July 8, 2009

தோற்பது மட்டுமே!

நம் இருவருடனான விளையாட்டில் இதுவரை
தோற்பது மட்டுமே என் பணியாக இருந்து வருகிறது

இருவரில் கோபப்படுவது நீயோ, நானோ சமாதானப்படுத்துவது மட்டும் எனது செயலாக இருந்தது

சிரிப்பு, அழுகை, கோபம், எரிச்சல் என நம் எண்ண பகிர்தலின் வழிகள் அனைத்துக்கும் காரணமாக இருந்தது நீ தான் என்றாலும் விளைவுகள் மட்டும் என்னை சார்ந்தே அமைந்திருந்தது. உன்னுடனான ஏழு ஆண்டு பழக்கத்தில் குற்றங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் மன்னிப்பு கேட்பது என் கடமையாகவே மாறிப்போனது.

செயல்கள் எல்லாம் உனதாயிருந்ததால் விளைவுகளாக மட்டுமே இருக்க விரும்பினேன் நான்.

உன்னை விட்டு பிரிந்த பின்னர் இதுவே பிரச்னையாய் போனது எனக்கு.

உன் நினைவுகளை அழித்தல்; உன்னை நினைக்காமல் இருத்தல் என எந்த செயலையும் என்னால் செய்ய இயலவில்லை.

மாறாக உன் நினைவுகள் என்னுள் ஏராளமான விளைவுகளை ஏற்படுத்தின.

கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடனான தொடர்பை முற்றிலுமாக நீ துண்டித்துக்கொண்ட நிலையிலும் உன் நினைவுகளை இழக்க இயலவில்லை என்னால்.

கடவுளிடம் வேண்டும் பக்தன் போல உன்னிடம் கேள்விகளை மட்டும் முன்னிறுத்தினேன் பதில்கள் கிடைக்காது என தெரிந்தும். எல்லாவற்றையும் உணர்ந்தவனாக இந்த ஆண்டு உந்தன் பிறந்த நாளுக்கு உன்னை வாழ்த்துவதில் என தீர்க்கமாய் முடிவெடுத்தேன் என் வாழ்த்தை ஏற்க விரும்பாத ஒருவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதா? என காரணங்களை துணைக்கழித்துக்கொண்டேன்.

இதோ நீ பிறந்த அந்த நாள் வந்தது நாட்காட்டிகள் அவசியமில்லாமல் எனக்கு உணர்ததின உன் பிறந்த நாளை.

கண்டிப்பாக வாழ்த்த கூடாது என முடிவெடுத்தேன். மறந்தும் உனக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க கூடாது என அடிக்கடி எனக்கு நானே கட்டளையிட்டுக்கொண்டேன்.

நள்ளிரவு வரை உறக்கம் கலைந்தாலும் அதிகாலை அவசரமாய் எழுந்து உன் நினைவுகளை மறக்க பரபரபாக்கினேன் இந்த நாளை.

அலுவலக கடிதம் எழுத, அவசரமாய் வெள்ளைக்காகிதம் எடுத்து எழுத துவங்கினேன். காகிதத்தில் கடிதத்துக்கு பதிலாய் வேகமாக பதிந்தது உன் பிறந்தநாள் கவிதை.

என்ன செய்ய? நம் இருவருடனான விளையாட்டில் இதுவரை தோற்பது மட்டுமே என் பணியாக இருந்து வருகிறது

3 comments:

Harini said...

Very good one!

ச.ஜெ.ரவி said...

hai Harini
thanks for your command.

sindhan said...

அடிமரம் வெட்டுபட்டாலும்
தழைத்து வளரும் மரம்
ஆணி வேரைப்
பிடுங்குதல் சுலபமில்லை