October 14, 2009

தினமலர் ஊழியருக்கு சில கேள்விகள்

இலங்கையில் இந்திய அரசே முன்னின்று போரை நடத்தி வந்த நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் நடந்ததைபோல திசைமாறி கிடக்கிறது ஊடகங்களின் போராட்டம்.
திரைப்பட நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, எவ்வித ஆதாரமுமின்றி தினமலர் நாளிதழ் அவதூறு செய்தியை வெளியிட்டதின் பயனாக திரையுலகம் கொதித்தெழ விஸ்வரூபம் எடுத்தது பிரச்னை. சம்பந்தப்பட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க திரையுலகமே கோரியதையடுத்து, தினமலர் செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை நடிகர்கள் விமர்சிக்க, கைது செய்யப்பட்டதை கண்டித்தும், விமர்சனத்தை எதிர்த்தும் ஊடகவியலாளர்கள் கொதித்தெழுந்தனர்.
இதில் பெரும்பாலான போராட்டங்களை முன்னின்று நடத்தியது தினமலர். மற்ற நிறுவன ஊழியர்களை மிகவும் வலியுறுத்தி கூட்டம் நடத்துங்கள், தீர்மானம் போடுங்கள், போராட்டம் நடத்துங்கள் என தினமலர் நிறுவன ஊழியர்கள் கெஞ்சியதை யாரும் மறுக்க முடியாது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தினமலர் லெனின் கைதை கண்டித்து போஸ்டர் ஒட்ட ஒரு பத்திரிக்கையாளர்கள் சங்கத்துக்கு ரூ.10 ஆயிரம் பணத்தை வாரி வழங்கியது தினமலர்.
இதன் பின்னர் தினமலர் ஊழியர்களும், இன்ன பிற ஊடக நிறுவன ஊழியர்களும் சில இடங்களில் போராட்டமும், கண்டன தீர்மானங்களையும் நிறைவேற்றல் நிகழ்வையும் நடத்தினர். ஆனால், இவை எல்லாம் சரிதானா என்பதில் தான் சிக்கல்.
இது தொடர்பாக தினமலர் ஊழியர்களுக்கு சில கேள்விகள்.
01. தினமலரின் செய்தி ஆசிரியர் லெனின் தானா? அப்படியெனில் இதற்கு முன்னர் தினமலர் நாளிதழில் வந்த அலுவலகம் சார்ந்த செய்திகளில் செய்தி ஆசிரியர் என வேறு நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது ஏன்? செய்தி ஆசிரியர் என்ற பதவி உயர்வு அவருக்கு எப்போது வழங்கப்பட்டது?
02. ஒரு நாளிதழ் மீது சட்டரீதியிலான பிரச்னை என்றால், சம்பந்தப்பட்ட நாளிதழ் பொறுப்பாசிரியர் அல்லது வெளியீட்டாளர் மீது தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், கைது செய்யப்பட்ட நாளான்று நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசித்த பின்னரே செய்தி ஆசிரியர் (?) லெனின் கைது செய்யப்பட்டார். அப்படியேனில், செய்தி ஆசிரியரை போலீசாருடன் அனுப்பி வைத்தது யார்?
03. தினமலர் நாளிதழில் பணியாற்றும் யாரும் பத்திரிக்கையாளர் சங்கங்களில் பங்கெடுத்துக்கொள்ள முடியாது. இது நிர்வாகத்தின் நேரடி உத்தரவு. அப்படியிருக்க இப்பிரச்னையில் மட்டும் பத்திரிக்கையாளர் சங்கங்களை அணுக உங்களை நிர்வாகம் வலியுறுத்தியது ஏன்?
04. திருப்பூரில் தினமலர் நாளிதழ் நிருபர், புகைப்பட கலைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது, ஒட்டுமொத்த ஊடகங்களும் கொதித்தெழுந்து போராட்டம் நடத்திய போது, பாதிக்கப்பட்ட நீங்கள் (தினமலர் ஊழியர்கள்) மட்டும் பங்கேற்காமல் புறக்கணித்ததின் காரணம் தெரியுமா உங்களுக்கு?
05. உங்கள் நிறுவன (தினமலர்) நிர்வாகி ஒருவர் மீது பெண் நிருபர் ஒருவர் பாலியல் புகார் கூறிய போது, (அது உண்மை என தெரிந்தும்) கொதித்தெழுந்தீர்களே? மற்றவர்களை கொச்சைபடுத்துதல் மட்டும் தகுமோ?
06. திரைப்பட இயக்குனர்களில் மணிரத்னம், நடிகர்களில் கமலஹாசன், ரஜினி தவிர சிலரை தவிர, மற்றவர்களை இயக்குனர், நடிகர் என குறிப்பிடாமல் சினிமாகாரர் என்ற அடைமொழியுடன் பிரசுரிப்பது ஏன் என தெரியுமா?
07. இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள், பெரியார் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல அமைப்புகளின் செய்திகள் மற்ற பத்திரிக்கைகளில் வந்தாலும், உங்கள் பத்திரிக்கையில் இடம்பெறுவதில்லையே ஏன் என தெரியுமா உங்களுக்கு?
08. நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என நீட்டி முழக்கி எழுதுகிறீர்களே? அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இதுபோன்ற பிரச்னையில் சம்பந்தப்பட்ட போது அதனை அடக்கி வாசிப்பது ஏன்? அதுபோன்ற செய்திகளை வெளியிடாதது ஏன்?
09. கோவை உட்பட பல்வேறு இடங்களில் இப்பிரச்னை குறித்து நடந்த பத்திரிக்கையாளர் சங்க கூட்டங்களில் தினமலரின் செய்தி மீது கடுமையான விமர்சனம் இருந்தது. பத்திரிக்கையாளர் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததை செய்தியாக விவரித்த ‘தினமலர்’, இதனை குறிப்பிடாதது ஏன்?
கேள்விகளுக்கு எனக்கு பதில் தேவையில்லை. உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்.
மற்ற ஊடகவியலாளர்களும் இந்த கேள்வியில் ஆழ்ந்து தினமலரின் நிலையை புரிந்து கொண்டால், தினமலர் நாளிதழுக்கு ஆதரவு தெரிவிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்பது தெரியும். ஆயிரம் பிரச்னை நடந்தாலும், தினமலர் தன்போக்கில் இருந்து மாறாது, எனவே மீண்டும் அது சர்ச்சையில் சிக்கும். ஆனால் அப்போது மற்ற ஊடகவியலாளர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள். அதையும் நாம் காணத்தான் போகின்றோம்.

October 12, 2009

தாலி தேவையா?

