமிழ் சினிமாவின் விதிகளை மீறி) தோன்றி மறையும் போது, நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார் வசந்தபாலன். நள்ளிரவில் பேருந்துக்கு காத்திருக்கும் கதாநாயகனும், கதாநாயகியும் கால்களை மிதித்து விளையாடுவதில் துவங்கி, கதாநாயகி கால்களை இரண்டையும் இழப்பதில் முடிகிறது திரைப்படம்.
திருநெல்வேலி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் லிங்கம். தன் மகனை எப்படியும் இன்ஜினியராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் லிங்கத்தின் தந்தை, திடீரென விபத்தில் இறக்கிறார். இதனால் முதல் மதிப்பெண் எடுத்தும், மேல்படிப்புக்கு செல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார் லிங்கம். ‘ஆட்கள் தேவை’ என்ற அழைப்பை ஏற்று, நேர்முகத்தேர்வுக்கு செல்கிறார் லிங்கம்.
‘அப்பா, அம்மா இல்லாத ஆளா பார்த்து எடுங்க. அப்ப தான் நாம சொல்றத கேட்டுட்டு இருப்பான்’ என்ற உத்தரவுக்கிணங்க பெற்றோரை இழந்து, ஏழ்மையில் தவிப்பவர்கள் மட்டும் வேலைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அங்கு செல்லும் லிங்கத்துக்கும், தன்னுடன் பணியாற்றும் கனி என்ற பெண்ணுக்குமிடையே காதல் மலர்கிறது. தொழிலாளர்களை மதிக்காத முதலாளித்துவ அதிகாரம், காதலுக்கு தடை போட, இருவரும் என்ன ஆகிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
கிராமத்தில் இருந்து கொண்டுவரப்படும் தொழிலாளர்கள், வணிக நிறுவனத்தில் எத்தகைய கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர் என்பதை காட்சிக்கு காட்சி உணர்த்துகிறார் இயக்குனர். காலை முதல் இரவு வரை நின்று கொண்டு வேலை பார்ப்பது; மதிய உணவுக்கு வழங்கப்படும் அரை மணி நேரத்துக்கு மீறினால் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் அபராதம்; நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே அறையில் அடைத்து வைக்கப்படும் அவலம்; மோசமான உணவு கூடத்தில் வழங்கப்படும் மிக மோசமான உணவு; கண்காணிப்பாளர்களின் பாலியல் அத்துமீறல்கள்; கடுமையான தண்டனைகள்; நா கூசும் வார்த்தைகள் பிரயோகம் என இன்று ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் அவலத்தை அச்சு அசலாக எடுத்துரைக்கிறது காட்சிகள்.
‘எச்சை கையை உதறுனா ஆயிரம் காக்காய் வரும். ஏதோ நம்ம ஊரு காரனுக, சாப்பாடுக்கு வழியில்லாம கெடக்குறாங்களே.னு உங்களை வேலைக்கு வச்சிருக்கிறேன்’ என கடையில் வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்களிடம் அண்ணாச்சி பேசும் காட்சியில் கிழிபடத்துவங்குகிறது முதலாளித்துவ முகத்திரை. அதன்பின்னால் வரும் காட்சிகளில் முகத்திரை முழுவதும் கிழிபடுகிறது. பல காட்சிகளில் இயக்குனரின் உழைப்பு தெரிகிறது.
படத்தின் தொழிலாளர்களின் பிரச்னைகளுக்கிடையே, கழிப்பிட முதலாளி, கண் தெரியாத நடைபாதை வியாபாரி, உடல் ஊனமுற்றவரும் அவரது மனைவியும், பொம்மையில் காதல் கடிதம் வைத்து விளையாடும் காதலர்கள் என அங்கங்கே ஹைக்கூ கதைகள். வேலை கேட்டு அழைந்து திரிந்து கழிப்பிடத்தை சுத்தம் செய்து முதலாளி ஆவது ‘அ
ட’ போட வைக்கும் காட்சி.
படத்தின் பலங்களில் ஒன்று வசனங்கள். ‘நான் இங்க தான் 30 வருஷமாக கடை வைச்சிருக்கேன். மனுசங்களா நம்பி கடை வைச்சிருக்கேன். நல்ல போகுது’ என நடைபாதை வியாபாரி கூறும் போது, 25 ஆண்டில் உருவான பிரம்மாண்ட கடைகளின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுகிறது. அதேபோன்று, ஊனமுற்ற ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பெற்றுக்கொள்ளும் குழந்தையும் ஊனமுற்ற குழந்தையாக இருப்பது தொடர்பாக அந்த பெண் பேசும் வசனங்கள் அழகு. இது தவிர படம் முழுக்க யதார்த்த வசனங்கள் சிதற விட்டிருக்கிறார் வசனகர்த்தா ஜெயமோகன். (சூப்பர்வைசரின் ...... வசனங்களை சொல்லவில்லை).
அடுத்தது நடிகர்கள். லிங்கமாக மகேஷ். தந்தையை இழந்த பின்னர், சோகமாக வேலைக்கு வருவதும், அங்கு காதல் வயப்படுவதும், காதலிக்கு தண்டனை வழங்கும் நிறுவனத்துக்கு எதிராக கொந்தளிக்கும் போதும் ஈர்க்கிறார். ‘கனி’யாக அஞ்சலி. சிரிப்பு, அழுகை, கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் கண்ணில் காட்டி அப்படியே ஈர்க்கிறார் அஞ்சலி. காதலனுடன் கோபம் கொண்டு இருக்கும் காட்சிகளில் அசத்தல். அண்ணாச்சியாக பழ.கருப்பையா, சூப்பர்வைசராக இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கன கச்சிதமாக பாத்திரத்தில் பொருந்தியிருக்கிறார்கள். மிரட்டல் பார்வையும், ..... வார்த்தைகளுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நம்மையும் நடுங்க வைக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ். இது தவிர கதாநாயகனின் நண்பராக வரும் பாண்டி உள்ளிட்டோரும் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.
குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. மோசமான பின்னணி இசை உட்பட சில குறைகள் இருந்தாலும், நாம் கொண்டாட ஒரு படம் கிடைத்தாகி விட்டது. தமிழ் சினிமாவில் எப்போது வரும் நல்ல படங்களில் ஒன்று இந்த அங்காடித்தெரு.
கேள்வி : வசந்தபாலனுக்கு...
படத்துல முதல்ல போட்ற கார்டு மாதிரி, இந்த படத்துக்கும், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் எந்த சம்பந்தமும் நிஜமாவே இல்லையா?