September 23, 2009

‘சீமானுடன் நான்’

‘என்னை பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ் பற்று உடையவர் என்று கருதினால், அவருக்கு நான் அடிமையே ஆவேன்’. பெரியாரின் இந்த வார்த்தைகள் போதும், சீமானுடனான எனது இந்த சந்திப்பின் அர்த்தத்தை புரிய வைக்க.
நாம் தமிழர் இயக்கம். தேர்தலுக்கு பின்னதாய், திரைப்பட இயக்குனர் சீமானால் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம். ஜூன் 18ம் தேதி துவங்கிய இந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மாநிலம் முழுவதும் சுழன்றடித்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறார் சீமான். திருப்பூரில் கலந்துரையாடல் நடத்த வந்த தோழர் சீமானை தங்கும் விடுதியில் சந்திக்க நேர்ந்தது. ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றியும், அதன் மீதான விமர்சனங்களை பற்றியும் பேச்சு தொடங்கியது.
‘நாம் தமிழர் இயக்கம்’ ஏன், எதற்கு?
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது, ஈழத்தில் இருந்த ஒவ்வொருவரும் ‘தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்கள் தங்களை காப்பார்கள்’ என நம்பினார்கள். ஆனால், என்ன செய்ய முடிந்தது. தனி தமிழீழம் ஏன் தேவை என்பதை தமிழக மக்களிடம் புரிய வைக்க நம்மால் முடியவில்லை. இதற்கு நாம் ஒன்றுபடாததே காரணம். ஆனால், இனி இவையெல்லாம் ‘நாம் தமிழர்’ இயக்கத்தால் இனி நடந்தேறும். ‘நாம் தமிழர் இயக்கம்’ தமிழர்களை ஒன்று படுத்தும் இயக்கம். இந்திய தேசியமும், திராவிடமும், தமிழர்களின் இன உணர்வை, மான உணர்வை வீழ்த்தியதின் பின்னர், உதித்தது தான் ‘நாம் தமிழர்’ எனும் தமிழ் தேசிய இயக்கம்.
தந்தை பெரியாரின் திராவிடத்தை கைவிடுவது சரியா?
தந்தை பெரியாரின் திராவிடம் என்பதே தவறு. தந்தை பெரியாரே முதலில் கழகத்தை தோற்றுவித்த போது, தமிழர் கழகம் என்று தான் பெயரிட்டார். அப்போதுள்ள சூழலில் தமிழர் இயக்கம் என்றால், ஆரியர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதால், திராவிடர் கழகம் என தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் யாரும் குரல் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும். எனவே, திராவிடம் இப்போதைய சூழலுக்கு பலன் தராது.
அப்படியென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள்?
பெரியாரின் கொள்கைகள் இல்லாமல் எங்களால் உயிர் வாழ முடியாது. பெரியாரை கைவிட்டு எங்களால் இருக்க முடியாது. நாங்கள் பெரியாரின் பேரன்கள். தனது 95வது வயதில், மூத்திர பையுடன் சுற்றித்திரிந்தவர் பெரியார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ எனக்கூறிய பெரியார் ஊற்றிய இன உணர்வும், மான உணர்வும் எங்களிடம் உள்ளது. பெரியாரையோ, பெரியார் கொள்கைகளையோ கைவிட்டு விடுவேன் என யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் பெரியாரின் பேரன்கள்.
தமிழர் தேசிய இயக்கம் துவங்கியுள்ளதால், இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் எதிராக சித்தரிக்கப்பட்டுள்ளீரே?
யாரை சொல்கிறீர்கள் என்னையா? தமிழ் தேசிய இயக்கம் துவங்கினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவேனா. யார் சொல்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினர் மக்களுக்கு பாடுபடுவது தான் எங்கள் நோக்கம்.
பிரபாகரன்?
தந்தை பெரியாரின் கனவுகளை, நனவாக்கி காட்டியவர் பிரபாகரன். ஜாதி ஒழிய வேண்டும் என்றார் பெரியார். ஈழத்தில் அதனை செய்து காட்டினார் பிரபாகரன். ஈழத்தில் ஜாதி இல்லை. பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தினார் பெரியார். அதனை நடத்தி காட்டி, பெண்களுக்கு சமஉரிமை வழங்கினார் பிரபாகரன். இப்படி பெரியாரின் கனவுகளை நனவாக்கியவர் பிரபாகரன். ‘அடிமையாக வாழ்வதை விட சுதந்திரமாக வாழ்வதே சரி’ என 22 பேருடன் சண்டையை துவக்கியவர் எங்கள் தலைவர். அவரை நான் நேரில் சந்தித்த தருணங்கள் சிலிர்ப்பானவை. அவரை மீண்டும் காண்பேன் என்பது மட்டும் உறுதி.
காங்கிரஸ் எதிர்ப்பு ஏன்?
நான் காங்கிரஸ். எனது சகோதரர் காங்கிரஸ். எனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தேச விடுதலைக்கு போராடிய கட்சி என காங்கிரசை கொண்டாடி வந்தோம். கை சின்னத்தை கொண்டாடினோம். ஆனால் அதே கை சிங்களனுக்கு துணை போய், எங்கள் சகோதர்களான ஈழத்தமிழர்களை கொன்று சாய்த்ததே அதன் பின்னர் எப்படி அவர்களை ஆதரிப்பது. ‘சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரசை கலைத்து விடுங்கள்’ என மகாத்மா காந்தியிடம் கேட்டார் தந்தை பெரியார். ஆனால் பெரியாரின் கொள்கைகள் ஏற்கப்படவில்லை. அவ்வாறு பெரியாரின் கொள்கை ஏற்கப்பட்டிருந்தால், இந்தியா எப்போதே வல்லரசாகியிருக்கும். சிங்களனுக்கு துணை போய், தமிழனை கொன்ற காங்கிரசை எதிர்க்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.
தமிழக அரசின் செயல்பாடு?
ரூ.1க்கு அரிசி என்பதை சாதனையாக கூறி வருகிறது தமிழக அரசு. ரூ.1க்கு அரிசி வாங்கும் அவலநிலைக்கு தள்ளியிருப்பது சாதனையா? வேதனையா?. இந்த தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். ‘இலவசம் வேண்டாம் என எப்போது மக்கள் சொல்கிறார்களோ. அப்போது தான் நாடு வளர்ச்சி பெற்றதாக பொருள். இங்கும் எதுவும் இலவசம். தமிழர்களின் உயிரும் கூட. அரிசி, பருப்பு, ஆடு, கோழி இறைச்சி என அனைத்தையும் விட மலிவாக கிடைக்கிறது தமிழக மக்களின் உயிர். பெரியாரின் வழி வந்தவர்கள், அவரை மறந்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
தமிழ் மொழி பயன்பாடு?
நானும் ஆங்கில மொழியை கலந்து பேசியவன் தான். ‘என் தாய் மொழியை நான் பேசாமல் எந்த நாய் பேசும்’ என எனக்குள் நான் கேட்டுக்கொண்ட கேள்விதான் என்னை தமிழ் மொழியில் பேச வைத்தது. தமிழகத்தில் நாம் பேசுவதில் பாதி சமஸ்கிருதம். பாதி ஆங்கிலம். தமிழ் பெயர் யாருக்கும் வைப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் ஓடுகின்ற ஓட்டத்தில் மாற்றி விடலாம். தமிழில் பேசினால் மதிப்பதில்லை என்கிறார். மதிக்காதவனை மிதியுங்கள். தமிழை உயிருக்கு இணையாக மதியுங்கள். நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்த முடியும். ஆங்கிலம் பேசுங்கள் தவறில்லை. வெளிநாட்டினரிடம் நீ தமிழில் பேசினால் முட்டாள். ஆனால் உன் உறவுகளிடம் நீ ஆங்கிலத்தில் பேசினால் மகா முட்டாள். ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழை தமிழாகவும் கலப்பின்றி பேசுங்கள். இனி எப்போதும் தமிழிலேயே பேசுவோம் என முடிவெடுப்போம்.
நாம் தமிழர் இயக்கத்தின் அடுத்த கட்டம்?
அரசியல். கட்சியாக மாறி, அரசியலை வென்றெடுப்பது தான். பிறருக்கு வாக்களித்து, வாக்களித்து ஓய்ந்தது போதும். உனக்கு நீயே வாக்களித்துக்கொள்ளும் நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும். இன்னும் ‘நாம் தமிழர் இயக்கம்’ சாதிக்க உள்ளது எண்ணிலடங்காது. காத்திருந்து பார்த்துக்கொண்டே இருங்கள் நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சியை.