‘சிவந்த மை பூசிய பெண்கள், வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. எனக்கு மிகவும் பிடித்த இத்தாலிய நாட்டு பழமொழி. சமீபத்தில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியை பார்க்கும் போது நான் மீண்டும் அசை போட்டது இந்த பழமொழியைத்தான்.
தாலி தேவையா, இல்லையா என சுமார் 1.30 மணி நேர விவாதத்தில் பெரும்பாலான நேரங்கள், ‘தாலி அணிந்தவர்கள், தாலி வேண்டும் என்பவர்கள் மட்டுமே குடும்ப பெண்கள்’ என்பது போன்ற கருத்து திணிக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதேசூழலில் அண்மைகாலமாக தாலி என்பது பெண்ணுக்கு தேவையா என்ற எதிர்ப்பு குரல் ஒலிப்பதையும் இந்த நிகழ்ச்சி பதிவு செய்தது.
‘தாலி என்பது ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடு. ஒரு பெண்ணுக்கு தாலி என்றால், அப்ப ஆணுக்கு என்ன?’ என கேட்டது தாலி வேண்டாம் எனும் தரப்பு. ‘ஆணுக்கு வேணும்னா தாலி மாதிரி ஏதாவது போட்டுக்கலாம். பெண்ணுக்கு வேணாங்கறது சரியில்லை’ என்றது மற்றொரு தரப்பு. சினிமாக்களை போல, நிஜவாழ்வில் ‘தாலி’ என்பது கலாச்சார சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்று ஏராளமான சென்டிமெண்டுகளை நம் மக்கள் விதைத்து விட்டனர். அதுபோன்ற கலாச்சார பாதுகாவலர்களுக்கு சில கேள்விகள்.
01. பெண்களை திருமணம் ஆனவர், ஆகாதவர் என வித்தியாசப்படுத்தும் வகையில் தான் இந்த ‘தாலி’ உள்ளது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காதது ஏன்? (தெருநாய்க்கும், வீட்டு நாய்க்கும் வித்தியாசப்படுத்தும் முயற்சியாக நாய்க்கு கட்டும் லைலென்சு போன்றது தான் இந்த தாலி என நான் நினைக்கிறேன்)
02. பெண்களுக்கு திருமணத்தின் போது தாலி, மெட்டி அணிவதை போல, ஆண்களின் கால்களிலும் வளையம் ஒன்று அணிவிக்கப்படும். ஆனால் திருமணமாகி சில தினங்களில் அது கழற்றிக்கொள்ளலாம். ஆனால், பெண் காலத்துக்கும் கழற்ற கூடாது. இது ஆணாதிக்க போக்கில்லை என நீங்கள் நம்புகிறீர்களா?

03. ‘தாலி என்பது பெண்களின் உயிர். கணவர் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம்’ என்கிறீர்கள். அது சரி. கணவன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு என்ன அடையாளம்? தாலி இல்லாவிட்டால் உங்களால் கணவனுக்கு நம்பிக்கையுடன் இருக்க முடியாதா?

04. ஒரு பெண் தாலி அணிந்தால் தான், திருமணம் ஆனவளாக ஏற்றுக்கொள்வீர்களா? மனம் ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் தாலி எனும் அடையாளக்குறி எதற்கு?
05. ‘மந்திரம் சொல்லி கட்டப்படும் தாலிக்கு எப்படி அர்த்தம் இல்லாமல் போய்விடுமா’ என கேட்கிறீர்கள். ‘தாலியில் குங்கும் வைத்து வழிபட்டால் கணவர் நீடூழி வாழ்வார்’ என்கிறீர்கள். ‘கணவர் நலனுக்கு சுமங்கலி பூஜை நடத்துகிறீர்கள்’ ‘இதெல்லாம் நம் கலாச்சாரம் என்கிறீர்கள்’. கணவர் மீது மனைவி அன்பை காட்ட இத்தனை நிகழ்வுகள், கணவருக்கு மனைவி மீது அன்பில்லையா? இல்லை இருக்க வேண்டிய அவசியம் இல்லையா?
திருமணம் என்பது ஒரு பந்தம். அன்பும், புரிதலும் தான் திருமண பந்தத்துக்கு தேவையான அடையாளங்கள். இவை இரண்டும் இருவருக்கும் தேவை. அதைவிடுத்து தாலியை பெண்ணுக்கு மட்டும் அணிவித்து விட்டு, அந்த முறையை உங்களை வைத்தே வளர்த்து வரும் ஆணாதிக்கத்தில் இருந்து வெளியே வாருங்கள்.
‘சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்’. முகம் சிவக்க வெட்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாலியும் அதுபோலத்தான்.

September 23, 2009

‘சீமானுடன் நான்’

‘என்னை பொறுத்தவரையில், ஒரு மனிதர் யாராக இருந்தாலும், அவர் தமிழ் பற்று உடையவர் என்று கருதினால், அவருக்கு நான் அடிமையே ஆவேன்’. பெரியாரின் இந்த வார்த்தைகள் போதும், சீமானுடனான எனது இந்த சந்திப்பின் அர்த்தத்தை புரிய வைக்க.
நாம் தமிழர் இயக்கம். தேர்தலுக்கு பின்னதாய், திரைப்பட இயக்குனர் சீமானால் ஒருங்கிணைக்கப்பட்ட இயக்கம். ஜூன் 18ம் தேதி துவங்கிய இந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மாநிலம் முழுவதும் சுழன்றடித்து கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி வருகிறார் சீமான். திருப்பூரில் கலந்துரையாடல் நடத்த வந்த தோழர் சீமானை தங்கும் விடுதியில் சந்திக்க நேர்ந்தது. ‘நாம் தமிழர் இயக்கம்’ பற்றியும், அதன் மீதான விமர்சனங்களை பற்றியும் பேச்சு தொடங்கியது.
‘நாம் தமிழர் இயக்கம்’ ஏன், எதற்கு?
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது, ஈழத்தில் இருந்த ஒவ்வொருவரும் ‘தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்கள் தங்களை காப்பார்கள்’ என நம்பினார்கள். ஆனால், என்ன செய்ய முடிந்தது. தனி தமிழீழம் ஏன் தேவை என்பதை தமிழக மக்களிடம் புரிய வைக்க நம்மால் முடியவில்லை. இதற்கு நாம் ஒன்றுபடாததே காரணம். ஆனால், இனி இவையெல்லாம் ‘நாம் தமிழர்’ இயக்கத்தால் இனி நடந்தேறும். ‘நாம் தமிழர் இயக்கம்’ தமிழர்களை ஒன்று படுத்தும் இயக்கம். இந்திய தேசியமும், திராவிடமும், தமிழர்களின் இன உணர்வை, மான உணர்வை வீழ்த்தியதின் பின்னர், உதித்தது தான் ‘நாம் தமிழர்’ எனும் தமிழ் தேசிய இயக்கம்.
தந்தை பெரியாரின் திராவிடத்தை கைவிடுவது சரியா?
தந்தை பெரியாரின் திராவிடம் என்பதே தவறு. தந்தை பெரியாரே முதலில் கழகத்தை தோற்றுவித்த போது, தமிழர் கழகம் என்று தான் பெயரிட்டார். அப்போதுள்ள சூழலில் தமிழர் இயக்கம் என்றால், ஆரியர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பதால், திராவிடர் கழகம் என தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த நிலைமை இல்லை. தமிழர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால், ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் யாரும் குரல் கொடுக்கவில்லை என்றால், நாங்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும். எனவே, திராவிடம் இப்போதைய சூழலுக்கு பலன் தராது.
அப்படியென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள்?
பெரியாரின் கொள்கைகள் இல்லாமல் எங்களால் உயிர் வாழ முடியாது. பெரியாரை கைவிட்டு எங்களால் இருக்க முடியாது. நாங்கள் பெரியாரின் பேரன்கள். தனது 95வது வயதில், மூத்திர பையுடன் சுற்றித்திரிந்தவர் பெரியார். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ எனக்கூறிய பெரியார் ஊற்றிய இன உணர்வும், மான உணர்வும் எங்களிடம் உள்ளது. பெரியாரையோ, பெரியார் கொள்கைகளையோ கைவிட்டு விடுவேன் என யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் பெரியாரின் பேரன்கள்.
தமிழர் தேசிய இயக்கம் துவங்கியுள்ளதால், இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் எதிராக சித்தரிக்கப்பட்டுள்ளீரே?
யாரை சொல்கிறீர்கள் என்னையா? தமிழ் தேசிய இயக்கம் துவங்கினால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு குரல் கொடுக்க முடியாதா? இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவேனா. யார் சொல்கிறார்கள். நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள். தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினர் மக்களுக்கு பாடுபடுவது தான் எங்கள் நோக்கம்.
பிரபாகரன்?
தந்தை பெரியாரின் கனவுகளை, நனவாக்கி காட்டியவர் பிரபாகரன். ஜாதி ஒழிய வேண்டும் என்றார் பெரியார். ஈழத்தில் அதனை செய்து காட்டினார் பிரபாகரன். ஈழத்தில் ஜாதி இல்லை. பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என வலியுறுத்தினார் பெரியார். அதனை நடத்தி காட்டி, பெண்களுக்கு சமஉரிமை வழங்கினார் பிரபாகரன். இப்படி பெரியாரின் கனவுகளை நனவாக்கியவர் பிரபாகரன். ‘அடிமையாக வாழ்வதை விட சுதந்திரமாக வாழ்வதே சரி’ என 22 பேருடன் சண்டையை துவக்கியவர் எங்கள் தலைவர். அவரை நான் நேரில் சந்தித்த தருணங்கள் சிலிர்ப்பானவை. அவரை மீண்டும் காண்பேன் என்பது மட்டும் உறுதி.
காங்கிரஸ் எதிர்ப்பு ஏன்?
நான் காங்கிரஸ். எனது சகோதரர் காங்கிரஸ். எனது குடும்பமே காங்கிரஸ் குடும்பம். தேச விடுதலைக்கு போராடிய கட்சி என காங்கிரசை கொண்டாடி வந்தோம். கை சின்னத்தை கொண்டாடினோம். ஆனால் அதே கை சிங்களனுக்கு துணை போய், எங்கள் சகோதர்களான ஈழத்தமிழர்களை கொன்று சாய்த்ததே அதன் பின்னர் எப்படி அவர்களை ஆதரிப்பது. ‘சுதந்திரத்துக்கு பின்னர் காங்கிரசை கலைத்து விடுங்கள்’ என மகாத்மா காந்தியிடம் கேட்டார் தந்தை பெரியார். ஆனால் பெரியாரின் கொள்கைகள் ஏற்கப்படவில்லை. அவ்வாறு பெரியாரின் கொள்கை ஏற்கப்பட்டிருந்தால், இந்தியா எப்போதே வல்லரசாகியிருக்கும். சிங்களனுக்கு துணை போய், தமிழனை கொன்ற காங்கிரசை எதிர்க்காமல் என்ன செய்ய சொல்கிறீர்கள்.
தமிழக அரசின் செயல்பாடு?
ரூ.1க்கு அரிசி என்பதை சாதனையாக கூறி வருகிறது தமிழக அரசு. ரூ.1க்கு அரிசி வாங்கும் அவலநிலைக்கு தள்ளியிருப்பது சாதனையா? வேதனையா?. இந்த தேசத்தை நாசமாக்கிய சொல் இலவசம். ‘இலவசம் வேண்டாம் என எப்போது மக்கள் சொல்கிறார்களோ. அப்போது தான் நாடு வளர்ச்சி பெற்றதாக பொருள். இங்கும் எதுவும் இலவசம். தமிழர்களின் உயிரும் கூட. அரிசி, பருப்பு, ஆடு, கோழி இறைச்சி என அனைத்தையும் விட மலிவாக கிடைக்கிறது தமிழக மக்களின் உயிர். பெரியாரின் வழி வந்தவர்கள், அவரை மறந்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
தமிழ் மொழி பயன்பாடு?
நானும் ஆங்கில மொழியை கலந்து பேசியவன் தான். ‘என் தாய் மொழியை நான் பேசாமல் எந்த நாய் பேசும்’ என எனக்குள் நான் கேட்டுக்கொண்ட கேள்விதான் என்னை தமிழ் மொழியில் பேச வைத்தது. தமிழகத்தில் நாம் பேசுவதில் பாதி சமஸ்கிருதம். பாதி ஆங்கிலம். தமிழ் பெயர் யாருக்கும் வைப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் ஓடுகின்ற ஓட்டத்தில் மாற்றி விடலாம். தமிழில் பேசினால் மதிப்பதில்லை என்கிறார். மதிக்காதவனை மிதியுங்கள். தமிழை உயிருக்கு இணையாக மதியுங்கள். நாக்கை திருத்த முடியாத தமிழன் நாட்டை எப்படி திருத்த முடியும். ஆங்கிலம் பேசுங்கள் தவறில்லை. வெளிநாட்டினரிடம் நீ தமிழில் பேசினால் முட்டாள். ஆனால் உன் உறவுகளிடம் நீ ஆங்கிலத்தில் பேசினால் மகா முட்டாள். ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும், தமிழை தமிழாகவும் கலப்பின்றி பேசுங்கள். இனி எப்போதும் தமிழிலேயே பேசுவோம் என முடிவெடுப்போம்.
நாம் தமிழர் இயக்கத்தின் அடுத்த கட்டம்?
அரசியல். கட்சியாக மாறி, அரசியலை வென்றெடுப்பது தான். பிறருக்கு வாக்களித்து, வாக்களித்து ஓய்ந்தது போதும். உனக்கு நீயே வாக்களித்துக்கொள்ளும் நிலையை நாம் தமிழர் இயக்கம் ஏற்படுத்தும். இன்னும் ‘நாம் தமிழர் இயக்கம்’ சாதிக்க உள்ளது எண்ணிலடங்காது. காத்திருந்து பார்த்துக்கொண்டே இருங்கள் நாம் தமிழர் இயக்கத்தின் வளர்ச்சியை.

September 18, 2009

உன்னைப்போல் ஒருவன் (திரை விமர்சனம்)

‘எனக்கு பின்னால் வருபவர்கள் என்னைப்போல் பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்’ தந்தை பெரியாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது ‘உன்னைப்போல் ஒருவன்’. தீவிரவாதத்தை எதிர்க்க தீவிரவாதமே தீர்வு என பொட்டில் அறைந்து கதை சொல்கிறது படம்.
தீவிரவாதத்துக்கு எதிராக கிளம்பும் சாமானியன் தான் கதையின் நாயகன். அரசு பேருந்து, வணிக வளாகம், ரயில், காவல் நிலையம் என அடுத்தடுத்து பல இடங்களில் பேக் ஒன்றை வைத்து விட்டு, கட்டுமான பணி நடந்து கொண்டுள்ள கட்டடத்தின் மேலே செல்கிறார் கதையின் நாயகன். லேப்டாப், செல்போன் என அதிநவீன சாதனங்களுடன், சென்னை மாநகர காவல்துறை ஆணையரை தொடர்பு கொள்ளும் நாயகன், மாநகரில் 5 இடங்களில் சக்தி மிக்க வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டுகிறார். வெடிக்காமல் இருக்க வேண்டுமானால், குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்ட 4 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கிறார். வேறு வழியின்றி காவல்துறையால் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளை சாதூர்யமாக கொல்கிறார் நாயகன்.
கதையின் நாயகனாக கமலஹாசன். காட்சிக்கு காட்சி மிக சிறந்த நடிப்பால் ஈர்க்கிறார். புகார் அளிக்க செல்லுமிடத்தில் காவல் அதிகாரியிடம் பேசும் போதும், பெண் கருவறுக்கப்பட்ட காட்சியை போனில் விவரிக்கும் போதும், நீ எந்த மதத்தை சேர்ந்தவன் என கேட்கும் போது கோபப்படும் இடத்திலும் என காட்சிக்கு காட்சி பன்முக நடிப்பால் கவர்கிறார் கமலஹாசன்.
இவருக்கு இணையாக நடித்துள்ளார் மோகன்லால். மாநகர காவல்துறை ஆணையாளராக வரும் மோகன்லால். கமலஹாசனுடனான் உரையாடலின் போதும், தலைமை செயலாளர் லட்சுமியுடன் இது தொடர்பாக விவாதிக்கும் போதும் என படம் முழுவதும் நிஜ காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார்.
படத்துக்கு மிகப்பெரிய பலம் வசனங்கள். படம் துவங்கி 10 நிமிடங்களுக்கு பிறகு வரும் ‘உன் மேல என்ன கோபம். கோபப்பட மொத்த நாடே இருக்கு’ என்ற வசனத்தில் துவங்குகிறது படத்தின் விறுவிறுப்பு. தொடர்ந்து படம் முழுவதும் வசனங்களின் ஆக்கிரமிப்பு தான். ஒவ்வொரு வசனங்களும், மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
‘அதென்ன நான் இந்துவோ, முஸ்லீமாவோ தான் இருக்கணுமா, கிறிஸ்துவனா, கம்யூனிஸ்டா, நாத்திகனா இருக்க கூடாதா’ என்பதில் துவங்கி அடுத்தடுத்து வரும் வசனங்கள் மத வெறியை கடுமையாக சாடுகிறது.
‘சொல்றதை தமிழ்ல சொல்லு, முதல்வர் டி.வி. பாத்துட்டு இருக்கார்’ என பேட்டி கொடுக்கும் அதிகாரியிடம் கமிஷனர் சொல்வது; ‘கீழே விழுந்துடுச்சுன்னு விட முடியலை. விலைவாசி ஏறிடுச்சுல்ல’ என கீழே கிடந்த தக்காளியை எடுக்கும் கதைநாயகன், ‘நாங்க கஷ்டப்பட்டு புடிச்சுட்டு வருவோம், தீவிரவாதியோ, அரசியல்வாதியோ ஒரு போன்ல விடுவிச்சுருவீங்க’ என கொந்தளிக்கும் கமிஷனர் என படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் நடைமுறையை அம்பலமாக்குகிறது.
படத்தின் முக்கிய காட்சி. தீவிரவாதிகளை கொல்வது ஏன் கமல் விவரிக்கும் காட்சிகள். கண்களை நீர் வழிய, பெண் ஒருவர் கருவழிக்கப்பட்ட காட்சியை விவரித்து விட்டு, கண்ணில் வழியும் கண்ணீரை துப்பாக்கியால் துடைக்கும் காட்சி படத்தின் மொத்த கதையையும் சொல்லி விடுகிறது. ‘தீவிரவாதத்தை அழிக்க தீவிரவாதம் தான் வழி’ என அடுத்து வரும் வசனம் அந்த காட்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது.
படத்தின் இசை, காவல்துறை அதிகாரிகளின் நடிப்பு அனைத்திலும் குறையேதும் இல்லை. உலக சினிமாக்களுக்கான தரத்தில் அமைந்துள்ள ‘உன்னைப்போல் ஒருவன்’ தமிழ் சினிமாவின் மைல் கல்.

August 21, 2009

கந்த............சா......மி....

இயக்கம் : சுசிகணேசன் நடிப்பு : விக்ரம், ஸ்ரேயா, பிரபு, ஆசிஷ்வித்யார்த்தி, ஒளிப்பதிவு : என்.கே. ஏகாம்பரம் தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு
‘இருப்பவனிடம் பிடுங்கி, இல்லாதவனுக்கு கொடுப்பது’ என்ற மிகவும் பழக்கப்பட்ட ஷங்கர் பாணி கதையை படமாக்கியிருக்கிறார் சுசிகணேசன்.
திருப்போரூர் முருகன் (கந்தசாமி) கோயிலில் கணவரின் அறுவைசிகிச்சைக்கு ரூ.60 ஆயிரம் வேண்டும் என வேண்டுகிறார் பெண் ஒருவர். கோரிக்கையை மரத்தில் எழுதி கட்டினால் கோரிக்கை நிறைவேறும் என கோயில் பூசாரி கூற, அதனை கட்டி செல்கிறார் அந்த பெண். இதையடுத்து அவரது கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. கோரிக்கையை நிறைவேற்றியது, வேறு யார் ஹீரோவே தான்.
தொடர்ந்து இந்த தகவல் ஊர் முழுவதும் பரவ கோயிலில் பக்தர்கள் கூட்டம் திரள்கிறது. பக்தர்களின் கோரிக்கை முழுவதும் நிறைவேற, இதில் சந்தேகம் கொள்கிறது உளவுத்துறை. ‘சாமி செய்யது, செஞ்சா ஆசாமி தான் செய்யனும்’ என கூறி இதனை விசாரிக்க உளவுத்துறை டி.ஐ.ஜி.யாக பிரபு அங்கு வருகிறார். இது ஒருபுறம் இருக்க கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வைத்து, அதிரடி சோதனை நடத்தி வேட்டையாடுகிறார் ஹீரோ விக்ரம். இதில் சிக்கும் பண முதலைகள், ஹீரோவுக்கு எதிராக சதிவலை பின்னுகிறார்கள். இறுதியில் இவர்களில் ஒருவரிடம் அவர் சிக்குகிறார். அவர்களிடம் பின்னணியையும் ஹீரோ விளக்குகிறார்.
‘நாங்கள் 11 பேர். கிராமத்தில் படிச்சோம். மேல் படிப்பு படிக்க சென்னை வந்தோம். பணக்காரர்களால் பாதிக்கப்பட்டு, ஏழை, பணக்கார இடைவெளியை குறைக்க முடிவெடுத்தோம்’ என காக்க காக்க ஸ்டைலில் பிளாஷ்பேக் கூறுகிறார் விக்ரம். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது கிளைமேக்ஸ். ஜென்டில்மேன், அந்நியன், முதல்வன், சாமுராய், சிவாஜி என பார்த்து சலித்த படத்தின் கதையை குழப்பி அடித்து கொடுத்திருக்கிறார் சுசிகணேசன். ‘அட இது ஜென்டில்மேன்’, ‘இது சிவாஜி’ என கந்தசாமி படம் பார்க்கும் நமக்கு மற்ற படங்களையும் நினைவூட்டுகிறார் இயக்குனர். கிராமத்தில் படிக்கும் 11 பேர் சென்னை வந்தது சரி. பணக்காரர்களை எதிர்க்க முடிவு செய்தது சரி. அது எப்படி எல்லோரும் சி.பி.ஐ., உளவுத்துறை, பொருளாதார குற்றப்பிரிவு, க்யூ பிராஞ்ச் என முக்கிய பிரிவுகளில் வேலைக்கு சேர்ந்தாங்க சரி விடுங்க. இப்படி படம் முழுக்க ஏகப்பட்டட லாஜிக் மீறல்கள்.
2.30 மணி நேரத்தில் முடிய வேண்டிய படம், 3.15 மணி நேரம் ஓடுவது பெரிய மைனஸ். ஸ்ரேயா. அவரது உடைகளுக்கு ரூ.1.75 கோடி செலவாம். நடிக்க எவ்வளவோ. ஆனால் இரண்டிலும் தயாரிப்பாளர் ஏமாற்றப்பட்டுவிட்டாரோ என தோன்றுகிறது. இந்த உடைக்கா இவ்வளவு செலவு, இவரது நடிப்புக்கா சம்பளம் என நம்மை ஏகத்துக்கும் எரிச்சலூட்டுகிறார் ஸ்ரேயா. வடிவேலுவும் அதே ரகம். ஏற்கனவே வேகமின்றி பயணிக்கும் படத்தின் வேகத்தை இன்னும் குறைக்கிறது வடிவேலுவின் காமெடி. படத்தில் மிகப்பெரிய ஆறுதல் தொழில்நுட்பம்.
ஒளிப்பதிவில் பின்னி எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். இயற்கை, ஈ என ஏற்கனவே அசத்தல் படங்களை வழங்கிய ஏகாம்பரத்துக்கு ஏகத்துக்கும் தீனி போட்டிருக்கிறது ‘கந்தசாமி’. இசை ஓகே ரகம். பல இடங்களில் பின்னணி இசை எரிச்சலூட்டுகிறது. போலீஸ் ஆபிசராக பிரபு, வில்லனாக வரும் ஆசிஷ்வித்யார்த்தி, அவரது பி.ஏ. ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளுத்து கட்டியிருக்கிறார்.
ஹீரோ உள்ளிட்ட 11 பேரின் இந்த ராபின் ஹ¨ட் அவதாரத்துக்கு பின்னணியை வலுவாக சொல்லாமல் தப்பியது; மிக மெதுவான திரைக்கதை; ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள், நம்ப முடியாத கதைக்களம், தேவையில்லாத நீளம் என ஏகப்பட்ட சளிப்புகளுக்கிடையேயும், படத்தின் கமர்சியலான காட்சியமைப்பு ஆறுதலை தருகிறது. சில இடங்களில் முன்னிறுக்கை நோக்கி நகரும் காட்சிகளும் படத்தில் இருக்கத்தான் செய்கிறது.
ஏற்கனவே கறுப்பு பணத்துக்கு எதிராக ‘சிவாஜி’ ரஜினி போராடிய போதும், கறுப்பு பணம் ஒழியவில்லை போலும், அதான் கந்தசாமி பிறந்திருக்கிறார். சினிமாத்துறையினரெல்லாம் கறுப்பு பணத்தை பற்றி படம் எடுத்தா எப்படி சாமி. சரி அது எதுக்கு நமக்கு. என்னமோ பல கோடியை வாரி இரைத்து ஏழ்மையை போக்க முயன்றுள்ள கலைப்புலி தாணுவை கந்தசாமி காப்பாத்துமா?.

July 28, 2009

கோவை சாதி கட்சியினருக்கு . . .

