February 21, 2009

தேர்தலே ஆயுதமாக . . .

‘என்னை கைது செய்வார்கள், என் எண்ணத்தை என்ன செய்வார்கள். நான் பிரபாகரனின் தம்பி, ஓடி ஒளிய மாட்டேன்’. 3வது முறையாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நேற்று கைது செய்யப்பட்ட சீமானின் முழக்கம் இது.
இந்தியா இறையாண்மைக்கு பேசியதாக மீண்டும் ஒருமுறை கைது செய்யப்பட்டுள்ளார் இயக்குனர் சீமான். இந்திய இறையாண்மைக்கு எதிராக என அரசால் கூறப்படுவது, தமிழ் ஈழத்தை ஆதரிப்பது. தற்போது தனி ஈழ கோஷத்தை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இந்திராகாந்தி, அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் கனவு தனி ஈழம். கட்சியின் பிரதான தலைவர்களின் கனவை முழங்கும் ஒருவரை, கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க.வும், காங்கிரசும் துடிப்பதும், அதனை அவசர அவசரமாக தி.மு.க. அரசு செய்து முடிப்பதும் எப்படி விமர்சிப்பது என கூற முடியவில்லை.
இலங்கையில் ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையில் நாங்கள் தலையிட முடியாது என கூறிய பிரணாப் முகர்ஜியை கண்டிக்காத காங்கிரசும், அ.தி.மு.க.வும், தனி ஈழம் கோரிய ஒருவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துவதும், அதற்கு கெடு கொடுத்து நாங்கள் கைது செய்வோம் என கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. சீமான் கைது என்பது வெறும் சம்பவமாக இருக்க கூடாது. முத்துக்குமாரின் வீர மரணம் முதல் சீமான் உள்ளிட்டோர் கைது சம்பவம் வரை இன்னும் ஓரிரு மாதங்களில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வேண்டும். எங்கள் தமிழினத்தை காக்க வராத யாருக்கும் நாங்கள் வாக்கிடமாட்டோம் என புறக்கணிக்க வேண்டும். எங்கள் இனத்தினரின் உயிரை விட எங்களுக்கு வேறேதும் பெரிதல்ல என்பதை நாம் உணர்த்த வேண்டும்.
ஓரினம் அங்கு முழுமையாக கொல்லப்பட்டு வருவதை கண்டு இனியும் நாம் பொறுத்திருக்க முடியாது. ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என போராட்டங்களை தொடர்வோம். இந்த போராட்டத்துக்கெல்லாம் இறுதி வடிவமாக நாம் தேர்தலை பயன்படுத்துவோம். நம் தமிழின விடிவுக்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தேர்தல் தான் என்பதை மறந்து விடாதீர்கள். பாடம் கற்பிக்கும் நேரம் நெருங்குகிறது.

No comments: