October 14, 2009

தினமலர் ஊழியருக்கு சில கேள்விகள்

இலங்கையில் இந்திய அரசே முன்னின்று போரை நடத்தி வந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடந்ததைபோல திசைமாறி கிடக்கிறது ஊடகங்களின் போராட்டம்.
திரைப்பட நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, எவ்வித ஆதாரமுமின்றி தினமலர் நாளிதழ் அவதூறு செய்தியை வெளியிட்டதின் பயனாக திரையுலகம் கொதித்தெழ விஸ்வரூபம் எடுத்தது பிரச்னை. சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க திரையுலகமே கோரியதையடுத்து, தினமலர் செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை நடிகர்கள் விமர்சிக்க, கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விமர்சனத்தை எதிர்த்தும் ஊடகவியலாளர்கள் கொதித்தெழுந்தனர்.
இதில் பெரும்பாலான போராட்டங்களை முன்னின்று நடத்தியது தினமலர். மற்ற நிறுவன ஊழியர்களை மிகவும் வலியுறுத்தி கூட்டம் நடத்துங்கள், தீர்மானம் போடுங்கள், போராட்டம் நடத்துங்கள் என தினமலர் நிறுவன ஊழியர்கள் கெஞ்சியதை யாரும் மறுக்க முடியாது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தினமலர் லெனின் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்ட ஒரு பத்திரிக்கையாளர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வாரி வழங்கியது தினமலர்.
இதன் பின்னர் தினமலர் ஊழியர்களும், இன்ன பிற ஊடக நிறுவன ஊழியர்களும் சில இடங்களில் போராட்டமும், கண்டன தீர்மானங்களையும் நிறைவேற்றல் நிகழ்வையும் நடத்தினர். ஆனால், இவை எல்லாம் சரிதானா என்பதில் தான் சிக்கல்.
இது தொடர்பாக தினமலர் ஊழியர்களுக்கு சில கேள்விகள்.
01. தினமலரின் செய்தி ஆசிரியர் லெனின் தானா? அப்படியெனில் இதற்கு முன்னர் தினமலர் நாளிதழில் வந்த அலுவலகம் சார்ந்த செய்திகளில் செய்தி ஆசிரியர் என வேறு நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஏன்? செய்தி ஆசிரியர் என்ற பதவி உயர்வு அவருக்கு எப்போது வழங்கப்பட்டது?
02. ஒரு நாளிதழ் மீது சட்டரீதியிலான பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட நாளிதழ் பொறுப்பாசிரியர் அல்லது வெளியீட்டாளர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கைது செய்யப்பட்ட நாளான்று நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசித்த பின்னரே செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டார். அப்படியேனில், செய்தி ஆசிரியரை போலீசாருடன் அனுப்பி வைத்தது யார்?
03. தினமலர் நாளிதழில் பணியாற்றும் யாரும் பத்திரிக்கையாளர் சங்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள முடியாது. இது நிர்வாகத்தின் நேரடி உத்தரவு. அப்படியிருக்க இப்பிரச்னையில் மட்டும் பத்திரிக்கையாளர் சங்கங்களை அணுக உங்களை நிர்வாகம் வலியுறுத்தியது ஏன்?
04. திருப்பூரில் தினமலர் நாளிதழ் நிருபர், புகைப்பட கலைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது, ஒட்டுமொத்த ஊடகங்களும் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய போது, பாதிக்கப்பட்ட நீங்கள் (தினமலர் ஊழியர்கள்) மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்ததின் காரணம் தெரியுமா உங்களுக்கு?
05. உங்கள் நிறுவன (தினமலர்) நிர்வாகி ஒருவர் மீது பெண் நிருபர் ஒருவர் பாலியல் புகார் கூறிய போது, (அது உண்மை என தெரிந்தும்) கொதித்தெழுந்தீர்களே? மற்றவர்களை கொச்சைபடுத்துதல் மட்டும் தகுமோ?
06. திரைப்பட இயக்குனர்களில் மணிரத்னம், நடிகர்களில் கமலஹாசன், ரஜினி தவிர சிலரை தவிர, மற்றவர்களை இயக்குனர், நடிகர் என குறிப்பிடாமல் சினிமாகாரர் என்ற அடைமொழியுடன் பிரசுரிப்பது ஏன் என தெரியுமா?
07. இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் செய்திகள் மற்ற பத்திரிக்கைகளில் வந்தாலும், உங்கள் பத்திரிக்கையில் இடம்பெறுவதில்லையே ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என நீட்டி முழக்கி எழுதுகிறீர்களே? அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இதுபோன்ற பிரச்னையில் சம்பந்தப்பட்ட போது அதனை அடக்கி வாசிப்பது ஏன்? அதுபோன்ற செய்திகளை வெளியிடாதது ஏன்?
09. கோவை உட்பட பல்வேறு இடங்களில் இப்பிரச்னை குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சங்க கூட்டங்களில் தினமலரின் செய்தி மீது கடுமையான விமர்சனம் இருந்தது. பத்திரிக்கையாளர் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததை செய்தியாக விவரித்த ‘தினமலர்’, இதனை குறிப்பிடாதது ஏன்?
கேள்விகளுக்கு எனக்கு பதில் தேவையில்லை. உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
மற்ற ஊடகவியலாளர்களும் இந்த கேள்வியில் ஆழ்ந்து தினமலரின் நிலையை புரிந்து கொண்டால், தினமலர் நாளிதழுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது தெரியும். ஆயிரம் பிரச்னை நடந்தாலும், தினமலர் தன்போக்கில் இருந்து மாறாது, எனவே மீண்டும் அது சர்ச்சையில் சிக்கும். ஆனால் அப்போது மற்ற ஊடகவியலாளர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். அதையும் நாம் காணத்தான் போகின்றோம்.

7 comments:

venkat said...

நல்லா கேட்டீங்க நஞ்சுனு
அருமை.
தினமலர் பத்திரிக்கை
பத்திரிக்கை உலகில் வித்தியாசமான பத்திரிக்கை
என்பது பத்திரிக்கைகாரர்களுக்குத்தான் தெரியும்,
அதனால் தான் கைதுக்கு எதிராக நடந்த
ஆர்பாட்டம் வெற்றியடையவில்லை.

மலரகம்(நாகங்குயில்) said...

அத்தனை கேள்விகளும் சரி
அந்தக்காலத்திலேர்ந்தே அவிங்க
அப்படிதான்.
திருந்தவே மாட்டாங்க..

ச.ஜெ.ரவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்
பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமில்லை
மக்களுக்கும் தெரிய ஆரம்பிச்சிருக்கு.
இனியும் இந்த நாளிதழை படிக்கணுமா
அப்படின்னு மக்கள் யோசிச்சா சரி

ச.ஜெ.ரவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலரகம்
அந்த காலத்தில் இருந்தே அவங்க அப்படித்தான்.
ஆனால் மக்களாகிய நாமும் அதை ஏத்துக்கிறது தான் தப்பு.
அதுக்கு தான் இந்த பதிவு.
தினமலர் ஊழியர்கள் பதிவு படித்தா திருந்த போறாங்க.

Bharathi said...

நீங்கள் எழுதியவை அத்தனையும் உண்மை.

Bharathi said...
This comment has been removed by the author.
Unknown said...

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க கூடாது