‘‘ஒரு சிலர் மட்டும் சுகம் அனுபவிப்பதற்கென்றும், மற்ற பலர் வேதனைபடுவதற்கென்றுமே அமைக்கப்பட்ட சாதிமுறைகள், இந்நாட்டை விட்டு அகலும் வரை நமக்குள்ள கொடுமைகள் நீங்காதென்பது திண்ணம்’’. சாதி வேறுபாடுகளை கடுமையாக எதிர்த்த புரட்சிகாரர் ‘தந்தை பெரியார்’ உதிர்த்த சொற்கள் இவை.
சாதியின் பெயரால் மிருகங்களாக நாம் மாறி வருவதை உணர்த்த இவ்வார்த்தைகளை பிரயோகித்தார் பெரியார். ஆனால், இப்போது சாதியின் பெயரால் முளைத்து மனிதர்களை மிருகங்களாக்கும் முயற்சியை செவ்வனே செய்து வருகின்றன சாதி கட்சிகள்.
இந்த பட்டியலில் முக்கிய இடம் பிடிக்கிறது கோவை மண்டலத்தை நம் இனத்துக்கான மண்டலம் என கூறிக்கொள்ளும் சாதி கட்சி ஒன்று. தாங்கள் சார்ந்த சாதியின் பெயரால் பேரவை என்ற பெயரில் பலரை வேதனைக்குள்ளாக்கும் வகையில், சாதி வெறியை பரப்பி வந்த அமைப்பு ஒன்று, மற்றவர்கள் வேதனைக்குள்ளாவதோடு தாமும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அதனை அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டது.
ஒரு தேர்தலை சந்தித்து, அவர்களை சார்ந்த இனத்தினரிடம் சாதி வெறியை பரப்பிய அக்கட்சியின் அடுத்த கட்ட இலக்கு, தமிழகத்தையே திக்குமுக்காட வைத்துள்ளது. கோவை மண்டல பகுதிகளை தனிமாநிலமாக்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. நாட்டின் நாளைய தூண்களான மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது இந்த கோரிக்கை.
‘‘நான் முதல் அமைச்சராக வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து கொங்கு நாடு தனி மாநிலமாக என்று பிரிகிறதோ அன்று தான் முதல் அமைச்சராவேன்,’’ என்ற பேச்சில் துவக்கி பிரிவினை கொள்கையை விதைத்துள்ளார் அக்கட்சியின் தலைவர்.
‘கொங்கு நாடு’ என்று இவர்கள் கூறுவது இவர்கள் இனத்தினர் மட்டும் வாழும் பகுதி அல்ல. பல்வேறு இனத்தினரும் ஒன்றாக இணைந்து வாழும் பகுதி. இவர்கள் இனத்தினர் சற்று கூடுதலாக உள்ளனர். அவ்வளவு தான். அப்படியிருக்க இவர்கள் வலியுறுத்துவது இந்த பகுதியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் எப்படி பயன்படும்.
‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீக்க வேண்டும்; கொத்தடிமைக்கு எதிரான சட்டம் வேண்டாம்’ என கட்சிக் கூட்டங்கள் தோறும், ஒடுக்கப்பட்ட இனத்துக்கெதிரான சாட்டையை சுழற்றி உங்களால் அவர்களுக்கு எப்படி பாதுகாப்பு கிட்டும்.
தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட காரணத்தினால் நீலகிரியில் போட்டியிட மறுத்து, செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால், வேறு வழியின்றி கடைசி நேரத்தில் ஏதோ ஒரு வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளருக்கு உரிய மரியாதை அளிக்காமல் புறக்கணித்த நீங்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்களை எப்படி மரியாதையுடன் நடத்துவீர்.
கொங்கு ................ என சாதி பெயரை நீட்டி முழங்கி பேசும் உங்களால், மற்ற சாதி வேறுபாடு பாராமல் எப்படி பணியாற்ற முடியும்.
சாயப்பட்டறைக்கு தீர்வு; கள் இறக்க அனுமதி என உங்கள் இனத்தினரின் பிரச்னைகளை வலியுறுத்தும் நீங்கள், துப்புரவு தொழிலாளிகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட இனத்துக்கான ஒரே ஒரு கோரிக்கையை கூட இதுவரை முன்னிறுத்தாதது ஏன்.
தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை அதிகம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது உங்கள் கொங்கு நாடு. இதற்கு எதிராக குரல் கொடுப்பீரா நீங்கள்.
‘தமிழ்நாட்டில் சேர்ந்து இருக்கும் வரை கொங்கு நாடு முன்னேறாது’. உங்கள் தலைவர் உதிர்த்த வார்த்தைகள் இவை. தமிழகத்தில் இருக்கும்வரை அல்ல. உங்கள் கட்சி இருக்கும் வரை என மாற்றிக்கொள்ளுங்கள். ‘நம்முடன் ஒப்பிடுகையில் மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு. மிருகங்களுக்கு ஒரு அறிவில்லாததின் பயன் சாதி இல்லை. நமக்குள்ள இழிவு சாதியால் தான்’ என்றார் தந்தை பெரியார். கொங்கு நாடு என அழைக்கும் பகுதிக்கான இழிவு உங்களால். உங்கள் சாதியால்.

July 10, 2009

தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞரின் துரோகங்கள்!

