ஞாயிற்றுக்கிழமை இரவு அலுவலகப் பணி முடிய இரவு 10.30 மணியை எட்டியிருந்தது. மீண்டும் வீட்டுக்கு செல்ல வேண்டியது அவசியம் என்பதால், இரவு 11.00 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சத்தியமங்கலம் செல்லும் பேருந்துக்காக காத்திருந்தேன். பொதுவாக பேருந்து பயணத்தின் போது, புத்தகத்தின் துணையில்லாமல் இருப்பதை நான் விரும்புவதில்லை. ஆனால், அன்று புத்தகம் என்னிடம் இல்லை. ஏதாவது ஒரு தமிழ் வார இதழ்களை வாங்கி புரட்டலாம் என நினைத்து புத்தக கடையை நோக்கி புறப்பட்டேன். கடைக்கு வெளியே நின்றபடி, இதழ்களில் உள்ள முக்கிய செய்திகளை குறிப்பிடும் சுவரொட்டிகளில் பார்வையை செலுத்தினேன். யூகங்களையே அடிப்படையாக கொண்ட புலனாய்வு இதழ்களின் அரசியல் கண்ணோட்டம்; சினிமாவை மட்டுமே பிரதானப்படுத்தும் சில இதழ்கள் என அடுத்தடுத்து நான் விரும்பத்தகாத புத்தகங்களின் சுவரொட்டிகள் எரிச்சல்படுத்தியது. வேறு வழியே இல்லை என நொந்து கொண்டு திரும்பிய போது, தேசிய கொடிகளின் மூவர்ண நிறத்தை கொண்டு இருந்த சுவரொட்டி என்னை கவனிக்க வைத்தது. ‘60 மகத்தான இந்தியர்கள்’ எனும் தலைப்பில் இருந்த அந்த சுவரொட்டி, ‘இந்தியா டுடே’ எனும் வார இதழின் உடையது. தேசிய அரசியலை ஆழமாக ஆராயும் வார இதழ் என்பதால், எனக்கு இந்தியா டுடே மீது மதிப்பு உண்டு. இருப்பினும், கவர்ச்சி இலை, ஆபாசம் தொடர்பான கணக்கெடுப்பு உள்பட அவசியமற்ற செய்திகள் என்னை எரிச்சல்படுத்த தவறியதில்லை. விடுதலைப்புலிகள் மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகளை பற்றிய கண்ணோட்டம் ஆகியவையும் இதில் முக்கிய இடம் பிடிக்கிறது. இருப்பினும் 60 வருட சுதந்திய இந்தியாவில், 60 மகத்தான இந்தியர்கள் என வரிசைப்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை அறிய புத்தகத்தை (ஆவலுடன்) வாங்கினேன். புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்புகையில், வெகுநேரமாக காத்திருந்த சத்தியமங்கலம் செல்லும் பேருந்து புறப்பட தயாராக இருந்தது. இரவு நேரம் என்பதால், பேருந்தில் கூட்டம் அதிகளவில் இல்லை. ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தபடி, புத்தகத்தை விரித்தேன். புத்தகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பாக ஆசிரியரிடமிருந்து எழுதப்பட்ட அரைப்பக்க கடிதத்தை படித்து முடிக்கும் முன், பயணச்சீட்டுடன் அருகில் வந்து நின்றார். பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு மீண்டும் புத்தகத்தை புரட்டினேன். பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி என நீண்ட 10 பேரின் பட்டியல் அடுத்த பக்கங்களில் இடம்பெற்றிருந்தது. கருத்துக்கணிப்பின் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக கூறி, அவர்களுக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதமும் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டியலை முழுக்க பார்வையிட்டேன். தொடர்ந்து, புத்தகத்தை புரட்டினேன். அகர வரிசையில் 60 தலைவர்களும் வரிசைப்படுத்தப்பட்டிருந்ததால், முதலில் சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கார் பெயரும் கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ள தலைவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலில், அம்பேத்கர் குறித்த கட்டுரையை பின்னர் படித்துக்கொள்ளலாம் என பார்வையை அடுத்த பக்கத்துக்கு செலுத்தினேன். சி.என்.அண்ணாதுரை என குறிப்பிடப்பட்டு இருந்த அடுத்த கட்டுரை, தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவை பற்றியது. உரிமை போராளி, திராவிட தலைவர் என முதல் இருவரது பெயரும் எனக்குள் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த, அடுத்தடுத்த பக்கங்களுக்கு விரைந்தேன். பாராட்டப்படும் தலைவர்களின் பெயர்களோடு, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தொழிலதிபர்கள் தீருபாய் அம்பானி, ஜே.ஆர்.டி. டாடா, சதுரங்க போட்டியாளர் விஸ்வநாதன் ஆனந்த், மட்டைப்பந்து ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், திரைப்பட இயக்குனர் பிமல்ராய் என 60 பேரின் பெயர் மற்றும் கட்டுரையோடு நீண்டது பட்டியல். 64 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை முழுவதுமாக புரட்டினேன். இந்த பட்டியில் மகாத்மா காந்தியடிகளால் பெரிதும் கவரப்பட்ட தந்தை பெரியாரின் பெயர் இடம் பெறவில்லை. ஏமாற்றமும், அதிர்ச்சியும் என்னவோ செய்ய, மீண்டும் கடைசியில் இருந்து புத்தகத்தை புரட்டினேன். இல்லை. அவரது பெயர் பட்டியலில் இல்லை. முன்னர் குறிப்பிட்டது போல, இந்த பட்டியல் ‘இந்தியா டுடே’ மீதான தன் எரிச்சலை அதிகரிக்க செய்தது. இதனால், அடுத்த சில நிமிடங்கள் புத்தகத்தை மூடி வைத்து விட்டு, ஜன்னல் வழியே பார்வையை செலுத்தினேன்.
பெரியார் பெயர் இடம்பெறவில்லை எனினும், பேரறிஞர் அண்ணாவின் பெயர் இடம்பெற்றது என்னை ஆறுதல் படுத்தியது. அந்த ஆறுதல் அண்ணாவைப்பற்றிய கட்டுரையை படிக்க என்னை தூண்டியது.11ம் பக்கத்தில் உள்ள அவர் குறித்த கட்டுரையை வேகமாக எடுத்து வாசிக்க தொடங்கினேன். சில நிமிடங்கள் நிகழ்ந்த அந்த வாசிப்பு என்னை மேலும் எரிச்சல்படுத்தியது. மீண்டும் புத்தகம் மூடப்பட்டது ‘‘அண்ணாவை தனது வலது கரமாக்கினார் பெரியார். அதே அண்ணா பெரியாருக்கு எதிராக கலகமும் செய்தார்’’ ‘‘பெரியார் தவறவிட்ட ஆற்றலை கையில் எடுத்தது தான், அண்ணாவின் வெற்றிக்கு வித்திட்டது’’ ‘‘பெரியாரின் பொருத்தமில்லா திருமணம் தி.மு.க.வை உருவாக்கியது’’ என அண்ணாவை பெரியாருடன் ஒப்பிட்டு இருந்தது அந்த கட்டுரை. பெரியார் மீதுள்ள ஈர்ப்பால் மட்டுமே, அவருடன் இணைந்தார் அண்ணா; அரசியல் கட்சி துவக்குவதில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்துமோதலே தி.மு.க.வை உருவாக்கியது. ஆனால், அதேயே வேறு தோணியில் தெரிவித்திருந்தது அந்த கட்டுரை. அதில், குறிப்பிட்டிருப்பவை தவறல்ல. ஆனால், அவை குறிப்பிட்ட விதம் பெரியாரை விமர்சிப்பது போல் அமைந்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. பெரியாரின் பல கொள்கைகள், அண்ணாவின் ஆட்சியின் போது, சட்டமாக்கப்பட்டன. ஆனால், அது தொடர்பாக ஒரு வரியும் அதில் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்ல மேடைப்பேச்சை தவிர, சுயமரியாதை திருமணம், மதுவிலக்கு போன்ற வியக்கத்தக்க அண்ணாவின் சாதனைகள், இதில் இடம்பெறவில்லை. அண்ணா குறித்த கட்டுரையில், பெரியார் தொடர்பாக எழுதப்பட்ட இந்த வாசகங்கள், பெரியார் பெயர் இந்த பட்டியலில் இடம்பெறாமல் போனது ஏன் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது. சமுக நீதி காத்தவர்; சாதியை வேரறுத்தவர்; பகுத்தறிவை நிலைநாட்டியவர்; அனைவரும் சமம் என்ற சூழலை உருவாக்கியவர்; மதுவிலக்கை தீவிரமாக அமல்படுத்தியவர்; பெண்கள் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்த