March 13, 2009

கம்யூனிசம் பேசும் ‘காஞ்சிவரம்’

ம்யூனிசம் என்ன சாதித்தது? பல விவாதங்களின் போது என் நண்பர்கள் என்னிடம் வைத்த கேள்விகளில் ஒன்று. வரலாற்றை சொல்லி புரிய வைக்க முடியாது என்பதால், பெரும்பாலும் இந்த கேள்விக்கு என் பதில் மவுனமாகவே இருந்து வந்தது. இனி இந்த மவுனம் இருக்காது. அதற்கு மாறாக ‘காஞ்சிவரம் படத்தை பாருங்கள்’ என்பதாக இருக்கும்.

கம்யூனிசம் இல்லாவிடில் தொழிலாளர்கள் நிலை என்னவாகி இருக்கும்? எனும் மிகப்பெரிய கேள்விக்கு 1.30 மணி நேரம் நகரும் மன்னிக்கவும் நம்மை நகர்த்தும் இந்த படத்தில் அவ்வளவு அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன். தனது தாய்க்கும், மனைவிக்கும் பட்டு சேலை வாங்கித்தர விரும்பி அதில் தோல்வியடைந்து, மகளின் திருமணத்துக்கு எப்படியாவது பட்டு சேலை வாங்கித்தந்தாக வேண்டும் என முடிவு செய்து, அதற்காக நெசவு செய்யும் இடத்தில் இருந்து பட்டு நூலை திருடி வந்து நெசவு செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதற்கிடையே நோய் பாதிப்புக்குள்ளாகும் பிரகாஷ்ராஜின் மனைவி இறக்கிறார். தொடர்ந்து மகளுக்காக பட்டு சேலை தயாரிப்பு பணியில் அவர் ஈடுபடுகிறார். இதற்கிடையே, ஊருக்கு தொழிலாளர்கள் நிலையை காண வரும் கம்யூனிசவாதி ஒருவரிடம், கம்யூனிச கொள்கைகளை கேட்கும் பிரகாஷ்ராஜ், அதில் ஆர்வமாக ஈடுபட துவங்குகிறார். கம்யூனிசம் தடை செய்யப்பட்டிருந்த அந்த காலத்திலும் மறைமுகமாக இயக்கத்தை நடத்தி, நெசவாளர்களின் கோரிக்கைகளை முன்வைக்கிறார் பிரகாஷ்ராஜ் மற்றும் அவரது தோழர்கள். இதற்காக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார்.

இதனிடையே மகளின் திருமண தேதி நெருங்குகிறது. திருமணத்துக்குள் பட்டு சேலை தயார் செய்ய வேண்டும் என்பதால், போராட்டத்தை தன்னிச்சையாக கைவிடுகிறார் பிரகாஷ்ராஜ். தொழிலாளர்கள் பெரும்பகுதியினர் பிரகாஷ்ராஜூடன் பணிக்கு திரும்புகின்றனர். மீண்டும் பணிக்கு சென்று பட்டுநூலை திருடி சேலையை செய்ய துவங்குகிறார். ஆனால், அடுத்த முறை பட்டு நூலை திருடும்போது கையும் களவுமாக சிக்குகிறார் பிரகாஷ்ராஜ். இதன் பின்னர் சிறைக்கு செல்கிறார். இதனிடையே கிணற்றில் விழுந்து கிடை பிணமாகிறார் பிரகாஷ்ராஜின் மகள். அவரை பார்க்க 2 நாட்கள் சிறைக்காவலில் செல்லும் பிரகாஷ்ராஜ், மகளை கவனிக்க யாரும் இல்லாததால் அவருக்கு விஷம் கொடுத்து கொல்கிறார். அதுவரை தான் நெய்த பட்டு சேலையால் மகளின் உடலை மூட, ஏழை நெசவாளியின் நிறைவேறாத விருப்பத்துடன் முடிகிறது திரைப்படம்.

கம்யூனிசம் நம் நாட்டில் ஏற்படுவதற்கு முன்னர் தொழிலாளர்கள் பட்ட வேதனையை தத்ரூபமாக விளக்குகிறது படத்தின் முதல் பாதி காட்சிகள். அதற்கு மிக அழகாக பொருந்தியுள்ளது கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை சூழல். தனது முதலாளியின் மகளுக்கு பட்டு சேலையை நெயவு செய்து தந்து விட்டு, அதனை பார்க்க தனது மனைவியுடன் ஓடிச்சென்று மறைந்திருந்து பார்ப்பது; பட்டு குறைந்ததால் காட்டு மிராண்டித்தனமாக நெசவாளி ஒருவர் தாக்கப்படுவது; வீட்டில் தொழில் செய்ய அனுமதி மறுத்து அனைவரையும் ஒரே இடத்தில் தொழில் செய்ய கட்டாயப்படுத்துவது என கம்யூனிசம் தோன்றுவதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை விவரித்து விரிகிறது முதல்பாதி காட்சிகள். கம்யூனிசவாதி நாடகம் மூலம் தொழிலாளர் விரோதப்போக்கை எதிர்க்க தூண்டும் காட்சிகள் அழகு.

பட்டு சேலை நெசவு செய்வதில் மிகச்சிறந்த கைத்தறி நெசவாளியாக பிரகாஷ்ராஜ். தாய், மனைவி, மகள் என மூவருக்கும் பட்டுசேலை வாங்கித்தர விரும்பி தோற்கும் நெசவாளியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். பிரகாஷ்ராஜின் மனைவியாக ஷ்ரேயா. மிக அழகான நடிப்பில் அனைவரையும் கவர்கிறார். பிரகாஷ்ராஜின் மகள், நண்பர் என அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். தனது மனைவி இறப்பதற்கு முன்னால், தனது மகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் பட்டு சேலையை மனைவிக்கு பிரகாஷ்ராஜ் காட்டுவதும், அதனை கண்டு புன்னகைத்தவாறு இறப்பதும் மனதை தைக்கிறது. அதேபோன்று இறுதி காட்சியில் மகளை தூக்கி கொண்டு தயார் செய்து முடிக்கப்படாத பட்டுசேலையை காட்டும் போது மனது மேலும் இறுகுகிறது.

இறுதி காட்சியில நெயவு செய்த வரை சேலையை கிழித்துக்கொண்டு வந்து மகளின் சடலத்துக்கு பிரகாஷ்ராஜ் போர்த்துவதும், அது போதாமல் இருப்பதும்; நெசவாளர்கள் தற்கொலை காட்சிகள் உள்ளிட்டவை நெசவாளர்களின் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள். கம்யூனிச பாதையில் செல்லும் பிரகாஷ்ராஜ், சுயநலத்தால் திடீரென பாதைமாறுவதால் ஏற்படும் பிரச்னைகளும், அதன் மீதான வசனங்களும் நெகிழவைக்கின்றன. வசனங்களில் நெசவாளர்களின் அழகிய வாழ்வியலும், சோகமும் வெளிப்படுகின்றன. மிக குறைந்த நேரமே என்னை பயணிக்க வைத்த போதும், என்னை நீண்ட தூரத்துக்கு அழைத்து சென்றது காஞ்சிவரம். பொறுக்கி, போக்கிரி, திமிரு என தமிழ் பெயர்களில் படம் எடுத்து, தமிழை வாழ வைக்கும் இயக்குனர்களின் கவனத்துக்கு ... காஞ்சிவரத்தை பாருங்க.

19 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//கம்யூனிசம் என்ன சாதித்தது? பல விவாதங்களின் போது என் நண்பர்கள் என்னிடம் வைத்த கேள்விகளில் ஒன்று. //

அப்படி கேட்பவர்களிடம் கம்யூணிசம் சாதிக்காதது என்ன? என்று கேளுங்கள். அவர்களுக்கு விளங்கத் துவங்கிவிடும்.

(வேர்டு வெரிபிகேஷனை எடுத்து விடலாமே)

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விமர்சனம் நண்பா.. இதுபோல படங்கள் நிறைய வர வேண்டும்...

ச.ஜெ.ரவி said...

நன்றி அப்துல்லா.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

Rajaraman said...

நவீன யுகத்துக்கு பொருந்தாத தோற்றுப்போன கல்லறையில் அடக்கமான தத்துவமும் தான் கம்முநிசம்.

உங்கள் விமரிசனத்தில் இருந்து விளங்கிக்கொள்ள முடிவது என்னவென்றால் சிறப்பான திரைக்கதையும், Excellent Presentation னும் மற்றும் படத்தில் நடித்தவர்களின் சிறப்பான நடிப்பாற்றலும் உங்களை ரொம்பவும் Impress செய்துள்ளது தான்.

சோவியத் ருஷ்யாவின் கதியை பார்த்துமா இன்னும் இந்த இற்றுப்போன கமுநிசத்தை நம்புகிறீர்கள்.

Anonymous said...

அமெரிக்கா முதலாளித்துவம் திவாலாகி அரசின் மூலதனத்தில் நிறுத்திக்கொண்டு சோசலிசத்தை தழுவிக் கொண்ட மர்மத்தை விளக்குவாறா திரு ராஜாராமன்?

Rajaraman said...

அமேரிக்காவில் சில நிதி நிறுவனங்களின் தவறான, போட்டிப்போட்டு கொண்டு கடன் கொடுக்கும் செயலால் தான் அவை தள்ளாடின. அவற்றின் உதவிக்கு அரசு வந்தது.

ஆனால் சோவியத் ருஷ்யாவில் அப்படி இல்லை. கமுனிச கொள்கையே நாட்டை அழித்து குட்டிசுவராக்கி பொருளாதாரத்தையே பாழ்படுத்திய பிறகு அரசு விழித்து கொண்டு அது வரை கடைப்பிடித்த காலத்துக்கு ஒவ்வாத கமுனிச நடைமுறையை குழிதோண்டி புதைத்துவிட்டு சரிவிலிருந்து மீண்டது.

அவ்வளவு ஏன் தற்ப்போது கமுனிச? சீனாவே From Left to Right Movement போன்ற பொருளாதார கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.

அர டிக்கட்டு சார் கர்க்காலதிலிருந்து தற்க்காலதிர்க்கு வர முயர்ச்சி செய்யுங்களேன்.

Anonymous said...

//அமேரிக்காவில் சில நிதி நிறுவனங்களின் தவறான, போட்டிப்போட்டு கொண்டு கடன் கொடுக்கும் செயலால் தான் அவை தள்ளாடின.//

முதலாளித்துவத்தின் தாரக மந்திரமே போட்டிதான், இதில் நல்ல போட்டி தவறான போட்டி என்று ஒன்று இல்லையென்பதுதானே Free Market Capitalism. அந்த போட்டியும் சூதாட்டமும் இல்லையென்றால் முதலாளித்துவமே இல்லாமல் போய்விடும். அதுதான் உண்மை. இது ஏதோ சில நிறுவனங்களின் தவறினால் நேர்ந்தவையல்ல, பல நூறு நிறுவனங்கள், பல்லாயிரம் சூதாடிகள் என நீள்கிறது இந்தப்பட்டியல். அது மட்டுமல்ல இந்த நூற்றான்டிலேயே இது போன்ற பெருமந்தம் ஐந்தாறு முறை வந்து பல லட்சம் மக்களை திவாலாக்கியிருப்பதும் உண்மைதானே.

//அவற்றின் உதவிக்கு அரசு வந்தது.//

ஏன் வரவேண்டும். அரசின் தலையீட்டை இல்லாது ஒழிக்கவேண்டும் என்பதுதானே தனியார்மய தாசர்களின் எண்ணம். திவாலான பின்பு மட்டும் அரசிடம் போவானேன். அரசு எப்படி பணம் கொடுத்த்து. சாதாரண உழைக்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து. அதாவது இன்று உங்கள் முதலாளித்துவம் மூட்டை தூக்குபவனின் பிச்சைகாசில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதை மறுக்கமுடியுமா? சோசலிசத்தின் ஒரு அங்கமான ஸ்டேட் காபிடலிசத்திற்குள் முதலாளித்துவம் தஞ்சம் அடையவேண்டிய ஒரு நிலை ஏன் என்பதைத்தான் இன்று அமெரிக்க பொருளாதார நிபுனர்கள் பலர் விளக்கி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று ஊசிப்போன முதலாளித்துவத்தை சீண்ட அமெரிக்காவிலேயே நாதியில்லை மக்கள் கம்யூனிசத்தின் பக்கம் திரும்பவில்லையென்றாலும் முதலாளித்துவம் தங்களை கரைசேர்க்காது என்பதை நன்றாக விளங்கிகொண்டுள்ளனர். என்ன செய்வது அங்கேயும் சிலர் முதலாளித்துவம் தம்மை கைவிடவில்லை என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர்... அவர்களுக்கு எமது அனுதாபங்கள்.

இந்த இடுகையை படிக்கும் மக்களுக்கு ஒரு இலவச இணைப்பு
http://tinyurl.com/4dfb6k

ச.ஜெ.ரவி said...

வருகைக்கு நன்றி திரு.ராஜாராமன்.
கம்யூனிசத்தை பற்றிய உங்களின் கருத்தை மாற்றிக்கொள்வது நல்லது என எனக்கு தோன்றுகிறது. தொழிலாளர்கள் சமூகம், பணம் படைத்தவர்களின் காலில் விழுந்து கிடக்கும் சூழலை மாற்றியமைத்தது கம்யூனிசம் தான். இதை தான் இந்த படத்தில் கூறியுள்ளார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளே பொருளாதார வீழ்ச்சியால் கம்யூனிச பாதையை நாடியுள்ள நிலையில், கம்யூனிசம் மீதான உங்கள் கூற்று சரியானது அல்ல. கம்யூனிசத்தை நீங்கள் எதிர்பவராயின் நாட்டின் நலனில் அக்கறை இல்லாதவர் என விமர்சிக்கப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

சந்திப்பு said...

படம் பார்க்கத் தூண்டியுள்ளீர்கள் ரவி வாழ்த்துக்கள்.

சந்திப்பு said...

அன்புள்ள ராஜாராம் கம்யூனிசம் குறித்து ஒருசிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலகில் இன்னும் எந்த நாட்டிலும் கம்யூனிச முறையிலான ஆட்சியமைப்பு வரவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்திட விரும்புகிறேன்.

2. கம்யூனிசம் மற்றும் சோசலிச கொள்கை என்பது உலகில் உள்ள அல்லது ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஏழை - எளியவர்களை - வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டவர்களை, அதாவது சேரிப்பகுதிக்கும், பிளாட்பாரத்திற்குள்ளும் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களை இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்படும் தத்துவம் - கொள்கை.

3. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவது குறித்து உங்களுக்கு அநேகமாக கருத்து வேறுபாடு எழாது என்று கருதுகிறேன். அத்துடன், மனிதனை இன, நிற, பால், சாதி ரீதியான வேறுபாடுகளை ஒழித்து ஒரு சமதளத்தில் நிறுத்தும் தத்துவம்.

4. அடுத்து சமூகத்தில் உள்ள அனைவரும் உழைக்க வேண்டும். இதில் யாருக்கும் விதிவிலக்கு இருக்க முடியாது. மேலும் மனிதனை ஒரு உயர்ந்த வாழ்க்கைத்தரத்திற்கு இட்டுச் செல்வதுதான் அதன் தலையாய கடமை. இதைத் தவிர அதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. எனவே இத்தகைய அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும் கம்யூனிச கருத்து குறித்து உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்காது என்று நினைக்கிறேன்.

5. மேலும், ரஷ்யாவில் 1917-இல் லெனின் தலைமையில் நடைபெற்ற தொழிலாளி வர்க்கப் புரட்சியின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் அது 200 ஆண்டு காலமாக முதலாளித்துவம் ஓங்கி வளர்ந்த இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்சு போன்ற தேசங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி உலகின் சூப்பர் பவர் தேசமாக வளர்ந்தது என்றால் அதற்கு அந்த சோசலிச சமூகத்தை ஏற்றுக் கொண்ட மக்களின் கடமையுணர்வைத்தான் வெளிப்படுத்தியது. மேலும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சுரண்டுவது இருக்கட்டும், ஒரு நாடு பல நாடுகளை பிடித்து திண்ணும் முதலாளித்துவ அகோரப் பசிக்கு வேட்டு வைத்து பல நாடுகளை விடுதலை செய்யத் தூண்டியது ரஷ்யப் புரட்சி. இதிலும் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்காது என்று கருதுகிறேன். ஒரு நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்காதவர்கள் யாராவது இருப்பார்களா?