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நம் தமிழின தலைவர், தமிழக முதல்வர் டாக்டர்.கலைஞர் செய்த துரோகங்கள் பற்றி சொல்லாதவர்கள் இருக்க முடியாது. கலைஞரின் தம்பியாக இருந்த வைகோவில் துவங்கி, தோழனாக இருந்த பழ.நெடுமாறனில் இருந்து, கடைசி நேரத்தில் கை விலக்கி ஓடி வந்த ராமதாஸ் வரை கூறாதவர்கள் இல்லை. ஆனால், இவர்களில் யாரும் கூறாத துரோகங்களை பட்டியிலிட்டுள்ளார் நம் ஆறரை கோடியில் ஒருவர். கலைஞர் காலத்திலும், பெரியார், அண்ணாவின் தொண்டனாக வாழ்ந்து அவரை பின்பற்றும் அந்த நபரின் கடிதம் இந்த வார ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளது. கடிதம் என்பதை முதல்வரை நோக்கிய கேள்விக்கணைகளாகவே இதனை கருதுகிறேன். கண்டிப்பாக முதல்வரிடம் பதில் கிடைக்காத இந்த கேள்விகள். ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் படிக்க வேண்டிய கடிதம். இதோ அந்த கடிதம். 15/07/09ம் தேதியிட்ட ஆனந்த விகடனில் பிரசுரமான "கருணாநிதிக்கு பகிரங்க கடிதம்' என்ற தலைப்பில் வெளியானவை உங்களின் பார்வைக்கு... தி.முக. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிழல் தலைவர், முத்தமிழ் அறிஞர், முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்! மூத்த தமிழ்க்குடியின் நலனுக்காக ஐந்து முறை "முள்கிரீடம்' தாங்கி, முத்துவிழா தாண்டிய பிறகும் உழைத்து வரும் உங்களுக்குத் தொடக்கத்திலேயே ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். கடைசியாக ஒரு கேள்வியை வைத்து இருக்கிறேன். நீ இன்றி நான் இல்லை படத்துக்கு கதை வசனம் எழுதுவதில் மும்முரமாகி விட்டீர்கள். அது, ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வெளியிட்ட நெடுங்கதையின் தலைப்பு. "கருணாநிதி என் புத்தக தலைப்பை திருடி விட்டார்' என்று அந்தம்மா அறிக்கை விடுவதற்கு முன்னால், <உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியது என் கடமை. அதிருக்கட்டும்... ""போரிலே கலந்து வாகை மாலை சூட வாரீர் தோழர்களே! பாண்டியன் பரம்பரையினரே! சேரன் சந்ததியினரே! சோழனின் சொந்தக்காரரே! வாரீர்!! கறுத்த கழுதையே அங்கே ஏன் கனைக்கிறாய் என்று கேட்டிட வாரீர்! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் செய்யும் நரிகளின் ஊளையே, கிலி பிடித்த மனிதர்களை கீறி எறியுங்கள்!'' என்று கோவில் பட்டியிலும்... ""உணர்ச்சியுடன் எழுதுபவர்களின் கட்டை விரலை வெட்டு என்று முழக்கமிடுகிறது ஒரு வாய். ஆட்சி பலத்தினால் கட்டை விரல்களை போக்கினால்... போகட்டுமே! விரல் போனால் வாய் இருக்கிறது. அண்ணா சொன்னது போல் அத்தனை பேர் நாக்குகளையும் துண்டித்துக் கொள்ளட்டும். கரங்களை நறுக்கி, நாவினை துண்டித்து நிர்க்கதியாய் விட்டாலும், எமது தன்மானம், இனமுழக்கம் ஓயாது, ஒழியாது. இதைக் காமராஜர்கள் உணர வேண்டும்'' என்று கோவையிலும்,, ஒரு காலத்தில் கொந்தளித்த உங்களது நாக்கு கடந்த வாரம் சட்டசபையில் பேசியதை படித்ததும்தான் பதறிப்போனேன். உங்களுக்கு பகிரங்க மடல் எழுத துõண்டியது நீங்கள் பேசிய அந்த வரிகள்தான். சம்பத்தும் நெடுஞ்செழியனும், அன்பழகனும் கழக மேடைகளில்(உங்கள் மொழியில்) தத்துவத் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்த போது... எரிமலையாக, இடி ஒலியாக, கரகர தொண்டையில் நீங்கள் கனல் கக்கியதால், ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கவனிப்பை பெற்றீர்கள். சரியா? இப்போது ஈழத்தமிழர் தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசியதை திரும்ப திரும்ப படித்தேன். ""எதிலும் ஒரு நீக்குப் போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இ ங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை <உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல்பேச்சு, கடல் அலைப்பேச்சு, எரிமலைப்பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'' என்று பேசியிருக்கிறீர்கள். என்னவொரு வளைவு, குழைவு, நெளிவு! 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உங்களது யோசனை துளிர்த்து இருந்தால், 80ஆயிரம் அப்பாவித் தமிழர்களை சிங்களவர்கள் கொன்று இருக்க மாட்டார்கள். புலிப்படையில் 30 ஆயிரம் பேர் உயிர் பலியாக வேண்டிய அவசியம் வந்து இருக்காதே! கொழும்பில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும், அன்றைய ஜெயவர்த்தனாவுக்கு தந்தி அனுப்பி கோரிக்கை மட்டும் வைத்து இருந்தால், பௌத்தர்கள் கோபம் அதிகமாகி இருக்காது. ஆனால், நீங்கள் தான் ""தமிழனுக்கு ஒரு நாடு; தனித் தமிழீழ நாடு'' என்று கரகரக் குரலால் நித்தமும் கர்ஜித்தீர்கள். ரத்தக் கறை படித்த ஜெயவர்த்தனாவின் கொடூரத்தைத் தமிழ்நாட்டு தெருவெல்லாம் சொல்லி, மக்கள் கொடுத்த எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து... பிறந்த நாளுக்கு கிடைத்த பணத்தைப் போராளிகளுக்கு துõக்கி கொடுத்து, விடிய விடிய டெசோ ஊர்வலங்கள் நடத்தி, மனித சங்கிலி நடத்தி, கறுப்புச் சட்டை போட்டு, டெல்லிக்கு காவடி துõக்கி, ஆட்சியைப் பறிகொடுத்து... என பாழாய்ப் போன ஈழத்தமிழனுக்காக காலத்தை வீணாக்கி விட்டீர்கள் தலைவரே! எம்.ஜி.ஆர்., நாலு கோடி ரூபாயை துõக்கிக் கொடுத்து, பிரபாகரனைத் தட்டிக் கொடுத்தார். ""இந்த சண்டையை நடத்துவதே, எம்.ஜி.ஆர்., தான்'' என ஜெயவர்த்தனா பேட்டி அளிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினார். கை நிறைய கரன்சியை அவரும், வாய் நிறைய வார்த்தைகளை நீங்களும் அள்ளி எறிந்ததால்தான், போராளி இயக்கங்கள் நம் பின்னால் தமிழ்நாடே இருக்கிறது' என்று திரிந்தன. ""கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டுவந்தான் செங்குட்டுவன். காவிரிக்கு க ரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களை கைதிகளாக கொண்டு வந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகறாக நாம் இருக்கிறோமா? இனிப்பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தை துõக்குவதாக என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை'' என்று நீக்குப் போக்கு தெரியாமல் எரிமலைப் பேச்சை நீங்கள் பேசியதால், கோபமான வெளத்தர்கள் கொழும்புத் தமிழர்களை வடக்குப்பக்கமாக விரட்டியதாகச் சொல்லலாமா? "இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய் தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் சகித்துக் கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது?நாங்கள் ஒட்டிக் கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியாவேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக் கொண்டு இருக்க, நீங்கள் தமிழருக்கு செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்று விடுகிறதே என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா? என்று அன்றைய பிரதமர் ராஜீவைக் கோபப்படுத்தாமல், புயல்பேச்சு பேசாமல் இருந்திருந்தால், அவராவது கோபப்படாமல் நல்லது ஏதாவது செய்திருப்பாரே? இன்றைய வைகோ, நெடுமாறன், நாஞ்சில் சம்பத்தை விட, அதிகமாக அன்றைய அமைச்சர்கள் காளிமுத்துவும், எஸ்.