ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நம் தமிழின தலைவர், தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் செய்த துரோகங்கள் பற்றி சொல்லாதவர்கள் இருக்க முடியாது. கலைஞரின் தம்பியாக இருந்த வைகோவில் துவங்கி, தோழனாக இருந்த பழ.நெடுமாறனில் இருந்து, கடைசி நேரத்தில் கை விலக்கி ஓடி வந்த ராமதாஸ் வரை கூறாதவர்கள் இல்லை. ஆனால், இவர்களில் யாரும் கூறாத துரோகங்களை பட்டியிலிட்டுள்ளார் நம் ஆறரை கோடியில் ஒருவர். கலைஞர் காலத்திலும், பெரியார், அண்ணாவின் தொண்டனாக வாழ்ந்து அவரை பின்பற்றும் அந்த நபரின் கடிதம் இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. கடிதம் என்பதை முதல்வரை நோக்கிய கேள்விக்கணைகளாகவே இதனை கருதுகிறேன். கண்டிப்பாக முதல்வரிடம் பதில் கிடைக்காத இந்த கேள்விகள். ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் படிக்க வேண்டிய கடிதம். இதோ அந்த கடிதம்.
15/07/09ம் தேதியிட்ட ஆனந்த விகடனில் பிரசுரமான "கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்' என்ற தலைப்பில் வெளியானவை உங்களின் பார்வைக்கு...
தி.முக. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்!
மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை "முள்கிரீடம்' தாங்கி, முத்துவிழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன்.
நீ இன்றி நான் இல்லை படத்துக்கு கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகி விட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. "கருணாநிதி என் புத்தக தலைப்பை திருடி விட்டார்' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால், <உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்... ""போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்!! கறுத்த கழுதையே அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையே, கிலி பிடித்த மனிதர்களை கீறி எறியுங்கள்!'' என்று கோவில் பட்டியிலும்... ""உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களை போக்கினால்... போகட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக் கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினை துண்டித்து நிர்க்கதியாய் விட்டாலும், எமது தன்மானம், இனமுழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும்,, ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதை படித்ததும்தான் பதறிப்போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுத துõண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான். சம்பத்தும் நெடுஞ்செழியனும், அன்பழகனும் கழக மேடைகளில்(உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்த போது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பை பெற்றீர்கள். சரியா? இப்போது ஈழத்தமிழர் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசியதை திரும்ப திரும்ப படித்தேன். ""எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இ ங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை <உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல்பேச்சு, கடல் அலைப்பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு! 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப்படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்கு தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள் தான் ""தமிழனுக்கு ஒரு நாடு; தனித் தமிழீழ நாடு'' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படித்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டு தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தைப் போராளிகளுக்கு துõக்கி கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனித சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி துõக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத்தமிழனுக்காக காலத்தை வீணாக்கி விட்டீர்கள் தலைவரே! எம்.ஜி.ஆர்., நாலு கோடி ரூபாயை துõக்கிக் கொடுத்து, பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ""இந்த சண்டையை நடத்துவதே, எம்.ஜி.ஆர்., தான்'' என ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும், வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான், போராளி இயக்கங்கள் நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன. ""கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டுவந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு க ரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாக கொண்டு வந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகறாக நாம் இருக்கிறோமா? இனிப்பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தை துõக்குவதாக என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப் போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால், கோபமான வெளத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப்பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா? "இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய் தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது?நாங்கள் ஒட்டிக் கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியாவேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக் கொண்டு இருக்க, நீங்கள் தமிழருக்கு செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்று விடுகிறதே என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா? என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல்பேச்சு பேசாமல் இருந்திருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே? இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தை விட, அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும், எஸ்.டி., சோமசுந்தரமும் பேசினார்களே! "இந்தியா படையெடுக்க வேண்டும்', ஜெயவர்த்தனாவை துõக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுத்தார்கள். புறநானுõற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே சொன்னார், ""அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாக பேச வரவில்லை'' பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ""மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும், வேண்டாத வீரமாகத் தெரிகிறது. பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று!முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, சிங்களவர்களை கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங்கைத் துõதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? ""வெள்ளை பாஸ்பரஸ் துõவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டிருக்கும்போது, உங்கள் அதிகாரத்தை வைத்து தடுக்கக் கூடாதா?'' என்றால், "என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக் கழித்தீர்கள். ""போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்ற போதும், மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக் கொண்ட போது, காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது "மத்திய அரசு என்ன செய்ய முடியும். சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டி தட்டி விட்டீர்கள். நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதார தடை விதிக்க வேண்டும். போர்க்குற்றத்தை உலகநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சிந்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கி விடுங்கள்! இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன? ""மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து'' தமிழீழம் குறித்து உங்கள் கருத்து என்ன? ""இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துதான் என் கருத்து''. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்? ""ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? "தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போல தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில், நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம், எட்டுத்தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களை தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்ட முடியாமல், <உங்களைப்பிடித்து இழுத்தது எது? அல்லது யார்? ""நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும்'' என்று ஈழத்தந்தை செல்வாவிடம், இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக் கொண்டு, மூத்திரப் பையை துõக்கிக் கொண்டு கடைசி காலத்திலும் கருவறைப் போராட்டம் நடத்திய "தமிழன் அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூட பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்களது ஆட்கள் மத்திய லகானை சுழற்றி வந்திருக்கிறார்கள்.சோனியாக உங்களை தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என்றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணாவும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்கு காட்டிக்கொடுக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரை சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவை தாரைவார்க்கும் போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்து விட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும், "விரும்பினால்தான் தண்ணீர் த ருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது. தெற்காசியாவின் அதிசயமாக பென்னிகுக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப்பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. அச்சுதானந்தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையை கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமர பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரைமுருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது. ""பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லுõரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகை ஈரமாகவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... எதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது.... ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நுõற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க., மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், "நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப்பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே? அன்புடன், ஈரவிறகாக இருக்க முடியாத, அரசியல் அறியாத் தமிழன்! நன்றி ஆனந்தவிகடன்.