6. இப்படியான பல அற்புதங்களை நிகழ்த்திய ரஷ்ய சோசலிசம்தான் உலகையே தனது காலுக்கு கீழே கொண்டு வரத் துடித்து உலக மனித நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மனிதப் படுகொலைகளை செய்த பாசிச இட்லரை சவக்குழித் தோண்டி புதைத்து உலகையே விடுவித்தது. இத்தகைய செயல் மட்டும் நடந்திராவிட்டால் நாமெல்லாம் ஆரிய பெருமை பேசி அடுத்த இனத்தவரை குழித்தோண்டி புதைக்கும் உன்னதமான காரியத்தையல்லவா செய்து கொண்டிருப்போம்!

7. இறுதியாக, ரஷ்யாவில் சோசலிசம் தோல்வியடையவில்லை. பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. அதாவது ஒரு ஆரோக்கியமான மனிதன் ஓடிக்கொண்டிருக்கும் போது தடுமாறி விழுந்துள்ளான். அதற்காக அவன் உயிரே போய்விட்டது என்ற வாதம் கற்பனையானதாகவே இருக்கும். அவன் எழுந்திருப்பான் முன்னைவிட வேகமாக - பத்திரமாக ஓடி தனது இலக்கை அடைவான் அதுதான் சோசலிசம். சோசலிசத்தில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். அதனை பரிசீலித்து மாற்றிக் கொள்ள முடியும். மேலும் கம்யுனிசமும் - சோசலிசமும் வெறும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. அதனை தண்ணீரில் மூழ்கடிக்கத் துடித்தனர் ஏகாதிபத்திய சுரண்டல்வாதிகள். அது அவர்களால் முடியாத ஒன்று! சமூகம் என்ற பெரிய ஆலவிருட்சம் முன்னேறித்தான் போகுமே ஒழியே பின்னோக்கிச் செல்லாது. அப்படி வரலாற்று காலச்சக்கரத்தை பின்னுக்கு இழுப்பவர்கள் அதன் கோரக் கால்களில் சிக்கி உயிரிழப்பதுதான் நிகழும். எனவே நீங்கள் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே உணர்ந்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

Anonymous said...

விரிவான விளக்கத்துக்கு நன்றி
தோழர்.சந்திப்பு.

Rajaraman said...

தோழர்கள் ச.ஜெ.ரவி, அர டிக்கட்டு மற்றும் சந்திப்பு உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
என் கருத்து என்னவென்றால் உங்களின் பொதுடைமை தத்துவத்திலும் சில நல்ல நோக்கங்கள் உள்ளன அவற்றை நான் மறுக்கவில்லை. ஆனால் தற்போதைய காலகட்டத்துக்கு கமுநிசம் ஒத்து வருமா என்பது தான் என் கேள்வி.

ஏறக்குறைய நூறாண்டு காலமாக உங்களைப்போன்றவர்கள் இந்தியாவில் களப்பணி செய்தாலும் ஏன் இங்கு வேருன்ற முடியவில்லை.

ஒரு உதாரணம் கூற வேண்டுமென்றால் நம் நாட்டு பணந்தின்னி Public Sector Enterprises ஐ எடுத்துக்கொள்ளலாம். அங்கெல்லாம் உழைக்காமலேயே சம்பளம் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி எல்லாத்தையும் அரசு பார்த்துக்கொள்ளும் என்ற மனப்பான்மையை வளர்த்ததுதான். (ஆனால் இப்போது நிலைமை வேறு).

தொழிலார்களிடையே சோம்பேறித்தனத்தை வளர்த்து நாட்டையே பின்னோக்கி செலுத்த இடது தொழிற்சங்கங்கள் பெரும் பங்களித்தன.

இதற்க்கு சிறந்த உதாரணம் இன்றும் கேரளாவை பெரும் தொழில் அதிபர்கள் புறக்கணிப்பது. தலையில் சிகப்பு துணியை கட்டிக்கொண்டு பஸ்சிலிருந்து நம் லக்கஜை நாமே இறக்கிக்கொண்டால் கூட மிரட்டி காசு பறிக்கும் கும்பல் இடது
தொழிற்சங்கங்கள் பெயரை வைத்துக்கொண்டு கொல்லையடித்துக்கொண்டுள்ளனர்.

சந்திப்பு said...