3 comments:

எதிர்கட்சி..! said...

// ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது, ஈழத்தில் இருந்த ஒவ்வொருவரும் ‘தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்கள் தங்களை காப்பார்கள்’ என நம்பினார்கள். ஆனால், என்ன செய்ய முடிந்தது. தனி தமிழீழம் ஏன் தேவை என்பதை தமிழக மக்களிடம் புரிய வைக்க நம்மால் முடியவில்லை. இதற்கு நாம் ஒன்றுபடாததே காரணம். ஆனால், இனி இவையெல்லாம் ‘நாம் தமிழர்’ இயக்கத்தால் இனி நடந்தேறும். ‘நாம் தமிழர் இயக்கம்’ தமிழர்களை ஒன்று படுத்தும் இயக்கம். இந்திய தேசியமும், திராவிடமும், தமிழர்களின் இன உணர்வை, மான உணர்வை வீழ்த்தியதின் பின்னர், உதித்தது தான் ‘நாம் தமிழர்’ எனும் தமிழ் தேசிய இயக்கம். //

ஈழத்தமிழனுக்கு ஆதரவு கேட்பது நியாயம்..இந்திய தமிழனை இன உணர்வை தூண்டி இந்திய தேசியத்திலிருந்து பிரித்து பெயர் தேட நினைக்கும் பக்கா அரசியல்? எதற்கு இந்த கேவலம்


//ரூ.1க்கு அரிசி என்பதை சாதனையாக கூறி வருகிறது தமிழக அரசு. ரூ.1க்கு அரிசி வாங்கும் அவலநிலைக்கு தள்ளியிருப்பது சாதனையா? வேதனையா?. இந்த தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். ‘இலவசம் வேண்டாம் என எப்போது மக்கள் சொல்கிறார்களோ. அப்போது தான் நாடு வளர்ச்சி பெற்றதாக பொருள். இங்கும் எதுவும் இலவசம். தமிழர்களின் உயிரும் கூட. அரிசி, பருப்பு, ஆடு, கோழி இறைச்சி என அனைத்தையும் விட மலிவாக கிடைக்கிறது தமிழக மக்களின் உயிர். பெரியாரின் வழி வந்தவர்கள், அவரை மறந்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை//

தமிழக மக்களின் உயிருக்காக கவலைப்படுவது நியாயம்..பெரியாரை எதற்காக இந்திய தமிழன் போற்ற வேண்டும்.காரணத்தை தெரிவியுங்கள் .ஏதோ நானும் கொள்கைவாதி பேச்சாளன் என் பின்னாலும் நாலு பேர் வருவார்கள் என்றெல்லாம் இருக்க கூடாது. நாய் பின்னால் கூட நாலு பேர் திரியத்தான் செய்கிறார்கள்.


//நான் காங்கிரஸ். எனது சகோதரர் காங்கிரஸ். எனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தேச விடுதலைக்கு போராடிய கட்சி என காங்கிரசை கொண்டாடி வந்தோம். கை சின்னத்தை கொண்டாடினோம். ஆனால் அதே கை சிங்களனுக்கு துணை போய், எங்கள் சகோதர்களான ஈழத்தமிழர்களை கொன்று சாய்த்ததே அதன் பின்னர் எப்படி அவர்களை ஆதரிப்பது. ‘சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரசை கலைத்து விடுங்கள்’ என மகாத்மா காந்தியிடம் கேட்டார் தந்தை பெரியார். ஆனால் பெரியாரின் கொள்கைகள் ஏற்கப்படவில்லை. அவ்வாறு பெரியாரின் கொள்கை ஏற்கப்பட்டிருந்தால், இந்தியா எப்போதே வல்லரசாகியிருக்கும். சிங்களனுக்கு துணை போய், தமிழனை கொன்ற காங்கிரசை எதிர்க்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள். //
நியாயமான பேச்சு ., இந்திய தேசியத்தின் முக்கிய இனமான தமிழினத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் காரனை செருப்பில் அடித்தாலும் தகும்.

எதிர்கட்சி..! said...

///யாரை சொல்கிறீர்கள் என்னையா? தமிழ் தேசிய இயக்கம் துவங்கினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவேனா. யார் சொல்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினர் மக்களுக்கு பாடுபடுவது தான் எங்கள் நோக்கம். //

மொத்தத்தில் உங்களுக்கு தேவை ,இந்திய தேசிய எதிர்ப்பு கொள்கை, பிரிவினைவாதம் ,குற்றத்தை நியாயப்படுத்த மதச்சார்பின்மை என்கிற இஸ்லாமிய சார்புகொள்கையும், தலைகளின் எண்ணிக்கையை காட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவும் ,அவ்வளவு தானே !

// நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்த முடியும். ஆங்கிலம் பேசுங்கள் தவறில்லை. வெளிநாட்டினரிடம் நீ தமிழில் பேசினால் முட்டாள். ஆனால் உன் உறவுகளிடம் நீ ஆங்கிலத்தில் பேசினால் மகா முட்டாள். //

நிச்சயமாக ...தமிழ் ஒழிக்க நினைக்கும் சொந்த புத்தியில்லாத தமிழன் மகா முட்டாளே !

//அரசியல். கட்சியாக மாறி, அரசியலை வென்றெடுப்பது தான். பிறருக்கு வாக்களித்து, வாக்களித்து ஓய்ந்தது போதும். உனக்கு நீயே வாக்களித்துக்கொள்ளும் நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும். இன்னும் ‘நாம் தமிழர் இயக்கம்’ சாதிக்க உள்ளது எண்ணிலடங்காது. காத்திருந்து பார்த்துக்கொண்டே இருங்கள் நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சியை.//


ஆக., திராவிடம் பேசி மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திராவிட ,தேசிய ,அரசியல் கம்பெனிகளுக்கு இடையில் .. தமிழன் பேரை சொல்லி நீங்கள் ஒரு புதிய கம்பெனியை தொடங்கி சம்பாதிக்க முற்பட்டுவிட்டீர்கள்..

ஒருவன் நீ செய்யும் தவறை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொல்லுபவனை பாராட்டலாம் ,கொள்கைக்காக பின்தொடரலாம் ..

ஆனால் அவனை விட நான் செய்தது குறைவு தான் என்று கூறி நியாயம் கற்ப்பிக்க ஆரம்பித்துவிட்டது இன்றைய அரசியல் கட்சிகள் ., தினமும் மக்களுக்கு சேவை செய்வோம் என்கின்ற ஆசை வார்த்தைகளை கூறி, இனவெறியை தூண்டி ,பிரிவினைவாதத்தை ஊட்ட முற்படுகின்ற நீங்களும் ,அரசியல் கம்பெனி தொடங்க முற்படுகிறீர்கள் ..வருமானம் ,பெயர் ,புகழுக்காக,,,

ம் .. ம் ..
ஓட்டுப்பிச்சை கேட்ட எத்தனையோ பேரின் திருவோடு நிறைந்தது .. உங்களதும் நிறையாமலா போய்விடும்...

Unknown said...

seemaan - saamaan-iyan..its ok...