டி., சோமசுந்தரமும் பேசினார்களே! "இந்தியா படையெடுக்க வேண்டும்', ஜெயவர்த்தனாவை துõக்கிலிட வேண்டும்' என்றார்கள். காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் போட்டுக் கொடுத்தார்கள். புறநானுõற்றுப் பாடல்களை ஒப்பிக்காத, கணைக்கால் இரும்பொறையின் மறம் அறியாத எம்.ஜி.ஆர்., சிரித்துக் கொண்டே சொன்னார், ""அவர்கள் பேசியது என்னுடைய கருத்துதான். அவர்கள் அளவுக்கு எனக்கு வீரமாக பேச வரவில்லை'' பேச்சு என்பது வெறும் பேச்சுதானே என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். அதனால்தான் நீங்கள், ""மிசாவைக் காட்டி மிரட்டினால், தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்'' என்றபோதும் கவலைப்படாமல் இருந்தார். அன்று நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தீர்கள். இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்து இருக்கிறீர்கள். பிடிக்காததை யார் பேசினாலும், வேண்டாத வீரமாகத் தெரிகிறது. பல்லாயிரம் அழிவுகள் ஆன பிறகு நீங்கள் சொல்கிறீர்கள், சிங்களவனைக் கோபப்படுத்த வேண்டாம் என்று!முதலில் இங்கு உள்ள மத்திய அரசைக் கோபப்படுத்த வேண்டாம் என்றீர்கள். அதுவாவது உங்களால் தவிர்க்க முடியாத கூட்டணி தர்மம். கூடவே, சிங்களவர்களை கோபப்படுத்த வேண்டாம்' என்று இலங்கைத் துõதர் அம்சாவாக நீங்கள் பேசுவது எந்த ஊர் நியாயம்? ""வெள்ளை பாஸ்பரஸ் துõவுகிறான், கிளஸ்டர் போடுகிறான், கொத்துக் குண்டுகள் மொத்தமாக விழுந்து கொண்டிருக்கும்போது, உங்கள் அதிகாரத்தை வைத்து தடுக்கக் கூடாதா?'' என்றால், "என்னால் என்ன செய்ய முடியும், மத்திய அரசுதான் தடுக்க முடியும்'' என்று தட்டிக் கழித்தீர்கள். ""போர் நடத்துவதன் பின்னணியில் இந்தியாதான் இருக்கிறது'' என்ற போதும், மறுத்தீர்கள். அதை பிரதமர் மன்மோகன் ஒப்புக் கொண்ட போது, காதை மூடிக் கொண்டீர்கள். இப்போது "மத்திய அரசு என்ன செய்ய முடியும். சிங்கள அரசுதானே எதையும் செய்ய முடியும்' என்று பந்தை கடல் தாண்டி தட்டி விட்டீர்கள். நீதியரசர்கள் ஏழு பேரை வைத்து நீங்கள் ஆரம்பித்த இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்துக்கு இன்னும் உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இலங்கைக்குப் பொருளாதார தடை விதிக்க வேண்டும். போர்க்குற்றத்தை உலகநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை அவர்கள் டெல்லிக்கு பறந்து போய் ஜனாதிபதிக்கும் சொக்கத் தங்கம் சோனியாவுக்கும் கொடுத்தார்களே, நினைவிருக்கிறதா? இப்போதைய உங்கள் சிந்தாந்தப்படி அதுகூட தப்பானதல்லவா? கோரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் வாபஸ் வாங்கி விடுங்கள்! இலங்கைப் பிரச்னையில் உங்கள் கருத்து என்ன? ""மத்திய அரசின் கருத்துதான் என் கருத்து'' தமிழீழம் குறித்து உங்கள் கருத்து என்ன? ""இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்துதான் என் கருத்து''. பிரபாகரனை உயிரோடு பிடித்தால் எப்படி நடத்த வேண்டும்? ""ஜெயலலிதா தீர்மானம் போட்டபடி இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்'' உங்களுக்கு என்று இப்போதெல்லாம் எந்த சொந்தக் கருத்தும் கிடையாதா? "தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான், இலங்கையில் தமிழர் அரசு அமைந்தால் சந்தோஷம்' என முற்றும் துறந்த முனிவர் போல தத்துவம் பேசுவது உதவுமா? நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டது முதல் மே இரண்டாவது வாரம் வரை, எட்டு மாதங்கள் நத்தை போல நகர்ந்ததில், நசுங்கிய உயிர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம், எட்டுத்தடவை தீர்மானம் போட்டு என்ன செய்ய முடிந்தது? நாங்கள் போரின் அன்றாடத் தகவல்களை தினமும் இந்தியாவுக்குச் சொல்லி வந்தோம்' என கோத்தபய ராஜபக்ஷே சொன்ன பிறகும், காங்கிரஸைச் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்ட முடியாமல், <உங்களைப்பிடித்து இழுத்தது எது? அல்லது யார்? ""நாங்களே அடிமையாக இருக்கிறோம். ஓர் அடிமை இன்னோர் அடிமைக்கு எப்படி உதவி செய்ய முடியும்'' என்று ஈழத்தந்தை செல்வாவிடம், இங்கிருந்த தந்தை பெரியார் சொன்னதாக நீங்களும் தப்பிக்கப் பார்க்கிறீர்கள். உடல் வலியெல்லாம் தாங்கிக் கொண்டு, மூத்திரப் பையை துõக்கிக் கொண்டு கடைசி காலத்திலும் கருவறைப் போராட்டம் நடத்திய "தமிழன் அடிமை' அவர். கடைசி வரை அதிகாரம் கொண்ட பதவி எதையும் திரும்பிக் கூட பார்க்காத அடிமை அவர். ஆனால், நீங்கள் ஐந்தாவது முறையாக முதலமைச்சர். 14 ஆண்டுகள் உங்களது ஆட்கள் மத்திய லகானை சுழற்றி வந்திருக்கிறார்கள்.சோனியாக உங்களை தகப்பன் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறார். மத்திய மந்திரிகள் யார் வந்தாலும், கோபாலபுரத்தில் லேண்ட் ஆகிறார்கள். நீங்கள் அடிமை என்றால், கொத்தடிமைகளை என்னவென்று அழைக்கலாம்? அண்ணா, தனிநாடு கைவிட்ட கதையைச் சொல்லிச் சொல்லி அண்ணாவும் அப்படித்தான் என்று இன்றைய தலைமுறைக்கு காட்டிக்கொடுக்கிறீர்கள். எதற்கெடுத்தாலும் பெரியார், அண்ணா பெயரை சொல்லி ஏன் பலியிடுகிறீர்கள்? கச்சத் தீவை தாரைவார்க்கும் போது கடிதம் மட்டும் அனுப்பியதால், இன்று கண்காணிப்புக் கோபுரம் வந்து விட்டது. காவிரியில் தண்ணீர் விடுவதில் உச்ச நீதிமன்றம் தொடங்கி காவிரி ஆணையம் வரை தீர்ப்பளித்த பிறகும், "விரும்பினால்தான் தண்ணீர் த ருவோம்' என்று சொல்லும் நிலையே இன்னமும் தொடர்கிறது. தெற்காசியாவின் அதிசயமாக பென்னிகுக் அமைத்த முல்லைப் பெரியாறு அணையை மார்க்சிஸ்ட் மந்திரி குடைவைத்து தட்டிப்பார்க்கிறார், கீறல் விட்டு உள்ளதா இல்லையா என்று. அச்சுதானந்தனுக்கு ஆயிரம் தலைவலிகள் இருப்பதால், அவருக்கு கோபம் வருவது மாதிரி எதையாவது சொல்லி விடாதீர்கள். பாலாறு பிரச்னையை கிளற வேண்டாம். மாவோயிஸ்ட்டுகளை ஆந்திர அரசு அடக்கி முடித்த பிறகு, ஆற அமர பேசலாம். எந்தத் தேதியில் எந்த ஒப்பந்தம் போட்டோம் என்று மனப்பாடமாக துரைமுருகன் ஒப்பிக்க மட்டும்தான் காவிரியும் பாலாறும் முல்லைப் பெரியாறும் பயன்படப் போகிறது. ""பஞ்சாப் பாஸ்பரஸ், காஷ்மீர் கற்பூரம், அசாம் அணையாவிளக்கு, ஈர விறகு இங்குள்ள தமிழினம்'' என்று புதுக் கல்லுõரி விழாவில் 20 ஆண்டுகளுக்கு முன் புது விளக்கம் கொடுத்தவர் நீங்கள். விறகை ஈரமாகவே வைத்திருக்கலாம் என்று இப்போது நீங்களாகவே சொல்கிறீர்களே... எதை எதில் சேர்ப்பது? கடைசியாக இன்னொன்றும் நினைவுச் சரத்தில் நெருடுகிறது.... ஈழத்தில் இருந்து அகதியாக வெளியேறி நிர்க்கதியாக நின்ற ஒரு சிறுவனை, கால் நுõற்றாண்டுக்கு முந்தைய ஒரு தி.மு.க., மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில், "நானே இவனை மகன் போல வளர்க்கப் போகிறேன். என்னுடனே இவன் இருப்பான்' என்று அறிவித்தீர்கள். அந்தக் கடல் அலைப்பேச்சில் மாநாட்டு மைதானமே கசிந்து மிதந்ததே! அந்த பரிதாப ஜீவன் இப்போது எங்கே, தலைவரே? அன்புடன், ஈரவிறகாக இருக்க முடியாத, அரசியல் அறியாத் தமிழன்! நன்றி ஆனந்தவிகடன்.