‘நம் சக்தியை, எதிரிக்கு எதிராக மட்டும் தான் பயன்படுத்தணும்’ பேராண்மை படத்தில் கதாநாயகன் பேசும் வசனமாக இதை எழுதியிருப்பார் இயக்குனர் சனநாதன். இப்போது ஒட்டுமொத்த ஊடகங்களும், சனநாதனை எதிரியாக பார்க்கிறதோ என்னவோ. தனது சக்திகளை திரட்டி எதிர்க்க துவங்கியுள்ளன.
சாதி எதிர்ப்பு அரசியல், அதிகார வர்க்கத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை பிரதானமாக முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் குறித்த விமர்சனத்தில் எந்த ஊடகங்களும், அதனை குறிப்பிடாமல் (சாதியிய, அதிகார வர்க்க கண்ணோட்டத்தில்) இந்த படத்தை ஒரு தேசபக்தி திரைப்படமாக சித்தரித்து வருகின்றன. உண்மையில் ‘பேராண்மை’ தேச பக்தி படமா?.
01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது.
02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது?
03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது?
04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்?
05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?
வழக்கமான திரைப்படங்களில் இருந்து முழுமையாக வேறுபடுகிறது பேராண்மை திரைப்படம்.
01. முதலில் படத்தின் கதாநாயகன் துருவன். அம்பி, கிச்சா, ராகவன் என
சிலரை மட்டுமே கதையின் நாயகர்களாக நம் முன்னிறுத்தி வந்த திரைப்படங்களில் இருந்து வேறுபடுகிறது பேராண்மை. துருவன் என்ற பழங்குடியின மக்களில் ஒருவரை கதாநாயகனாக காட்டியதற்கு இயக்குனர் சனநாதனை யாரால் பாராட்டாமல் இருக்க முடியும்.
02. சாதி எதிர்ப்பு அரசியல். ‘அவன் என்ன சாதி, நாம என்ன சாதி, நமக்குன்னு ஒரு பாரம்பரியம் இருக்கு’ என கதாநாயகன் துருவனை பற்றி நாயகிகள் விமர்சிக்கும் வசனங்களில் இளம் பெண்களிடம் படிந்துள்ள சாதியுணர்வை கூறியுள்ளதும், ‘எங்க ஆளுங்களுக்கு இங்கிலீஸ்ல பேசுனா புரியாது. உங்க கிட்ட பேசுன உங்களுக்கு புடிக்காது’ என நாயகிகளிடம் கூறும் இடங்களில் சாதி எதிர்ப்பு அரசியலை விதைத்துள்ளதிலும் இயக்குனர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
03. அதிகார வர்க்க எதிர்ப்பு. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பை அப்பட்டமாக பதிவு செய்துள்ளது இந்த திரைப்படம். பழங்குடியின இனத்தை சேர்ந்தவர் என்பதால் வனகாவலவரான கதாநாயகனிடம், தனது ‘ஷ¨’வை பாலிஸ் போட்டுவரச்சொல்லும் வன அதிகாரி, அதே காட்சியில் உயர்சாதியை சேர்ந்த கல்லூரி மாணவிகளை உட்கார வைத்து பேசுவது என பல இடங்களில் அதிகார வர்க்க எதிர்ப்பை காட்டியிருக்கிறார் இயக்குனர். இறுதியில் குடியரசுத்தலைவரிடம் பொன்வண்ணன் விருது பெறுவது அதிகார வர்க்க எதிர்ப்பை முழுமையாக அம்பலமாக்கும் காட்சி.
04. படத்தின் பெயரில் ஆண்மையிருக்குமாறு பேராண்மை என பெயரிட்டு, பெண்மை போற்றும் வகையில் பெண்களை கதையின் நாயகிகளாகவும், சகாசம் செய்பவர்களாகவும் முன்வைத்ததற்காகவும் பாராட்டுகள். ‘கிராமத்துக்கு பெண்களுக்கு முந்தானை விலக்கியே காலம் போச்சு; நகரத்து பெண்களுக்கு முடியை விலக்கியே காலம் போச்சு’ என்பன உள்ளிட்ட வசனங்கள் ‘நச்’.
05. தீவிரவாதிகள் என்றதும் இஸ்லாமியர்களை கண்முன் நிறுத்தும், திரைப்படங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது பேராண்மை. சர்வதேச கூலிப்படையினரின் முகத்தையும், ரசிகர்களுக்கு காட்டியது அழகு.
6 comments:
வணக்கம்,
உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்,
பாருங்கள்.
நல்ல விமர்சனம். ஆனால், இதை ஒரு தேசபக்தித் திரைப்படமாக பொதுமக்கள் சிலரும் புரிந்து கொள்வது கவலையே.
இப்படி தவறான புரிதலைத் தருவதை சிலர் விமர்சிக்கிறார்கள். எனக்கென்னவோ துருவனின் தேசம் சார்ந்த கருத்துகள் இந்த மண், மக்கள், அவர்களின் முன்னேற்றத்தைக் காப்போம் என்பதாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இந்திய ஒன்றியம் என்ற அதிகார அமைப்பைக் காப்போம் என்று புரிந்து கொள்ளவில்லை.
நல்ல விமர்சனம்..
சனநாதன் தன் ஒரு ஒரு படத்திலேயும் நம்மை ஆழமாக யோசிக்க வைக்கிறார்
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
உங்கள் கேள்விகளுக்கான வரிசை பதில்கள் :-
//01. இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கைகோள் ஏவுவதாக தொடங்குகிறது இந்த திரைப்படம். இந்திய அரசு இயற்கை விவசாயத்துக்கு செயற்கை கோள் ஏவுகிறது என்றால், குழந்தை கூட நம்பாது. விவசாயம் சார்ந்த அடிமட்ட தொழிலாளர்கள் நலனை காக்காமல் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என்பதை மறைமுகமாக சித்தரிக்கும் காட்சியாகவே இதனை பார்க்கிறேன். எனவே இந்திய அரசை போற்றும் படமாக, தேச பக்தி படமாக கருத முடியாது//
௧)அட உங்க தேவைக்கு எழுதாதீங்கப்பா..செயற்கை கோள் ஏவுவது
இந்தியான நம்ப முடியாதா ? அப்ப ஹீரோ என்ன பாகிஸ்தானுக்காகவா சண்டை போடுறார். இந்திய செயற்கை கோளுக்காக என்றுதானே சித்தரிச்சுருக்கார் சனநாதன்.
//02. ‘காட்டுல சுள்ளி பொறுக்கிறவனை கூட விடமாட்டோம்’ என காட்டில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்றும் வனத்துறை அதிகாரிகள், ‘இந்த இடத்தையும் ரியல் எஸ்டேட் போட்டு வித்துட்டீங்களா’ என அதிகாரிகளிடம் கேட்கும் பழங்குடியின மக்கள் என அரசின் உத்தரவுகளுக்கு எதிரான வசனங்கள் இந்த படத்தில் நிரம்பியுள்ளன. எப்படி இதனை தேச பக்தி படமாக பார்ப்பது? //
இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட வர்க்கம் புறக்கணிக்கப்படுவதாக , அதனால் அரசுக்கு எதிரான வசனங்கள் வருகிறது.இந்திய தேசத்தை அழித்து விட வேண்டும் என்ற வசனம் இல்லையே.
//03. ‘என்ன சர்வாதிகாரம் பண்ணறீங்களா? உழைக்கிற மக்கள் சர்வாதிகாரம் பண்ற நாள் சீக்கிரம் வந்துடும்’ என பழங்குடியின மக்கள் பேசும் வசனங்கள், தேச பக்தி திரைப்படத்தின் வசனங்களாக எப்படி பார்க்க முடிகிறது? //
நியாயம்தான் இந்த கேள்வி, ஆனால் அவர் தேசத்திற்கெதிரான பிரிவினையை காட்டவில்லை.இந்த தேசத்தில்தான் உழைக்கும் வர்க்க சர்வாதிகாரம் வரும் என சித்தரித்திருக்கிறார்
//04. ‘எந்த வசதி இல்லாமலே இவங்க இவ்வளவு படிக்கறாங்களே. வசதி இருந்துட்டா அவ்வளவு தான் நம்மளை ஒதுக்கீருவானுங்க’ என்ற வசனத்திலும், ‘சிகரத்தில் இருந்தாலும் நாங்க வளரவில்லை’ எனும் பாடல் வரிகளிலும் பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுவதை அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த படத்தை இந்திய அரசை போற்றும் படமாக கற்பனை செய்ய முடிகிறதா உங்களால்? //
பழங்குடிமக்கள் புறக்கணிக்கப்படுவதாக பதிவு செய்தது அரசை எதிர்ப்பதல்ல நண்பரே ,அவர்கள் முன்னேற்றத்தில் இந்த அரசு அக்கறை காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே !
//05. படத்தின் இறுதியில் பொன்வண்ணன் விருது பெறுவது போல் காட்சி உள்ளதே, அதனை அதிகார வர்க்கத்துக்கு எதிரான காட்சியாக சித்தரிக்க முடிகிறதா, தேச நலன் காத்த வீரருக்கான விருதாக சித்தரிக்க முடிகிறதா?//
தேச நலன் காத்த வீரன் புறக்கணிக்கப்படுவது என்பதில் ஐயமேதும் இல்லை,விருது பெரும் அந்த பாத்திரம் மட்டுமே இந்திய அரசாக கருதப்பட முடியாது.
மற்றபடி சாதி எதிர்ப்பு அரசியல்,அதிகார வர்க்க எதிர்ப்பு,பெண்ணியம் என்பன பாராட்டக்கூடிய அம்சங்கள், என்னவோ இவைஎள்ளவற்றையும் இந்திய தேசம் ஏத்துக்காதது போலவும், படமே அரசுக்கெதிராக உள்ளது போலவும் கூறுவது "அல்பத்தனம்"
இன்னும் ஒரு தடவ படம் பாருங்க சாமாநியனா ?
சந்தர்ப்பவாதியாக வேண்டாம்..!
திருவாளர் எதிர்கட்சி அவர்களே
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
ஒரு நாட்டின் செயற்கை கோளை அழிவில் இருந்து காப்பாற்றுகிறார். ஆனால், அவர் யார் என்பது யாரால் அடையாளம் காணப்படவில்லை. அவருக்கு பதிலாக அந்த வெற்றியை பலர் கொண்டாடுகிறார்கள். பழங்குடியினர் என்பதால் அவர் புறக்கணிக்கப்படுகிறார். அவரது இனத்தை சேர்ந்த அத்தனை பேரும் புறக்கணிக்கப்படுகிறார். இந்தியா எனும் ஒட்டுமொத்த தேசத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். அதிகாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
இதை சொன்னால், கதையின் நாயகன் பாகிஸ்தானுக்காகவா சண்டை போடுகிறார் என்ற கேவலமான கேள்வி வேறு. நான் தேச பக்தி படம் அல்ல என்று தான் சொன்னேனே தவிர. தேச விரோத படம் என்று சொல்லவில்லையே.
அரசுக்கு எதிராக பேசப்படும் வசனங்கள்; காட்சியமைப்புகள் இருந்தாலே அது தேசபக்தி படமல்ல. முதலில் இதை புரிந்து கொள்ளுங்கள்
சும்மா யார் படத்தை எடுத்தாலும் குறை சொல்வதற்காக கிளம்பி விடாதீர்கள்.
அரசுக்கு எதிரான சர்வாதிகாரம், உழைக்கும் மக்களால் ஏற்படுத்தப்படும் என்பது அரசுக்கு விரோதமானது அல்ல. அது தேசபக்தியை உறுதி செய்யும் வசனம் என்பதா உங்கள் வாதம்.
பழங்குடியினர் முன்னேறவில்லை; அதை அரசு கண்டுகொள்வதில்லை என்பதே அரசை விமர்சிக்கும் படம் தானே நண்பரே.
என்ன விமர்சனம் இது படித்து விட்டு தான் போட்டீர்களா?
நான் கூறுகிறேன். உங்கள் மேலாதிக்க கண்ணாடிகளை கழற்றி தூர எரிந்து விட்டு, மீண்டும் பேராண்மையை பாருங்கள். அப்போதாவது பேராண்மை உங்களுக்கு வருகிறதா பார்ப்போம்.
அடக் கண்றாவியே!
அபத்தக் களஞ்சியமான படத்துக்கு எப்படியெல்லாம் விமர்சனங்கள்!
1) ரிவால்வார் வைத்துக்கொள்ளும் அதிகாரம், ஜீப் ஓட்டும் தன்மை, க்ளாஸ் எடுத்தல் போன்றவற்றை ஒரு வனக் காவலர் செய்ய அனுமதிக்கப் படுவதில்லை.
2) ஆயுதம் தொலைந்தால் அடுத்த நிமிடம் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். என்னமோ பல் குத்துற குச்சி காணோம்கிற மாதிரி அசால்டாக இருக்க மாட்டார்கள்.
3) ஜீப் உருண்ட அடுத்த நிமிடம் வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
4)எந்த வனக் காவலருடனும் பெண்களைத் தனியே அனுப்ப மாட்டார்கள்.
4)உயர் அதிகாரி மீது ‘கை’வைத்துவிட்டு எதுவுமே நடக்காத மாதிரி மறுபடியும் ட்ரெயினிங் கொடுக்க வனக் காவலரால் வரவே முடியாது.
5) கூட வந்த பெண்கள் நடந்ததையெல்லாம் சொல்லாமல் இருப்பார்களா?
அர்னால்ட் ரேஞ்சுக்கு ஒரு படம் எடுக்கும் சிறுபிள்ளைத்தனமா முயற்சி இது. ஏதோ ’பாத்தோம் சிரித்தோம்’னு போகாம இதில தத்துவ விசாரங்கள், தார்மீகங்கள்னு தேடுற ஒங்களையெல்லாம் பாத்தாச் சிரிப்புச் சிரிப்பா வருது.
Post a Comment