அன்புள்ள ராஜாராமன் பொதுவுடைமை தத்துவத்திலும் சில நல்ல நோக்கங்கள் உள்ளன என்று ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள். பொதுவுடைமையை விரும்பாதவர்கள் மனிதகுலத்தில் யார்தான் இருக்க முடியும். புரிதல்களில் மட்டும் சில வித்தியாசங்கள் நிகழலாம். உங்களது அதி முக்கியமான கேள்வி? "தற்போதைய காலகட்டத்துக்கு ஒத்துவருமா" என்பதுதான்.

நன்பரே மனித சுரண்டல் கடந்த காலத்தை விட தற்போதுதான் அதிகரித்துள்ளது. குறிப்பாக நமது ஐ.டி. ஊழியர்களை எடுத்துக் கொள்ளுங்கள் 12 மணி நேரம் உழைப்பு வீட்டிலிருந்து - அலுவலகத்திற்கும், அலுவலகத்திலிருந்து - வீட்டிற்கும் செல்வதற்கு 2 மணி முதல் 3 மணி நேரம் செலவிழப்பது போக மீதம் இருப்பதில் உறக்கமே வாழ்க்கையாகி யதார்த்த சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி இத்தகையவர்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்குவதற்காக பப் மற்றும் டிஸ்கோத்தே போன்ற கலாச்சாரங்களையும் கூட அதே முதலாளிகள் ஏற்பாடு செய்து கொடுத்து தங்களது சுரண்டலை மறைக்கின்றனர். அது மட்டுமல்ல தற்போதைய காலகட்டத்தில் உற்பத்தி சார்ந்த முதலீடுகள் குறைந்துபோய் "சத்தியம்" போல பங்கு சந்தை சூதாட்டத்திலும், நிதியை வைத்து நிதியை பெருக்கும் குறுக்குவழியைத்தான் இந்த முதலாளித்துவ உலகமயம் கொடுத்துள்ளது. இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. உதாரணம் : முன்பெல்லாம் அசோக்லேலண்ட், பி.டி.சி., டி.வி.எஸ். போன்ற தொழிற்சாலைகளில் நிரந்தர வேலையில் இருப்பவர்களால் சொந்தமாக வீடு வாங்க முடியும். ஆனால் இப்போது முடியவே முடியாது! அதாவது நமது ஐ.டி. ஊழியர்களுக்கு கடனை கொடுத்து நிலம் - வீடுகளின் விலையை ஏற்றி வைத்து அவர்களது பணத்தை இன்னனொரு வழிகளில் தனதாக்கிக் கொண்டது முதலாளித்துவம் என்ற சூட்சியையெல்லாம் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். எனவே சுரண்டல் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் பொதுவுடைமை தத்துவமே வடிகால்.

//ஏறக்குறைய நூறாண்டு காலமாக உங்களைப்போன்றவர்கள் இந்தியாவில் களப்பணி செய்தாலும் ஏன் இங்கு வேருன்ற முடியவில்லை.//

முதலாளித்துவம் கூட தன்னை நிலைநாட்டிக் கொள்ள 17 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இப்படித்தான் தினறியது. அது சரி இந்தியாவில் கூட இன்னும் முழுமையான முதலாளித்துவம் வரவில்லை என்பது உங்களுக்கு தெரியாதா? என்ன! இது நிலப்பிரபுத்துவ சமூகத்தை உள்ளடக்கிய பழமைவாத சமூகத்தை கொண்டுள்ளது. எனவே இந்தியாவில் அது வெற்றி பெறாத சூழ்நிலையில் கம்யூனிசமும் வெற்றிபெற போராடிக் கொண்டே இருக்கும். இறுதியில் முதலாளித்துவத்திற்கான சுருக்கு கயிறு நம்மைப் போன்ற தொழிலாளிகளிடத்தில்தான் நன்பரே!