முதல் தலைவர்; பெண் அடிமை தகர்த்தவர்; மக்கள் பிரதிநிதி மற்றும் 27 சிறப்பு நிலை பதவிகளால் மக்கள் தொண்டாற்றியவர் என நீளும் இவரின் சாதனைகள் மகாத்மா காந்தியடிகள் உள்பட பல்வேறு தலைவர்களை திரும்பி பார்க்க வைத்தது. ஆனால், இந்தியா டுடேயின் செய்திக்குழுவினருக்கு இவரும், இவரின் தொண்டும் தெரியவில்லையோ என்னவோ. ஒரு வேளை இவரின் கடவுள் மறுப்பு கொள்கை, இவர் பெயரை ஏன் இடம்பெறச்செய்ய வேண்டும் என நினைக்கத் தோன்றிருக்கலாம். கோடி கோடியாக பெற்று, விளையாட்டின் மூலம் இந்திய உணர்வையும், விளம்பரத்தின் மூலம் வெளிநாட்டு குளிர்பான மோகத்தையும் மக்களிடம் விதைத்து வரும் சச்சின் டெண்டுல்கருக்கும், இன்னும் சில விளையாட்டு வீரர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் இந்த பட்டியலில் இடம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்காக அனைத்தையும் இழந்து, சமூக விடுதலைக்கு போராடிய பெரியாருக்கு இடமில்லை. திராவிடர் கழகத்தை உருவாக்கி போராடிய பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை, திராவிடர் கட்சிகளே மறந்து விட்ட சூழலில், அவரால் எதிர்க்கப்பட்டவர்கள் அவரை மறந்துவிட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியா டுடே ஆசிரியர் குழுவின் பார்வைகளில் இருந்து தந்தை பெரியார் விடுபட்டது துரதிஷ்டவசமானது. தொடர்ந்து, மற்ற தலைவர்களின் கட்டுரையை வேகமாக படித்து முடித்தேன். சிலரது பெயர்கள் இடம்பெற்றது சங்கடப்படுத்தியிருந்த போதும், மகாத்மாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் குறித்த கட்டுரை உற்சாகப்படுத்தியதை மறுக்க முடியாது. ஆனால், தந்தை பெரியாரின் இடம்பெற செய்யாததற்காக இந்தியா டுடே ஆசிரியர் குழுவை குட்டுவதை தவிர வேறு வழியில்லை. ‘‘முழு இதழையும் படித்து முடித்த பிறகு இதை ‘மகத்தான இதழ்’ என்று சொல்வீர்கள்,’’ இது இதழின் முதல் பக்கத்தில் இந்தியா டுடே ஆசிரியரிடமிருந்து எழுதப்பட்ட கடிதத்தின் கடைசி வரிகள், ஆனால், அவ்வாறு சொல்ல தோன்றவில்லை. பெரியார் தோணியில் கூற வேண்டுமானால், போங்கய்யா வெங்காயம் எனவே சொல்ல தோன்றியது.
2 comments:
அறுபது மகத்தான இந்தியர்கள் என்ற அந்தக் கட்டுரையை நானும் படித்தேன்.
உங்கள் விமரிசம்னம் சரியானதே. அந்த மகத்தான இடத்துக்கு தகுதியானவர் பெரியார் மட்டுமே.
ஆனாலும் ஒரு புத்தகம் அதன் அரசியல் ஆகியவற்றை அறியாமல் உங்கள் விமரிசனம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. அவர்கள் பெரியாரை மட்டும் விடவில்லை தேசத்தின் பல்வேறு சமூக நீதிப் போராளிகளை விட்டிருக்கிறார்கள். அதையும் மீறி குறிக்கப் பட்டிருப்பவர்களையும் எதற்காக அவர்கள் போராடினார்கள் என்று குறிக்காமல் பொத்தாம் பொதுவான வாதிலே வர்ணித்திருந்தார்கள்..
இன்னொன்றை கவனித்த்ருந்தால் தெரியும் - சாதி அடிமைத்தனக்த்தை சமூகத்தின் அவசியமாகக் கருதிய வல்லபாய் படேலை முதல் பத்து தலைவர்களில் ஒருவராக அவர்கள் வலிந்து கொண்டு வந்திருந்தார்கள்.
நிறைய பேச வேண்டு - ஆனால் நேரமில்லை - மிச்ச விசயங்களை பியாகு பதிகிறேன்.
correct sir , periyer illatha tamil nadu ............. nenachale kadupputhan varuthu............ india onrum vilaiyattu alla........ vilai yatu verarkalai serpatharkku......... panam onrum varalaru akathu............... panakkararkal mattum serpatharkku........
Post a Comment