April 7, 2009

தமிழினத்துக்கு விழுந்த செருப்படி!

‘‘நான் செய்தது தவறில்லை.எனது செயலுக்காக நான் மன்னிப்பு கேட்கமாட்டேன். இது ஒரு எரியும் பிரச்னை. எங்கள் சமூகத்தினருக்கு நியாயம் கிடைக்கவில்லை’’. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பை வீசி எரிந்துவிட்டு சென்ற சீக்கிய பத்திரிக்கையாளரின் குரல் இது.
இந்திரா படுகொலையை அடுத்து நடந்த சீக்கியர் படுகொலைக்கு காரணமானவராக குற்றம்சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.ஐ. நீக்கியது தொடர்பான கேள்விக்கு சரியாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த இவர் செய்தியாளர் சந்திப்பில், அவர் மீது செருப்பை வீசி தாக்கியுள்ளார்.
‘‘எனது அணுகுமுறை தவறாக இருந்திருக்கலாம். இதை எந்த பத்திரிக்கையாளரும் செய்யக்கூடாது. ஆனால், நான் எனது சமூகத்தின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன்’’ என தன் தரப்பு நியாயத்தை சொல்லி இன உணர்வை எடுத்து வைத்துள்ளார் அந்த செய்தியாளர்.
எனவே அவர் செருப்பை வீசியது சரியா? இந்த அணுகுமுறையை வரவேற்பதா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு இந்த பதிவை படிப்பது நல்லது. அந்த கேள்விகள் பிரதானம் என்பவர்கள் தொடர்ந்து பதிவை படிக்க வேண்டாம்.
சுதந்திரமாக செயல்படக்கூடிய அமைப்பான சி.பி.ஐ. மீதான கோபத்தை அரசின் மீதும், அரசின் சார்பில் செயல்படும் உள்துறை அமைச்சர் மீதும் காட்டியுள்ளார் அந்த செய்தியாளர். சரியா, தவறா என்ற கேள்விகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், அது ஒரு இன உணர்வு.
ஆனால், இதைப்பற்றி எல்லாம் நாம் படிப்பதோடு நிறுத்திக்கொள்வது நல்லது. ஏனெனில் நமக்கு ஏது இன உணர்வு. நித்தம் நித்தம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், நமக்கு இன உணர்வு எட்டி கூட பார்க்காது.
தமிழர்களை கொல்ல ஆயுதங்களை வழங்கி விட்டு, அமைதிக்கு தூது போகிறோம் என்றும், ‘போர் நடக்கும் இடங்களில் அப்பாவி தமிழ் மக்கள் இறப்பது சாதாரணம்’ என்றும் நம்மை அடிமையாய் ஆளும் வர்க்கத்தினர் சொல்வதை அமைதியுடன் கேட்டு மீண்டும் அரியாசனையில் அமர வைப்பது தானே நம் பணி.
இப்போதைக்கு எம்.பி. சீட், ஜெயித்தால் மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் கேபினட் அமைச்சர் பதவி. தமிழர் செத்தால் எனக்கென்ன என கணக்கு போட்டு வரும் கருணாநிதிக்கும், இலங்கை தமிழர்கள் உயிரை ..யிராக கூட மதிக்காத காங்கிரஸ் கட்சித் தலைவர்களையும் இன்னும் நம்புகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
இலங்கை தமிழர் படுகொலையை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய சிறுத்தை கட்சித் தலைவர் இப்போது ஆயுதம் வழங்கி கொல்லும் ‘கை’யுடன் கைகோர்த்துள்ளார். இலங்கை தமிழர்கள் எங்கள் சொந்தங்கள் என நீட்டி முழக்கி புரட்சி வார்த்தைகளில் புயல் போல் பேசியவர் இலங்கை தமிழர்கள் துச்சமென மதிக்கும் அன்னையுடன் கரம் கோர்த்து, தமிழர் படுகொலையா அப்படியென்றால்? என கேட்கத்துவங்கி விட்டார். இவர்கள் இருவரையும் விட அம்மாவுடன் நேரிடையாகவும், காங்கிரசுடன் மறைமுகமாகவும் கரம்கோர்த்துள்ளார் மருத்துவர். ஆனால் இதையெல்லாம் கண்ட பின்னும், கொலையாளிகளில் குறைந்த கொலை செய்தவர்களை தேடுவதை போல இவர்களில் ஒருவரையே தேடி வருகிறோமே நமக்கு ஏது இன உணர்வு. அங்கு தினமும் செத்து செத்து பிணமாகி வருபவர்கள் நம் இனத்தினர். தமிழர்கள். அதை எப்படி நாம் மறக்கிறோம். கொலை செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் கேட்டு போராடும் நிலையில், கொலையை தடுத்து நிறுத்த போராட தயங்குகிறோமே நமக்கு ஏது இன உணர்வு.
அரசுடன் எவ்வித தொடர்பும் இல்லாத சி.பி.ஐ. மீதான சீக்கியர்களின் கோபம், அரசின் மீதும், அரசு சார்பில் உள்துறை அமைச்சர் மீது செருப்பாய் எரியப்பட்டுள்ளது. இதே தமிழன் இன உணர்வு கொண்டால் . . . ஆனால், இந்த கேள்விகளுக்கு யோசிக்க வேண்டிய அவசியம் கூட நமக்கு ஏற்படாது. இன உணர்வு என ஒன்று நம்மிடம் இருக்கிறதா என்ன?
சீக்கிய பத்திரிக்கையாளரால் உள்துறை அமைச்சருக்கு விழுந்த செருப்படி, உண்மையில் தமிழனுக்கு விழுந்த செருப்படி. நான் ப.சிதம்பரத்தை கூறவில்லை. அவரை அப்படி கூற எனக்கென்ன பைத்தியமா பிடித்துள்ளது.