அன்றைய பொதுத்துறை நிறுவனங்கள் இல்லையென்றால் இந்தியாவில் தற்போதைய முதலாளித்துவம் முளைகூட விட்டிருக்காது. அதாவது அவர்களை வளர்ப்பதற்கான போக் போனாக செயல்பட்டதுதான் இந்த பொதுத்துறைகள். தற்போது அவர்கள் வளர்ந்த சூழ்நிலையில் எதற்கு அந்த பேக் போன் என்று கேள்வி கேட்டு அதனை தனது வசமாக்கப் பார்க்கிறார்கள். எனவே பொதுத்துறை என்பது சோசலிச சமூத்தில் இருந்தது போன்ற பொதுத்துறை அல்ல. அதற்கு சமூகப் பார்வை கிடையாது. எனவே இதனை சமூக பார்வை கொண்டதாக மாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்மிடம் இல்லையா தோழா!

கேரளாவில் முதலாளிகள் புறக்கணிக்கிறார்கள் என்று கூறும் நீங்கள், பெங்காலில் முதலாளித்துவ அரசியல்வாதிகளே முதலாளிகளை புறக்கணிக்கிறார்களே! வித்தியாசம் என்ன சற்று யோசிக்கவும். கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தின் விரோதியல்ல. அது அதற்கான முதல் படிகல்!

பாரிமுனை, கோயம்பேட்டில் கூட இதுதான் நடந்தது. அதாவது, வெளி ஊரில் இருந்து வருபவர்களிடம் உள்ள சுமையை அவர்களே சுமந்துக் கொண்டு கூலி கேட்பது. இது கேரளாவாக இருந்தாலும் தமிழகமாக இருந்தாலும் முதலில் எதிர்க்கப்படக்கூடிய விசயமா என்ன? ஆளை விழுங்கும் திருடர்கள் இருக்கும் இடத்தில் எறும்புத் திண்ணிகளை எல்லாம் பெரிசாக பெரிசுபடுத்துவது சரியா என்று யோசிக்கவும். நன்றி தோழரே!

Anonymous said...

//கம்யூனிசம் என்பது முதலாளித்துவத்தின் விரோதியல்ல. அது அதற்கான முதல் படிகல்!//

இது எப்படி தோழர்? கம்யூனிசம் முதலாளித்துவத்தின் விரோதிதானே. அதைதானே மார்க்சும் ஏங்கல்சும் லெனினும் சொல்கிறார்கள்.

சந்திப்பு said...

மார்க்சும், எங்கெல்சும் முதலாளித்துவத்தின் சாதனைகளை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பெரிதும் புகழ்ந்துரைத்துள்ளனர். அதாவது, நேற்றைக்கு புனிதமானது என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நாளைய தினம் கரைந்து காணாமல் போகும். அது முன்பிருந்த அனைத்து சமூக அமைப்புகள் சாதித்ததைவிட பல நூறு மடங்கு சாதித்தது என்று முதலாளித்துவத்தை புகழ்ந்துரைத்திருப்பார்கள். அதே சமயம் அது சுரண்டலை மிக எளிதாக்கியுள்ளது. அதாவது வர்க்கப் பகைமைகளை சிக்கலானதாக இருந்ததை மிகவும் எளிதாக முதலாளி - தொழிலாளி என்று மாற்றி விட்டது என்று கூறியிருப்பர். அதாவது, முதலாளித்துவத்திற்கு சவக்குழியைத் தோண்டும் தொழிலாளி வர்க்கத்தையும் முதலாளித்துவமே உருவாக்கியது என்று உரைத்திருப்பர். அந்த அடிப்படையில்தான் அது ஒரு வகையில் சமூக மாற்றத்திற்கான புரட்சிகரமான வர்க்கத்தை படைத்திருக்கிறது என்று சொல்ல விழைகிறேன். குறிப்பாக முதலாளித்துவம்தான் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை புரிந்துள்ளது. அந்த அடிப்படையிலேயே இதனை கூறியுள்ளேன் செம்புலம். நன்றி.

Rajaraman said...

தோழர் சந்திப்பு அவர்களே, உங்கள் விளக்கங்களிஎல்லாம் படிக்கும் பொது என் மனதில் தோன்றுவதை உள்ளபடியே சொல்லவா. கோபிக்கமாட்டீர்களே.

நீங்களெல்லாம் ஏதோ ஒரு மாயையான உலகில் சன்ஜாரிப்பது போல் தோன்றுகிறது.

Anonymous said...

நீங்களெல்லாம் ஏதோ ஒரு மாயையான உலகில் சன்ஜாரிப்பது போல் தோன்றுகிறது.

இந்த வார்த்தையைத்தான் அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் முதல் டைம் நியூஸ் வீக் மேகசின் வரை முதலாளித்துவத்தை பற்றி சொன்னது

சந்திப்பு said...

அன்புள்ள ராஜாராம் பொருள்மயமான இந்த உலகில் மாயையை தேடுவது அபத்தத்திலும் அபத்தம்! எனவே மாயைப் பற்றிய மயக்கம் எங்களுக்கு இல்லை உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் தாராளமாக தேடிக் கொண்டேயிருங்கள்.

Anonymous said...

நண்பரே,

என் அனுபவத்திலிருந்து சில கருத்துக்கள். 1980 இல் சென்னையில் இயந்திரவியல் முடித்து விட்டுப் புகழ் வாய்ந்த ஒரு நல்ல வட இந்திய automobile நிறுவனத்தில் மூன்றாண்டுகள் பணி புரிந்து விட்டு மேலே படிக்க வேண்டும் என்ற தீராத ஆசையால் நாட்டின் மிகச் சிறந்த நிர்வாகக் கல்வி நிறுவனம் ஒன்றிலிருந்து MBA படித்த பின் கல்லூரி வளாகத்திலிருந்தே Delhi NCR region இல் உள்ள ஒரு automobile கம்பெனியால் தேர்வு செய்யப் பட்டு லேசான இறுமாப்புடன் வேலையில் சேர்ந்தேன். Executive, Supervisor, Worker எனப்படும் மூன்று வர்க்கத்தவரையும் குரல்வளையை நெரிக்கும் ஒரு முதலாளித்துவத்தை அப்போதுதான் பார்த்தேன்! பலரும் போராடிப் பெற்ற ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு என்பது கேலிக்கூத்தாக்கப் படுவதைக் கண்டேன் ! பத்திரிகைகளைக் கைக்குள் போட்டுக் கொள்வது, ஏதோ நேர்மையின் ஒட்டு மொத்தக் குத்தகைக்காரர்கள் போல் வெற்றிகரமாக பாவ்லா செய்வது, 'ஐயய்யோ! மற்ற லாலா கம்பெனிகளில் நிலைமை இன்னும் படுமோசம்! இங்கே எவ்வளவோ தேவலை!' என்ற ஒரு பரப்புரையை சாமர்த்தியமாகத் தொழிலாளர்களிடையே பரவ விடுவது, அடிப்படை Housing, Travel, Leave, மருத்துவ மற்றும் மற்ற வசதிகளுக்குக் கூடப் பிச்சைக்காரத்தனம் செய்வது , Executive களுக்கு ஒரு மாயையான status ஐ உருவாக்கி Supervisor, Worker இருவரையும் பதவி உயர்வுக்காகப் பேயாய் அலைய வைப்பது (அந்த மாயையை நம்பி Executives ஏற்கனவே அப்படித்தான் அலைந்து கொண்டிருப்பார்கள் என்பது தனிக்கதை!),
'இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்' என்பதை அப்பட்டமாக நிரூபித்துக் காட்டுவது , வாரத்தில் ஒரு நாளான ஞாயிறு விடுமுறையைத் தன் இஷ்டப்படி செவ்வாய் , புதன் என்று அவ்வப்போது மாற்றி 10 நாள் சேர்ந்தாற்போல் வேலை வாங்குவது , இந்த எழவில் நடு நடுவே பார்ட்டி கொண்டாடி Snobbery க்கு ஒரு புது இலக்கணமே உருவாக்குவது, 'பையன் பார்ட்டியில் எப்படி behave பண்றான்?' என்று ரகசியமாகக் கண்காணிப்பது ... அப்பப்பா! சொல்லிக் கொண்டே போகலாம்! Labour Law என்ற ஒன்று இந்த நாட்டில் இருக்கிறதா என்ற அடிப்படை சந்தேகமே எனக்கு வந்து விட்டது! நல்ல வேளையாக 1987 இல் ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் சேர்ந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்! அடிமைத் தளையிலிருந்து விடுபட்டேன்! வாய் புளிச்சுதோ மாங்காய் புளிச்சுதோ என்று பொதுத் துறையைத் தாக்குபவர்கள் கொஞ்சம் யோசிக்கட்டும்!

நன்றி!

சினிமா விரும்பி